சமீபத்தில் ஆங்கிலத்தில் ‘கௌர் கோபால் தாஸ்’ என்பவரின் தன்னம்பிக்கை உரை வீடியோவை பார்த்தேன்.
காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் ‘Fresh Vegetables Sold Here’ என்ற விளம்பரப் பலகையுடன் தன் வியாபாரத்தைத் தொடங்கினார்.
அந்த வழியாகச் சென்ற ஒருவர் வியாபாரியிடம், ‘உங்கள் காய்கறிகள் புத்தம் புதிதாகத் தானே இருக்கிறது. அதற்கு எதற்கு விளம்பரம்… எனவே Fresh என்ற வார்த்தையை எடுத்து விடலாமே’ என்றார்.
வியாபாரி அப்படியே செய்ய, இப்போது விளம்பரப் பலகையில் ‘Vegetables Sold Here’ என்று மட்டும்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த மற்றொரு நபர், ‘நீங்கள் காய்கறிகள்தான் விற்பனை செய்கிறீர்கள். பழங்கள் விற்பனை செய்யவில்லை என பார்த்தாலே தெரிகிறது. பிறகு எதற்கு Vegetables என்ற வார்த்தை… அதை எடுத்து விடலாமே…’ என்று சொல்ல வியாபாரியும் அப்படியே செய்கிறார்.
இப்போது விளம்பரப் பலகையில் ‘Sold Here’ என்ற இரண்டு வார்த்தைகள் மட்டும்.
சில நிமிடங்களில் வயதில் முதிர்ந்த பெண்மணி ஒருவர் அங்கு வர, ‘நீங்கள் வியாபாரம் செய்வதற்காகத்தான் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்… பிறகு எதற்கு Sold என்ற வார்த்தை. அதை நீக்கிவிடலாமே…’ எனச் சொல்ல வியாபாரியும் அந்த வார்த்தையை அழித்துவிடுகிறார்.
இப்போது விளம்பரப்பலகையில் ‘Here’ என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும்.
அப்போது அங்கு வந்த ஒரு பள்ளிச் சிறுவன் ‘நீங்கள் இங்குதான் அமர்ந்திருக்கிறீர்கள்… அங்கு அமரவில்லை என எல்லோருக்கும் தெரியும். பிறகு எதற்கு Here என்ற வார்த்தை’ என கிண்டலாகச் சொல்ல வியாபாரி அந்த ஒரு வார்த்தையையும் அழித்துவிடுகிறார்.
இப்போது விளம்பரப்பலகை சுத்தமாக வெற்றுப் பலகையாக.
அப்போது அங்கு வந்த ஒருவர், ‘என்னப்பா முட்டாள்தான் இப்படி அழகான போர்டை எதுவுமே எழுதாமல் அப்படியே வைத்திருப்பார்கள். ஏதேனும் எழுதி உன் காய்கறிகளை விற்பனை செய்ய முயற்சி செய்…’ என்கிறார்.
இப்படித்தான் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நமக்கு அவரவர்கள் பார்வையில் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவார்கள். பெரும்பாலும் அவர்களின் நோக்கமும் நல்ல எண்ணத்துடன்தான் இருக்கும்.
இப்படி நாம் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்கும் சமயத்தில் நாம் என்ன நோக்கத்துடன் செயல்பட விருப்பப்பட்டோமோ அதில் இருந்து திசைமாறிச் செல்ல வாய்ப்புகள் உண்டு.
எனவே மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்போம். அவற்றை அலசி ஆராய்ந்து அவற்றில் எதைஎதையெல்லாம் நம் பாதையில் நாம் செல்ல பயன்படுத்த முடியுமோ அவற்றை மட்டும் பயன்படுத்துவோம்.
மற்றவர்களின் ஆலோசனைகளினால் நாம் நம் நோக்கத்தை தவறவிடக் கூடாது. இதுதான் அந்த வீடியோவின் மையக்கருத்து.
தேவைப்பட்டால் காதுகளையும் மூடிக்கொள்ளலாம்
1992 – ல் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகபட்சம் இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். ஒன்று திருமணம். மற்றொன்று ஆசிரியர் பணி. அதில் உச்சமாக ஒருசிலர் பள்ளி / கல்லூரி தலைமையாசிரியர்களாகவும் / பிரின்ஸிபலாகவும் இருப்பார்கள்.
இந்த இரண்டையும் தவிர்த்து எனக்கான பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதற்காக என் படிப்பு, உழைப்பு, திறமை இவற்றை மூலதலமாக்கினேன். காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
அந்த காலகட்டத்தில் என் நோக்கத்தை சிதறடிக்க மேலே சொன்ன உதாரணத்தைப் போல ஏகப்பட்ட அறிவுரைகள்.
