Women Empowerment குறித்து எழுதப் போவதாய் சமூக வலைதளங்களில் அறிவிப்பைக் கொடுத்த சில நிமிடங்களுக்குள் எங்களுக்காகவும் எழுதுங்களேன் என பல ஆண்கள் வேண்டுகோள் வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் என் எழுத்துக்கும், கருத்துக்களுக்கும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள்.
பெண்களின் முன்னேற்றத்துக்காக எழுதும்போது அதில் ஆணும் அடக்கமே. எனவே இருபாலருக்கும் பொதுவாகவேதான் இந்த கான்செப்ட் என பதில் கொடுத்தேன்.
சென்ற வருடம் ஒரு பத்திரிகையில் என்னை சுயமுன்னேற்றக் கட்டுரைத் தொடர் எழுதக் கேட்டிருந்தார்கள். தொலைபேசியில்தான் டிஸ்கஸ் செய்தோம்.
**பெண்களே காரணமா?**
‘இன்று கலாச்சாரம் கெட்டு குட்டிச் சுவராய் சென்றுகொண்டிருக்கிறது… பெண் குழந்தைகளுக்கு நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கற்றுக்கொடுக்கும் வகையில் கட்டுரை அமைந்தால் சிறப்பாக இருக்கும். அவர்கள் அணிகின்ற உடை, பழகும் விதம் இவற்றால்தான் ஆண் பிள்ளைகள் தவறாக நடக்கிறார்கள். பெண்கள் சரியாக இருந்தால் வீடு, நாடு, சமுதாயம் நன்றாக இருக்கும்…’
இப்படியாக ஆண்கள் செய்கின்ற தவறுகள் அனைத்துக்கும் பெண்களே காரணம் என்ற நோக்கில் அமைந்த அவர்களின் கருத்துக்களை சில நிமிடங்கள் கேட்டதற்கே மனம் கனமானது.
ஒருநொடிகூட சிந்திக்காமல் தன்னிச்சையாக பதில் சொன்னேன்.
‘ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து வாழும் அமைப்புதான் சமுதாயம். அதில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் என்ன அறிவுரை சொல்வது? அதுவும் காலம் காலமாய் பெண் குழந்தைகளுக்குத்தான் அறிவுரை சொல்லி சொல்லியே வளர்த்து விட்டாயிற்றே… இப்போது ஆண் குழந்தைகள் வளர்ப்பில்தான் அதிக கவனம் தேவை… இருபாலருக்கும் பொருந்துகின்ற வகையில் எழுதுவதாக இருந்தால் நான் எழுதுகிறேன்…’
ஆணைப் பற்றிப் பேசும்போது அதில் பெண்களும், பெண்ணைப் பற்றிப் பேசும்போது அதில் ஆண்களும் இல்லாமல் எப்படிப் பேச முடியும். சாத்தியமில்லையே.
இந்தத் தொடரில் பெண்ணியம் குறித்துப் பேசப்போவதில்லை. ஆணாதிக்கம் குறித்தும் விவாதிக்கப் போவதில்லை. இரு பாலருக்கும் பொதுவாக உள்ள வாழ்வியல் கருத்துக்களை, முதல் தலைமுறை பிசினஸ் பெண்ணாகக் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நான் எதிர்கொண்ட சவால்களும் சாதனைகளும் கொடுத்த அனுபவங்களினூடே கலந்து தரப்போகிறேன்.
ஓர் ஆண்மகன் கல்வி கற்றால் அதனால் அவனுக்கு மட்டுமே பயன்; அதுவே ஒரு பெண் கல்வி கற்றால் அது அவள் குடும்பத்துக்கே பயன்படும் என்று சொல்வதுண்டு.
**பன்மடங்காகப் பெருக்கும் கலை**
கல்வியை மட்டுமல்ல பொதுவாகவே பெண்கள் தங்களிடம் கொடுக்கப்படும் எதையுமே அப்படியே வைத்திருப்பதில்லை. இதை பிரிட்டீஷ் நாவலாசிரியரும், கவிஞருமான ‘வில்லியம் கோல்டிங்’ மிக அழகாகச் சொல்லியுள்ளார். பெண்களைப் பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் ஆண்களை மட்டும் அல்ல பெண்களையே யோசிக்க வைக்கும் விதமாக உள்ளன.
