2017-ம் ஆண்டு எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. எங்கள் நிறுவனத்தில் சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்பு நிறைய உண்டு. அதற்கு, என் சிறு வயதில் இருந்தே எனக்குள் இருந்த படைப்பாற்றலும் கற்பனைத்திறனும் ஒரு காரணம்.
அதை விதைத்தது என் அம்மாவின் வாசிப்புப் பழக்கம். என் அம்மா நிறைய படிப்பார். அது இது என்றில்லாமல் எது கிடைத்தாலும் படிப்பார். மளிகை சாமான் கட்டி வரும் செய்தித்தாளைக்கூட விடமாட்டார், படித்துவிடுவார். சாப்பிடும்போதும் கையில் ஏதேனும் ஒரு புத்தகம் இருக்கும்.
இத்தனைக்கும் என் அம்மாவும் அப்பாவும் அந்த காலத்திலேயே இரவு பகல் என 24 மணிநேர சுழற்சி வேலையில் தொலைபேசித் துறையில் பணிபுரிந்து வந்தனர். மழை, பனி, புயல், வெள்ளம் எதுவாக இருந்தாலும் அலுவலகம் செல்ல வேண்டிய பொறுப்பான பதவியில் இருவருமே இருந்ததால் எந்தக் காரணத்தைச் சொல்லியும் விடுப்பு எடுத்து வீட்டில் தங்க முடியாது.
அப்பாவுக்கு பகல் ஷிஃப்ட் பணி என்றால், அம்மாவுக்கு இரவு நேர ஷிஃப்ட் பணி. அதுப்போல அம்மாவுக்கு பகல் ஷிஃப்ட் என்றால் அப்பா இரவு ஷிஃப்ட் பணி. இப்படி இருவரும் மாறிமாறி வேலைக்குச் சென்று உழைத்ததைப் பார்த்து வளர்ந்ததால் எங்களுக்கு உழைப்பு என்பது வாழ்க்கையோடு விரும்பி இணைந்த ஒரு விஷயமாகவே மாறிப்போனது.
இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் என் அம்மா படிப்பதை மட்டும் என்றுமே விட்டதில்லை. தேடித்தேடிப் படிப்பதில் அவரை மிஞ்ச முடியாது. தான் படித்ததில் பிடித்ததை கட் செய்து வைப்பார்.
விடுமுறை தினங்களில் அப்பாவுடன் அமர்ந்து அவற்றை எங்கள் கைகளால் பைண்டிங் செய்வதே அந்த நாளில் எங்கள் ‘சம்மர் கோர்ஸ்’. அம்மாவின் படிக்கும் ஆர்வத்துக்கு அப்பா என்றுமே தடையாக இருந்ததில்லை.
என் அம்மாவின் புத்தகங்களை சேகரிப்பதற்காக, சுவர் உயர மர பீரோ ஒன்றை செய்து சர்ப்ரைஸாக பரிசளித்தார். அதுபோன்ற அலமாரிகளை பொதுவாக நூலகங்களில் மட்டுமே பார்க்கமுடியும்.
கோகுலம், ரத்னபாலா, அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவை எங்களை வளர்த்த புத்தகங்கள். இன்றும் அம்மா சேகரித்து எங்கள் கைகளால் பைண்டிங் செய்த சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை போன்றவை எங்கள் வீட்டு லைப்ரரியில் உள்ளன.
இன்றும் அச்சில் வரும் செய்தித்தாள்கள் மட்டுமில்லாமல் ஆன்லைனிலும் எதையும் விடுவதில்லை. அம்மாவும் அப்பாவும் ஒருவர் மாற்றி ஒருவர் அமெரிக்காவில் இருக்கும் என் சகோதரன் சகோதரி வீட்டிற்கு செல்வதுண்டு. அப்போது ஆன்லைனில் படிக்க வசதியாக பெரும்பாலான பத்திரிகைகளுக்கு ஆன்லைன் சந்தா கட்டி இருக்கிறோம். எனவே பத்திரிகை செய்தித்தாள் போன்ற அனைத்தையுமே ஆன்லைனில் படிப்பதோடு அவற்றில் தேவையானதை புக்மார்க் செய்தும் தன் இமெயிலுக்கு ஃபார்வேர்ட் செய்தும் சேகரித்து வைக்கிறார். தகவல்களை சேகரிக்கும் வழக்கம் கால மாற்றத்துக்கு ஏற்ப வேறு வடிவம் எடுத்திருக்கிறதே தவிர அந்த வழக்கத்தை அவர் விடவே இல்லை. அதுதான் அவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தினமும் கிண்டிலில், ஐபேடில் புத்தகங்களை வாசிக்கிறார்.