உன் படிப்பை வீணடிக்கிறாய். பெரிய நிறுவனங்களில் சாஃப்ட்வேர் துறையில் முயற்சிக்கலாமே…
வங்கி, தொலைபேசித்துறை போன்றவற்றில் தேர்வெழுதி நல்ல சம்பளத்தில் அரசு உத்யோகத்தில் நுழையலாமே…
கல்லூரிகளில் லெக்சரராக சேரலாமே… அதுதான் பெண்களுக்கு பாதுகாப்பானது…
பள்ளியில் தலைமை ஆசிரியராக வாய்ப்புள்ளதே… 10 to 5 வேலை… வருடாந்திர விடுமுறை… என பல ஆதாயங்கள் உள்ளன…
உன் திருமணத்துக்குப் பிறகு பிசினஸை யார் பார்த்துக்கொள்வார்… எப்படியும் மூடத்தானே வேண்டும்… எதற்காக வீணாக உழைக்க வேண்டும்…
சாஃப்ட்வேருக்கு அமெரிக்காவில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. அங்கு சென்று ‘ஜாம் ஜாம்’ என்று செட்டில் ஆவதை விட்டு இங்கிருந்து சொந்த பிசினஸ் ஆரம்பித்து கஷ்டப்படனுமா…
இப்படி அவரவர்கள் பார்வையில்… அவரவர்கள் களத்தில்… அவரவர்கள் தளத்தில் இருந்து ஆயிரம் ஆலோசனைகள். அறிவுரை வழங்குபவர்கள் ஆண் பெண் என இருபாலரும்தான்.
எனக்கு ஒரு வழக்கம் உண்டு. தேவைப்படாத நேரத்தில் காதுகளைக் கூட என்னால் மூடிக்கொள்ள முடியும். என் நோக்கத்தை சிதறடிக்கும் வார்த்தைகள் எதுவுமே என் காதுகளுக்குள் நுழையாது. அதனால் மனதுக்குள்ளும் செல்லாது. அவர்கள் சொல்வதை யோசிக்கவும் அவசியம் இல்லாமல் போனது.
இதோ 25 ஆண்டுகள் ஓடிவிட்டன. என் கடும் உழைப்பில் படிப்படியான வளர்ச்சியில் ‘காம்கேர்’என்ற என் நிறுவனத்தின் பெயரே எனக்கு அடையாளமாகி ஐகானாகவும் மாறிவிட்டது.
ஒருவேளை அன்று அவர்கள் சொன்ன அறிவுரைகளில் யார் ஒருவர் சொன்னதையேனும் நான் கேட்டிருந்தால் இன்று இது சாத்தியமாகி இருக்காது.
எனவே உங்கள் இலட்சியத்தில் நீங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் மற்றவர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஊர் வாயை மூட முடியாது. ஆனால் கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் நம் காதுகளை நம்மால் மூடிக்கொள்ள முடியும். மனமிருந்தால் எதுவும் சாத்தியமே.
இதை நான் ஏதோ பெண்களுக்கு மட்டும் சொல்வதாக நினைக்க வேண்டாம். ஆண் பெண் என இருபாலருக்கும்தான்.
தடைகளை உடைத்து ஓடிய ஓட்டம்
தன் காதுகளை மட்டும் அல்ல ஒட்டு மொத்த உணர்வுகளையும் பூட்டிக்கொள்ளும் சக்தி ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் உண்டு என்பது நிரூபணம். இயற்கையும் சமூகமும் சூழலும் நிறைய பாடம் எடுத்துள்ளன.
தன் ஆசைகளை உள்ளுக்குள் பூட்டிக்கொண்டு தன் குடும்பத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இந்திரா காந்தியும், அப்துல் கலாமும், பாரதியும் ஒளிந்திருக்கிறார்கள்.
பெரும்பாலானோரின் கனவுகள் வட்ட வடிவ தோசையிலும், மென்மையான சப்பாத்தியிலும், கமகமக்கும் சாம்பாரிலும் முடிந்து போகின்றன.
ஆனால் ஒருசிலர் மட்டுமே அவற்றையெல்லாம் மீறி தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய முயற்சி சமுதாய மாற்றத்துக்கே வித்திடுகிறது.
ஏப்ரல் 2017, 17-ம் தேதி.