‘பெண்கள் ஆணுக்கு இணை என்று சொல்லிக்கொள்வதுகூட தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதைப் போன்ற உவமானம்தான். பெண்கள் ஆண்களைவிடப் பல மடங்கு உயர்வானர்கள். அவளிடம் கொடுக்கப்படும் எதையும் உயர்வானதாக்கி உருவாக்கிக்கொடுக்கும் சக்தி வாய்ந்தவள்.
நீங்கள் மளிகை சாமான்கள் வாங்கிக்கொடுத்தால் அருமையான விருந்து சமைத்துக் கொடுப்பாள்.
நீங்கள் கற்களால் ஆன வீட்டை அமைத்துக் கொடுத்தால் அன்பும், குதூகலமும் தவழும் இல்லமாக மாற்றி அமைத்துக் கொடுப்பாள்.
உங்கள் புன்னகையைக் கொடுத்தால், அவள் தன் இதயத்தைக் கொடுப்பாள்.
உங்கள் விந்தணுக்களைக் கொடுத்தால் கருவாக்கி பொக்கிஷமாகக் காப்பாற்றிக் குழந்தையாக்கித் தருவாள்.
இப்படி அவளிடம் கொடுக்கப்படும் எதையும் அவள் அப்படியே வைத்திருப்பதில்லை. அதைப் பல மடங்காகப் பெருக்கித் திருப்பித்தரும் வல்லமை வாய்ந்தவள்.
ஆகவே, அவளிடம் குப்பையைக் கொடுத்தால் அவளிடம் இருந்து டன் டன்னாகக் கழிவைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள்…’
பெண்களிடம் காண்பிக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் அவளிடமிருந்து திரும்ப எப்படிப் பெரிதாக வளர்ந்து வெளிப்படும் என்பதை விவரிக்க இதைவிட அருமையான சிந்தனையை இதுவரை நான் படித்திருக்கவில்லை.
இந்தக் கவிஞர் வாழ்ந்த காலம் 1911-1993. இந்தக் காலகட்டத்தில் ஒரு பிரிட்டிஷ் கவிஞர் பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார் எனும்போதே அவர் காலத்திலும் அவரது நாட்டிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன என்றுதானே அர்த்தம்.
இதற்கு முன்னரே 1882-1921 காலகட்டத்தில் வாழ்ந்த நம் பாரதி பெண்களின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்துச் சென்றுள்ளதை அறியாதவர் எவருமில்லை.
கற்பு நிலை என்று சொல்லவந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பு இல்லை, காண் என்று கும்மியடி.
**பெண்களின் நிலை மாறியிருக்கிறதா?**
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் ஆணுக்குப் பெண் சமமாக உள்ள இந்த 21ஆம் நூற்றாண்டிலாவது பெண்களின் நிலை மாறியிருக்கிறதா என ஆதாரபூர்வமாக அறிந்துகொள்ள நாங்கள் ஒரு ஆய்வையே மேற்கொண்டோம்.
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் சூழலுக்கு ஏற்ப பல்வேறு தரப்பு மக்களுக்கும் எங்களால் ஆன உதவிகளைச் செய்துவருகிறோம்.
ஒவ்வொரு வருடமும் பெற்றோர், ஆசிரியர், ஓவியர், எழுத்தாளர் என ஒவ்வொரு தரப்பினரில் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்தும் கெளரவிக்கிறோம்.
சென்ற வருடம் சென்னையில் விவேகானந்தா எஜுகேஷன் சொஸைட்டியின் கீழ் இயங்கிவரும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு ஒரு கட்டுரைப் போட்டி அறிவித்திருந்தோம். குழந்தைத்தனம் விலகிப் பருவ மாற்றம் ஏற்படும் பதின்ம வயதில் உள்ள 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டுமே இந்தப் போட்டி.