அப்பா அம்மா இருவருக்கும் தனித்தனியாக பிளாக் இருக்கிறது. இருவருமே அதில் அவர்கள் விருப்பமானதை எழுதுகிறார்கள். அவர்கள் அவர்களுடைய ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் ஷேர் செய்கிறார்கள்.
புத்தகங்களுடனேயே வளர்ந்ததால் எங்களுக்குள் இருந்த கிரியேடிவிடியும் வளர்ந்தது. வாசிப்பு கற்பனையின் உச்சத்தை எங்களுக்கு காட்டியது. எழுத்து, கார்ட்டூன், ஓவியம் என ஆளுக்கொரு துறையில் சிறப்புடன் இருக்கிறோம்.
‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பதற்கு ஏற்ப ‘என் திறமை எழுத்து’ என்பதை 12 வயதில் வெளியான கதை நிரூபித்தது. அதன் பின்னர் அந்தத் திறமையை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நான் அதையே என் மூச்சாகக் கொண்டு என் படிப்புடன் இணைத்து என் திறமையையும் வளர்க்கத் தொடங்கினேன்.
அப்போது என் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப் செய்துகொடுத்து நான் பத்திரிகைகளுக்கு அனுப்பும் படைப்புகளில் ரப்பர் ஸ்டாம்ப்பினால் பெயரை அச்சடித்து அனுப்பும் வழக்கத்தை உண்டாகினார். அதுபோலவே என் தம்பி, தங்கைகளுக்கும் செய்துகொடுத்தார். எங்கள் படைப்புகள் பல முன்னணி பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.
தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து 5 மணிவரை எழுதுவேன். அதன்பின்னர் 1 மணிநேரம் தூங்கி எழுந்து படிப்புக்கு நேரம் ஒதுக்கி… இதுதான் நான் கல்லூரி முடிக்கும்வரை என் தினசரி வேலையாக இருந்தது.
அன்றாடம் பள்ளி / கல்லூரியில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து சுவையாக எழுதுவேன். இறுதியில் அது கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ ஏதேனும் ஒரு வடிவில் வந்துநிற்கும். பின்னர் அதை சுயமுகவரியிட்ட கவருடன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பேன். பெரும்பாலும் திரும்பி வரும். திரும்பி வருகின்ற படைப்புகளை மேம்படுத்தி சளைக்காமல் மறுபடியும் அனுப்புவேன். இதுவே என் சுவாரஸ்யமான ரொட்டீனாக இருந்தது.
தினமும் பள்ளி / கல்லூரியில் இருந்து திரும்பும்போது போஸ்ட் பாக்ஸில் ஏதேனும் வந்திருக்கிறதா என பார்ப்பது ஒரு சுகமான அனுபவமாக அமைந்தது. ஒன்று படைப்புகள் திரும்ப வந்திருக்கும் அல்லது படைப்புகள் பத்திரிகையில் அச்சில் வந்திருக்கும். இரண்டில் ஒன்று நிச்சயம். அதுவே என் சுவாரஸ்யம். பொழுதுபோக்கு. அன்றாடப் பணிகளுள் ஒன்று.
இப்படி பேனா பிடித்து எழுதத் தொடங்கிய என் எழுத்துப் பயணம் கம்ப்யூட்டரில், ஆன்லைனில், சமூகவலைதளங்களில் என வளர்ந்து மொபைல் ஆப்பில் வந்து நிற்கிறது.
ஒன்று தெரியுமா என் படைப்புகள் அனைத்தையும் இறுதி புரூஃப் பார்ப்பது என் அம்மா… அம்மா நிறைய படிப்பதால் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் போன்றவை சட்டென கண்டுபிடிப்பார். (இன்றும்…)
அப்பா perfectionist. எல்லா விஷயங்களிலும். என் படைப்பில் ஒவ்வோர் எழுத்தும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என எண்ணுபவர். மிகச் சிறந்த எடிட்டர். நான் எழுதுவதில் ஒருசில இடங்களில் சில வார்த்தைகளை சேர்த்து அந்த வரிக்கு புதுப்பரிணாமம் கிடைக்கும் அளவுக்கு எடிட் செய்வதில் திறன் வாய்ந்தவர். இன்றுவரை என் படைப்புகள் ஒவ்வொன்றும் என் அப்பா அம்மாவின் பார்வைக்கு சென்ற பிறகே பொதுவில் பதிவாகிறது. (இன்றும்…)
என் எழுத்துத் திறமையைப் பார்த்து என் பள்ளி ஆசிரியர்களும், கல்லூரி பேராசிரியர்களும் உன் அப்பா, அம்மா தமிழ் அறிஞர்களா என கேட்டிருக்கிறார்கள்.