எழுபது வயது கேத்ரின் ஸ்விட்சர் மாரத்தான் களத்தில் இருந்தார். 50 ஆண்டுகளுக்கு முன் இதே மாரத்தானில் அங்கீகாரம் மறுக்கப்பட்டவர், 2017 மாரத்தானில் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்த்து மழையில் மகிழ்ச்சியுடன் ஓடினார்.
இவருக்கு ஏன் அங்கீகாரம் மறுக்கப்பட்டது. அப்படி என்னதான் நடந்தது?
இருபது வயது கேத்ரினுக்கு ஓடுவதில் ஆர்வம் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே மாரத்தான் போட்டிகளில் அனுமதி என்பதை கேத்ரினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
1967-ம் ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கே.வி. ஸ்விட்சர் என்ற பெயரில் தன்னைப் பதிவு செய்துகொண்டார். பெயரைப் பார்த்து யாருக்கும் சந்தேகம் வரவில்லை. 261 என்ற எண்ணில் களத்தில் நின்றார் கேத்ரின்.
போட்டி ஆரம்பமானது. இலட்சியத்தோடு இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் ஓடிய பிறகு கேத்ரினைக் கண்டுகொண்ட சக போட்டியாளர்கள் சிலர் அவரை கீழே தள்ளி விட முயற்சித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் அவரை பெண் என்பதால் ஓட அனுமதி இல்லை என்று சொன்னதோடு அவருக்களித்த மாரத்தான் எண்ணை (261) ஒப்படைத்துவிட்டு போட்டியிலிருந்து வெளியேறு என்று கத்தினார்கள்.
என்ன நடந்தாலும் ஓடுவதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்று உறுதியாக இருந்த கேத்ரின், சக நண்பர்களின் உதவியால் மீண்டும் எழுந்து ஓட ஆரம்பித்தார். போட்டியில் வெற்றி பெறவில்லை. ஆனால் மாரதானில் ஓடிய முதல் பெண் என்ற பெருமை கேத்ரினுக்குக் கிடைத்தது.
கேத்ரினும் இன்னும் சில பெண்களும் தொடர்ந்து மாரத்தானில் பெண்களுக்கு அனுமதி வேண்டும் என்று போராடினார்கள். அதன் விளைவாக 1972-ம் ஆண்டு முதல் பெண்கள் மாரத்தானில் அனுமதிக்கப்பட்டார்கள்.
120 ஆண்டுகளாக பாஸ்டன் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றுவந்தாலும் 45 ஆண்டுகளுக்கு முன்புதான் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இதற்குக் காரணமானவர் கேத்ரின் ஸ்விட்சர்.
முதல் முறை கேத்ரினுக்கு ஒதுக்கப்பட்ட 261 என்ற எண்ணை, கேத்ரினின் பொன்விழா ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் அந்த எண் கேத்ரினுக்கானது என்றும் இந்த எண்ணை இனி யாருக்கும் வழங்கப் போவதில்லை என்றும் மாரத்தான் கமிட்டி அறிவித்து கெளரவித்தது.
விடா முயற்சி வீண் போவதில்லை
இது பொருளாதாரத்தில் வளர்ந்த நாடான அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி. உலகில் பரவலாக எல்லா இடங்களிலும் பெண்களுக்கான உரிமைகளை போராடித்தான் பெற்றிருக்கிறார்கள்.
நன்கு கவனித்தால் பொதுவான ஒரு விஷயம் புலப்படும். பெண்களுக்காக குரல் எழுப்பியவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் போராடிவிட்டு பின்னர் விலகியதாக தெரியவில்லை. தாங்கள் போராடி பெற்ற உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் தங்கள் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
மாரத்தானில் பெண்கள் பங்களிப்புக்காக தன் 20 வயதில் போராடத் தொடங்கிய கேத்ரின், தானும் வென்று சக பெண்களுக்கும் உரிமை பெற்றுத் தந்து 30 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று இதோ இப்போது தன் 70 வயதிலும் 261 Fearless என்ற அமைப்பின் மூலம் பெண்களுக்குத் தடகளப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.
கேத்ரின் போன்ற முன்மாதிரிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள்.
பெண்கள் இன்று அனுபவித்து வரும் சுதந்திரம் திடீரென ஒரு நாளில் வந்ததல்ல. பல ஆண்டுகளாக பல்வேறுதுறை சார்ந்த பெண்களின் போராட்டத்தினால் கிடைக்கப் பெற்ற இன்றைய சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துவோமே!
யோசிப்போம்.
ஆன்லைனில் மின்னம்பலத்தில் படிக்க… https://minnambalam.com/k/2018/11/23/27
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 3