**அம்மா என்னும் மனுஷி…**
அம்மாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும், பெண்களைப் பற்றியப் புரிதல் மேம்பட வேண்டும், ஆண் பெண் புரிதல் இன்னும் இணக்கமாக வேண்டும், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இணக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும்…
அம்மா என்பவள் வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போடவும், உடைகளைத் துவைத்து இஸ்திரி செய்யவும், படிப்பு சொல்லித்தரவும், வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் சம்பாதித்துக் கொண்டுவரவும் மட்டுமே இயங்குகின்ற ஒரு ஜீவன் என்ற உணர்வில் இருந்து வெளிவந்து அம்மாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கிலும்…
இதுபோன்ற உணர்வுபூர்வமான உண்மைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் கல்வியும், புரியவைக்கும் விதத்தில் வீடுகளும் அமையப்பெற்றால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நோக்கிலும்…
‘அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது நீ என்ன மாதிரியான உணர்வில் இருந்தாய்?’ என்ற தலைப்பைக் கொடுத்து எழுதச் சொன்னோம். இது குறித்து அம்மாவிடமே கேட்டறிந்து எழுதி அவரவர்கள் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தோம்.
இந்தப் போட்டியில் 300 மாணவ மாணவிகளுக்கும் மேல் கலந்துகொண்டார்கள். கட்டுரைப் போட்டிக்காக வார்த்தை அலங்காரங்களைத் தேடி எழுதாமல் பெற்றோரிடம் கலந்தாலோசித்து சிறப்பாக எழுதிய 11 மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்தோம்.
**வீட்டுக்குள் வளரும் பேதம்**
இந்த நிகழ்ச்சி ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் என்ன மனநிலை, பெண் குழந்தை பிறந்தால் என்ன மனநிலை என்பதற்காக எடுத்த ஒரு சர்வே போல ஆகிவிட்டது.
பெண் குழந்தைகள் கருவில் இருக்கும்போதும், பிறந்தவுடனேயும், வளரும்போதும் வளர்ந்த பிறகும் சந்திக்கும் பிரச்சினைகளை இனியும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. நாமும் அனுபவித்திருப்போம். இன்னும் அதிகமாக அக்கம் பக்கம் பார்த்திருப்போம்; கேள்விப்பட்டிருப்போம். மீடியாக்கள் வாயிலாக பெரிய அளவிலும் பேசக் கேட்டிருப்போம்.
அவை அத்தனையின் மொத்த வடிவத்தையும் இந்த மாணவ, மாணவிகளின் கட்டுரைகளில் காண முடிந்தது.
‘இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்துவிட்டதே என என் அப்பாவுக்கு மிகவும் வருத்தம். அம்மாவுடன் கோபித்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டாராம் என்னைப் பார்க்காமலேயே. ஒரு மாதம்வரை அம்மாவுடன்கூட பேசவே இல்லையாம்… இப்போதும் என் அக்காவைத்தான் அப்பாவுக்குப் பிடிக்கும். என்னைப் பிடிக்காது…’
‘முதல் குழந்தையே பெண்ணாகப் பிறந்துவிட்டதால் என் பாட்டி என்னை ஒரு வருடம்வரை தூக்கவே இல்லையாம்….’
‘முதல் குழந்தை ஆணாக இருப்பதற்கு திருப்பதிக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்து ஆண் குழந்தைக்காகக் காத்திருந்த என் பெற்றோர் நான் பெண்ணாகப் பிறந்துவிட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனராம். எனக்கு தம்பி பிறந்தபோதுதான் வீடே கலகலப்பாக இருந்ததாம்…’
எழுத்துகளாக வெளிவந்த இந்தப் பெண் குழந்தைகளின் உணர்வுகளில்தான் எத்தனை ஏக்கம். அவற்றைப் படிக்கும்போதே உள்ளம் கரைந்து கண்கள் குளமாயின.
இந்த நூற்றாண்டில்கூடப் பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்பதே வேதனையின் உச்சம்தான்.
நிம்மதியாக வாழத்தான் ஆண் பெண் என இருபாலரும் படிக்கிறோம், வேலைக்குச் செல்கிறோம், சம்பாதிக்கிறோம்… அதை நோக்கியே ஓடுகிறோம். ஆனால் நிம்மதியாக வாழ்கிறோமா என யோசிக்கையில் ‘இல்லை’ என்ற பதிலே கிடைக்கிறது.
யோசிப்போம்!
ஆன்லைனில் படிக்க… https://minnambalam.com/k/2018/11/09/22
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
மின்னம்பலம் டாட் காமில் வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 1