ஹிந்தியில் வெளியான ‘தும்ஹாரி சூலு’ என்ற படத்தை ரீமேக் செய்து ‘காற்றின் மொழியாக’ இயக்கியுள்ளார் ராதா மோகன்.
இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா +2-வில் தோல்வி. வேலைக்குச் செல்லவில்லை. கணவன்(விதார்த்) , ஒரே மகன்(தேஜஸ் கிருஷ்ணா) என அழகான நடுத்தரக் குடும்பம்.
சமயோஜமாகப் பேசுவதும், மிமிக்கிரி செய்வதும் நாயகியின் இயல்பு. தான் போகவே போகாத ஹரிதுவார் டூரை உணர்ச்சிப் பூர்வமாய் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் போனில் பேச அதற்கு பரிசும் கிடைக்க அதை வாங்க அந்த அலுவலகம் செல்லும்போது எதேச்சையாக ரேடியோ ஸ்டேஷனில் ‘நீங்கள் RJ ஆக வேண்டுமா?’ என அறிவிப்பைப் பார்த்து ’என்னால் முடியும் மேடம்…’என கண்களில் நம்பிக்கைத் தெரிக்கப் பேசியே வேலைக்குச் சேர்கிறாள்.
இரவு நேர பணி. போனில் அந்தரங்கப் பிரச்சனைகளை கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சி. ஆண்கள் பலர் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்க கதாநாயகி சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் பதில் சொல்லி அவர்கள் மனமாற்றத்துக்கு உதவுவதாக கதை செல்கிறது.
இந்த நிகழ்ச்சி குறுகிய நாட்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்று விருதுக்கும் தயாராகிறது.
+2 தோல்வி. வேலைக்குச் சென்ற அனுவமே இல்லை. சமயோஜிதமாக பேசும் திறமை மட்டுமே நாயகியின் ஒரே திறமை. அவளால் எப்படி இதை சாத்தியமாக்க முடிந்தது? தன்னம்பிக்கை.
வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல விஷயங்கள் இந்த படத்தில்.
ஒன்று…
இரவு நேரப் பணிக்குச் செல்ல வேண்டாம் என அக்காக்களும், அப்பாவும் அறிவுரை சொல்ல அதை அவள் மறுக்க ‘ஏதாவது பிரச்சனைன்னா எங்க கிட்ட தானே வந்து நிற்பாய்’ என அவர்கள் கண்டிப்புடன் சொல்லும்போது நாயகி சொல்லும் பதில் கிளாசிக்.
‘ஆமாம். நீங்கத்தானே என்னுடைய ஃபேமிலி. உங்க கிட்டத்தான் வந்து நிற்பேன்…’
பொதுவாக என்ன சொல்லுவார்கள் ‘நான் ஏன் உங்ககிட்ட வரப்போறேன். செத்தாலும் உங்ககிட்ட வந்து நிக்க மாட்டேன்…’ இதுதான் பதிலாக இருக்கும்.
ஆனால் இந்தப் படத்தில் நாயகி சொல்லும் இந்த பதிலில் குடும்ப அமைப்புக்கான அஸ்திவார நம்பிக்கை பொதிந்துள்ளது.
இரண்டு…
நாயகன், இரவு நேர பணிக்கு ஒத்துக்கொண்டாலும் ஆண்களின் ஏடாகூட கேள்விகளில் கூசிப் போகிறான். ‘இந்த வேலைக்கு போய்த்தான் ஆகணுமா… நாலு பேர் என்ன சொல்லுவாங்க…’ என மன வருந்திப் பேச அதற்கு நாயகி, ‘அவங்க எப்படிப் பேசினால் என்ன… நான் சரியாத்தானே பேசறேன்…’ என்று சொல்லும் பதிலில் உள்ள பாடம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான்.
RJ பணியில் சேர வாய்ப்பு கேட்கும் போதாகட்டும் அதன்பின்னர் ஒரு ஜிம் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அங்கு ரிசப்ஷனிஸ்ட் பணிக்கு வாய்ப்பிருக்கிறதா என கேட்டுச் செல்லும் போதாகட்டும் ‘என்னால் முடியும்…’ என கண்களில் நம்பிக்கைத் தெறிக்க பேசும் நாயகியின் வார்த்தைகளில் உள்ள தன்னம்பிக்கைத் தேவை நம் எல்லோருக்கும்.
மூன்று…
கடைசியில் குடும்பச் சூழல் காரணமாக மனதுக்குப் பிடித்த RJ வேலையை ரிசைன் செய்துவிட்டு அதே ரேடியோ ஸ்டேஷனில் கேட்டரிங் ஆர்டரை கேட்டு வாங்கும் போதும் நாயகி சொல்லும் ‘என்னால் முடியும் மேடம்…’ வார்த்தையிலும், கண்களில் தெரியும் நம்பிக்கையிலும் நெகிழாதவர்கள் இருக்க முடியாது.