காம்கேர் பிராண்ட் ஆகியதற்குக் காரணம் வாசிப்பும், எழுத்தும், கற்பனையும்தான்!
என் கற்பனைத் திறனும், படைப்பாற்றலுமே என்னை பிசினஸ் செய்ய வேண்டும் என்று தூண்டியது என்று சொன்னால் அது ஆச்சர்யமான விஷயம் தான்.
நல்ல தாய் தந்தை என்பதையும் மீறி, நல்லத் தோழமையோடு பழகியதால், சிறிய வயதில் இருந்தே எனக்கு என் பெற்றோரைத் தவிர என் வயதை ஒத்த நண்பர்கள் குறைவு. அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் மற்றும் வெளி உலகில் என்னை பாதிக்கும் விவரங்களை காகிதத்தில் எழுத ஆரம்பித்தேன்.
பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன், இந்திரா காந்தி போன்றவர்களின் சாதனைகளும் அவர்களது புகைப்படங்களும் எனக்குள் இருந்த சாதனைத் ‘தீ’-க்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல அமைந்தது.
இவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க வேண்டும். எனது பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
என் கற்பனைக்கு வடிவம் கொடுக்க காம்கேர் உருவானது. என் பெயரை ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்று மாற்றியமைத்தேன். என்னையே நிறுவனமாக்கி உழைக்கத் தொடங்கினேன். இன்று என் படைப்புகள் அனைத்தும் என் பெயரிலும், என் நிறுவனம் பெயரிலும் தான் வருகின்றன. என் கனவு பலித்தது. என் பெயரே என் நிறுவனத்துக்கு விளம்பரம் ஆனது. என் பெயர் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்துள்ளது.
காரணம் வாசிப்பும், எழுத்தும், கற்பனையும்தான்!
12-வயதில் முதல் கதை!
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் கோகுலத்தில் எடிட்டராக இருந்தபோது, என் 12 வயதில் நான் எழுதிய ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற என் முதல் கதை வெளியானது. இந்தக் கதைதான் என் கற்பனைத்திறனுக்கும், என் கிரியேட்டிவிடிக்கும் அடித்தளம்போட்டு நம்பிக்கை ஏற்படுத்தியது.
தந்தையை இழந்த ஒரு சிறுவனின் அம்மா மருத்துவமனையில் நர்ஸ் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். அந்தச் சிறுவனுக்கு அம்மா நர்ஸ் வேலை பார்ப்பது பிடிக்கவில்லை. தினம் தினம் அவனோடு போராட்டம்தான் அந்தத் தாய்க்கு. ஒருநாள் அவனை வலுகட்டாயமாக தன்னுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு நோயாளிக்கும் அவர் பணிவிடை செய்து முடித்தவுடன், அவர்கள் நன்றியுடனும், பாசத்துடனும் அம்மாவிடம் பேசுவதை பார்த்துக்கொண்டே இருக்கிறான் அந்தச் சிறுவன். பணி முடிந்தவுடன் பீச்சுக்கு அழைத்துச் சென்று எந்த வேலையும் இழிவானதல்ல, அதிலும் குறிப்பாக பிறருக்கு பணி செய்யும் நர்ஸ் வேலை எவ்வளவு உயர்வானது என்பதை அழகாக எடுத்துச் சொல்லும்போது அந்தச் சிறுவன் புரிந்துகொள்வதாக அந்தக் கதையை முடித்திருப்பேன்.
என் பெற்றோர் சிறுவயதில் கற்றுக்கொடுத்ததை அந்த வயதிலேயே என் வயதை ஒத்தவர்களுக்காக எழுதிய நான், இன்று தினந்தோறும் கற்றுக்கொள்ளும் தொழில்நுட்பத்தை, வாழ்வியலை இந்த சமுதாயத்துக்கு பதிவாக்கி வருகிறேன்.
பரபரப்பான என் தொழில்நுட்பப் பயணத்தில், எழுத்துப் பணியையும் தொடர்ச்சியாக செய்வதற்கு விதைபோட்ட இந்தக் கதையையும், இதற்கு படம் வரைந்த ஓவியர் ஆழியையும், கோகுலம் பத்திரிகையையும், அப்போது அதன் ஆசிரியராக இருந்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா?
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நெருங்கிய நண்பரான புதுக்கோட்டையைச் சேர்ந்த வடமலை அழகன் என்ற புனைப்பெயர் கொண்டவரும், டி.வி.எ.ஸ். நிறுவனத்தில் நாற்பதாண்டு காலம் நற்பணியாற்றியவரும், குழந்தை இலக்கியப் பங்களிப்புக்காக பல விருதுகளைப் பெற்றவரும், எங்கள் பத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக ஸ்ரீபத்மகிருஷ் விருதையும் பெற்றவருமான திரு. பி.வெங்கடராமன் அவர்கள் மூன்றுதலைமுறை குழந்தை இலக்கிய ஆர்வலர்களையும், படைப்பாளிகளையும் கண்டு ஊக்கமளித்து அவர்களோடு சேர்ந்து தானும் தன் சீரிய பங்களிப்பை அளித்தவர்.
இவர் எழுதிய ‘சிறுவர் சிறுமியருக்கான சாலை விதிப்பாடல்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாக பப்ளிஷ் செய்தோம். இதை ‘சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் சேலம் கீர்த்தனாலயா இசையில் எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாக தயாரித்து வெளியிட்டோம்.
இவர் விருப்பப்படி குழந்தைக் கவிஞரின் தேர்ந்தெடுத்தப் பாடல்கள் சிலவற்றை ’பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற கார்ட்டூன் அனிமேஷன் சிடியாக தயாரித்தோம்.
முதல் அனிமேஷன் படைப்பு!
சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்த நேரம். எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’.
இரண்டு குழந்தைகள் நகரத்தில் இருந்து கிராமத்தில் வசிக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அந்த தாத்தா பாட்டி தங்கள் பேரன் பேத்திகளை ஒவ்வொரு இடத்துக்கு அழைத்துச் சென்று கதைகள் சொல்வதைப்போல அமைத்திருந்தோம்.
சிடிக்கள் குறைந்தபட்சம் 300 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நாங்கள் 99 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியதாலும் நம் நாட்டு கலாச்சாரப் பண்பாட்டை வலியுறுத்தும் நல்ல தரமான தயாரிப்பாக இருந்ததாலும் அந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் எங்கள் சிடி, விற்பனையில் சாதனை படைத்தது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் எங்கள் அனிமேஷன் படைப்புகளை வைத்து ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பார்வையாளர்கள் அனைவரும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள். அதில் பெரும்பாலானோர் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் பெருமிதத்தோடு தாத்தா பாட்டி கதைகள் சிடியை காட்சிப்படுத்தினேன். அது குறித்த என் அனுபவங்களையும் பேசினேன்.
அதுவரை அமைதியாக இருந்த பேராசிரியர்கள் என்னை உலுக்கி எடுக்காத குறைதான். கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள்.
‘அது எப்படி நீங்கள் தாத்தா பாட்டியை கிராமத்தில் வசிப்பதாகவும், பெற்ற பிள்ளைகள் நகரத்தில் வசிப்பதாகவும் காட்டி இருக்கிறீர்கள்… அப்போ தனிக்குடித்தனம்தான் சிறந்தது என்பதை இப்படி நாசூக்காகச் சொல்கிறீர்களா?’
‘பிள்ளைகளோடுதானே அப்பா அம்மா இருக்க வேண்டும். நீங்கள் அப்பா அம்மாவை கிராமத்தில் அனாதையாய் விட்டுவிட்டு பிள்ளைகள் நகரத்தில் வசிப்பதுபோலவும், பேரன் பேத்திகள் விடுமுறைக்கு வருவதுபோலவும் அமைத்திருக்கிறீர்களே?’
‘தனிக்குடித்தனத்தை வலியுறுத்தி கூட்டுக் குடித்தனத்தை எதிர்க்கும்விதமாக இருப்பது வருந்தத்தக்கது… கொஞ்சமாவது சமுதாய நல்லெண்ண நோக்கில் செயல்படுங்கள்…’
இப்படி நான் ஏதோ சொல்லக் கூடாத விஷயத்தை சொல்லி இருப்பதைப்போலவும், தவறான விஷயத்தை கான்செப்ட்டாக எடுத்துக்கொண்டதைப் போலவும் அவர்கள் விவாதித்தபோது முதலில் கொஞ்சம் பயந்துதான் போனேன். ஆனால்… சில நிமிடங்களில் சுதாகரித்துக்கொண்டேன்.