நான்கு…
ஆணாகட்டும் பெண்ணாகட்டும் குடும்பம் என்ற அமைப்புக்குள் வந்துவிட்டால் தன் வேலையினால் அந்த குடும்ப அமைப்புக்கு பங்கம் வரும் என்றால் அதை துறக்கவும் தயங்கக் கூடாது என்று நாயகி தன் வேலையைத் துறக்கும் காட்சியை அமைத்திருக்கிறார்கள். ஆனால், அதற்காக அவர் சமையல், பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல் என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருங்கி விடாமல் மீண்டும் உயிர்த்தெழுந்து கேட்டரிங் பிசினஸை தொடங்குவதாகக் காண்பித்திருப்பது அருமை.
ஐந்து…
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக கடைசி காட்சியில் நாயகன் நாயகியிடம் ‘நான் கேட்டரிங் பிசினஸை பார்த்துக்கொள்கிறேன். நீ வேலைக்குக் கிளம்பு… நீ இப்படி இருப்பதைப் பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு…’ என சொல்லும்போது நாயகி, ‘நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்… மறுபடியும் அந்த நிகழ்ச்சில யாராவது ஏதாவது பேசப் போக உனக்குப் பிடிக்கலைனா என்ன செய்வது…’ என சொல்லும்போது நாயகன் சொல்லும் பதிலில் படத்தை ஒய்யாரத்தில் தூக்கி வைத்துவிட்டார்கள்.
‘யார் எப்படிப் பேசினால் என்ன… நீ சரியாத்தானே பேசுகிறாய்…’
இந்த ஒற்றை வரி கொடுக்கும் தைரியமும் மனோபலமும்தான் கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பிக்கையை பலப்படுத்துகிறது.
ஆறு…
இன்றைய தலைமுறைப் பிரச்சனையான ஸ்மார்ட்போன், வீடியோ கேம்ஸ் இவற்றின் தாக்கங்களையும் எதார்த்தமாக எடுத்துச் சொல்லியிருப்பது பெற்றோர்களுக்கு ஒரு ‘வார்னிங்’ கொடுத்ததைப் போல அருமையாக உள்ளது.
ஏழு…
ரேடியோ ஸ்டேஷன் ஹெட்டாக வரும் லஷ்மி மஞ்சு, இரவுநேர கார் ஓட்டுனராக வரும் பெண், ஜிம்மில் பணிபுரியும் கர்பிணி பெண்ணாக வரும் மதுமிதா, ஊறுகாய் மற்றும் பொடி வகைகளை வீட்டில் தயாரித்து விற்பனை செய்யும் உமா பத்மநாபன் என படம் நெடுக பெண்களை தன்னம்பிக்கைப் பெண்களாகக் காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு.
RJ பணியில் சேர்ந்த பிறகும் ஜோதிகா தன் உடையில் மாற்றம் செய்துகொள்ளாமல் அவர் அவராகவே புடவையில் வலம் வந்தது அழகு. அற்புதம்.
எட்டு…
இத்தனை சிறப்புகள் இருந்தும் நாயகன் அலுவலகப் பிரச்சனையினாலும் வீட்டில் மனைவியின் பணியினால் ஏற்படும் மன உளைச்சலினாலும் படுக்கையறையில் குடித்துக்கொண்டு அமர்ந்திருப்பதைப் போல காட்சிப்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆண்களின் மனவருத்தத்துக்கு மருந்தே குடிதான் என்பதை திரும்பவும் வலியுறுத்தாமல் இருந்திருக்கலாம்.
ஒன்பது…
பிறர் மீது வைக்கும் நம்பிக்கை. தன் மீது வைக்கும் தன்னம்பிக்கை. இந்த இரண்டையும் படம் நெடுக தூவிச் சென்றுள்ளார்கள். காற்றின் மொழி டீமிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 22, 2018
Click Here…
தினமலர் பெண்கள் மலர் டிசம்பர் 1, 2018 இதழில் வெளியான கட்டுரையை பத்திரிகை வடிவில் படிக்க…
Feedback from a READER
//படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் விமர்சனம் எழுதிய முறையும், விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பார்க்கும் போது. இனி எல்லா படத்திற்கும் மேடம் விமர்சசனம் எழுதினால் நன்றாய் இருக்கும்.. அடுத்து விமர்சனம் எழுதுவது எப்படி..? என்ற புத்தகமும் எழுதலாம்… ஏனெனில் நிறைய சஞ்சிகைகளில். Hero-யிஸத்தைப் போற்றி , ஒரு சார்பாகவோ அல்லது அதை படித்த பிறகு , தேவையற்ற எண்ணங்கள் எழுவதையோ தவிர்க்க இயலாது..//
சென்ற வியாழன் அன்று ‘காற்றின் மொழி’ திரைப்படம் குறித்து நான் எழுதிய விமர்சனத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அதைப் படித்துப்பார்த்த திரு. ராம்குமார் அவர்கள் எழுதிய கமெண்ட் தான் இது. முதலில் அவருக்கு என் மனமார்ந்த நன்றி…
ஒரு விமர்சனம் கூட இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என அனுபவப்பூர்வமாக உணர்ந்த அழகிய தருணம்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 28, 2018