ஒரு பேராசிரியரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.
‘சார்… உங்களோடு பிறந்தவர்கள் எத்தனை பேர்…’
‘3 பேர்…’
‘அதில் நீங்கள் சென்னையில் பணி புரிகிறீர்கள்… மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள்?’
‘ஒரு தம்பி பட்டுக்கோட்டையில் கடை வைத்திருக்கிறார்… அண்ணா கிராமத்தில் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார்…’
‘அப்பா அம்மா எங்கிருக்கிறார்கள்’
‘என் அண்ணாவுடன் கிராமத்தில்…’
‘அப்போ நீங்களும், உங்கள் தம்பியும் விடுமுறைக்கு உங்கள் பிள்ளைகளோடு கிராமத்துக்குச் செல்வீர்கள்தானே. ஒரு வீட்டில் 3 பேர் இருந்தால் மூன்று பேருடனும் அந்த அப்பா அம்மா இருக்க முடியாதல்லவா? அதே கான்செப்ட்டில்தான் நான் அந்தக் கதையை அமைத்திருக்கிறேன்…’ என்று சொன்னபோது சபை அமைதியானது.
தொடர்ச்சியான அனிமேஷன் பயணம்!
இந்த அனிமேஷன் படைப்புக்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அதற்கும் பெருத்த வரவேற்பைப் பெற்றது.
அடுத்தடுத்து இராமாயணக் கதைகள், முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன், தினம் ஒரு பழம், தமிழ் கற்க, மழலை முத்துக்கள், மழலை மெட்டுக்கள், மழலைச் சந்தம் என எங்கள் அனிமேஷன் படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன.
அனிமேஷனில் கந்தர் சஷ்டிக்கவசம் பாடலை அனிமேஷன் மற்றும் அதன் விளக்கத்துடன் தயாரித்தபோது அது எங்கள் ஆகச்சிறந்தப் படைப்பானது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும்விதத்தில் நாங்கள் உருவாக்கியிருந்த மல்டிமீடியா படைப்புகளான திருவாசகம், திருக்குறள் போன்றவை எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அடையாளமாகிப் போனது.
மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றில் தொடங்கிய கல்வித்துறைப் படைப்புகளுக்கான எங்கள் அனிமேஷன் பயணம் பள்ளி மற்றும் கல்லூரி பாடதிட்டங்களுக்காக இன்றுவரை பயணப்பட்டு வருகிறது.
அச்சில் (Print) தொடங்கி ஆப்ஸில் (Apps) தொடரும் பயணம்!
குழந்தையாக இருந்தபோது அப்பா அம்மாவிடம் கதை கேட்டு வளர்ந்த நான், சிறுமியாக இருந்தபோதே கதை, கவிதை, கட்டுரை எழுத ஆரம்பித்து பள்ளி கல்லூரி காலங்களில் என் வயதுக்கேற்ப எழுதி கல்விக் காலகட்டம் முடிவடைவதற்குள்ளேயே 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் மூலம் ‘கே. புவனேஸ்வரி, சிறந்த படைப்பாளி’ என இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தப்பட்டேன்.
காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவத்தைத் தொடங்கி ஒரு நிர்வாகியாக என் தொழில்நுட்பப் பயணத்தைத் தொடங்கிய பின்னர், காம்கேர் புவனேஸ்வரியாக என் படைப்புத் திறனையும் கற்பனைத் திறனையும் தொழில்நுட்பத்துடன் இணைத்து அச்சுப் புத்தகங்கள், இ-புக்ஸ், அனிமேஷன் சிடிக்கள், கார்ட்டூன் படைப்புகள் என வெளியிடத் தொடங்கி இன்று குழந்தைகளின் கைகளில்கூட கட்டாயமாக வீற்றிருக்கும் மொபைலில் கதைசொல்லி ஆப்ஸ்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம். விரைவில் அந்த முயற்சியும் வெற்றியடையும்.
என்
தொழிநுட்பப் பயணத்தை
குழந்தைகளுக்காக
குழந்தைகளோடு குழந்தைகளாக
குழந்தைகளுடன் இணைந்து
செயல்படுத்த முடிவதில்
குழந்தைகளுக்கே உரிய கொண்டாட்ட மனதுடன்
இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 14, 2018