பிள்ளையார் சுழி போட்டவர்!
சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கும் எங்கள் காம்கேர் சாஃட்வேர் நிறுவனம் 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. எங்கள் நிறுவனத்தின் முதன்மைப் பணியாக சாஃப்ட்வேர் தயாரித்தல், அனிமேஷன் படைப்புகளை உருவாக்குதல் என்றிருந்த நிலையில் எங்கள் படைப்புகள் மூலம் நான் கற்றறிந்த தொழில்நுட்பங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகமாக வெளியிட ஆரம்பித்தேன்.
என் அறிவுத் திறமையை எழுத்துக்கள் மூலம் புத்தகமாக வெளிவர யார் பிள்ளையார் சுழி போட்டது தெரியுமா?
1999 – ஆம் ஆண்டு. ஒரு போன் கால்.
‘நான் கலைஞன், அநுராகம் பதிப்பகத்தில் இருந்து பேசறேன்…. புவனேஸ்வரி மேடமின் நேர்காணலை ஏற்றுமதி உலகம் பத்திரிகையில் பார்த்தோம். அவங்ககிட்ட பேசணும்…’
‘நான் தான் புவனேஸ்வரி…’
‘வணக்கம். வாழ்த்துக்கள். உங்கள் நேர்காணலில் புத்தகம் வெளியிடுவது குறித்து உங்கள் விருப்பத்தைச் சொல்லி இருந்தீர்கள்… எங்க பதிப்பகம் மூலமா புத்தகம் எழுதறீங்களா…’
இப்படிக் கேட்டவர் திரு. நந்தா. திரு. மாசிலாமணி அவர்களின் மகன்.
‘கரும்புத் தின்ன கூலியா வேண்டும்?’
நான் மிகவும் உற்சாகமாகி ‘சந்தோஷமா எழுதறேன் சார்…’ என்றேன்.
அந்த வார இறுதியில் என் அலுவலகத்துக்கு அவர் தன் மனைவியுடன் வந்திருந்தார்.
பதிப்பகம் குறித்தும், புத்தகங்கள் குறித்தும், காம்கேர் குறித்தும், சாஃப்ட்வேர் துறை குறித்தும் நிறைய பேசினோம்.
அதன் பின்னர் நான் அவர் பதிப்பகம் சென்று அப்போது மங்கையர் மலரில் நான் தொடர்ச்சியாக எழுதிவந்த ‘உலகம் உன் கையில்’ என்ற கட்டுரைத்தொடரை முதலில் புத்தகமாக்கலாம் என்று பேசி முடிவெடுத்தோம்.
சொன்னபடி அந்தவருட புத்தகக் கண்காட்சியில் என் புத்தகத்தை விற்பனைக்கு வைத்தார். பின்பக்க அட்டையில் என் புகைப்படத்துடன் என்னுடைய முதல் புத்தகத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட பரவசத்தை விவரிக்க வார்த்தையில்லை.
இப்படியாக கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துறையில் தமிழில் வெளியான முதல் புத் தகமும் அதுவே. நான் தமிழில் எழுதி வெளிவந்த முதல் புத்தகமும் அதுவே.
அதைத்தொடர்ந்து விஷுவல் பேசிக், விபி ஸ்கிரிப்ட், ஹெச்.டி.எம்.எல், இகாமர்ஸ், இண்டர்நெட், வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் என பல கம்ப்யூட்டர் லேங்குவேஜ்கள் மற்றும் பேக்கேஸுகளுக்கு தொடர்ந்து புத்தகம் எழுத ஆரம்பித்தேன். விற்பனையிலும் அவை ஜெயிக்கவே, என் எழுத்துப் பயணம் தடையின்றி தொழில்நுட்ப உலகில் முன்னேறத் தொடங்கியது.
அதுவரை பத்திரிகைகளில் ஏராளமான கதை, கவிதை, தொழில்நுட்பக்கட்டுரைகள் என எழுதிக் கொண்டிருந்தேன். புத்தகமாக வெளியிடுவதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் திரு. நந்தா அவர்கள்தான்.
அன்று அந்தப் புத்தகத்தை வெளியிட விழா எடுக்கவில்லை. புகைப்படம்கூட எடுத்துக்கொள்ளவில்லை. இன்றும் நான் எழுதி 100 புத்தகங்களுக்கும் மேல் வெளிவந்த நிலையிலும், எந்த ஒரு புத்தகத்துக்கும் வெளியீட்டுவிழா வைக்கவே இல்லை என்பது வேறு விஷயம்.
இன்று கலைஞன்/அநுராகம் பதிப்பகத்தில் திரு. நந்தா அவர்களை நேரில் சந்தித்தபோது அந்த விருப்பம் பூர்த்தியானது.
அவருடைய பதிப்பகமும் எங்கள் காம்கேரும் இணைந்து குழந்தைகளுக்கான அனிமேஷன் சிடிக்கள் ஏராளமாக தயாரித்து வெளியிட்டிருக்கிறோம்.
பேசிக்கொண்டே இருக்கும்போது சட்டென இடைமறித்து அவர் சொன்னார், ’18 வருடங்களுக்கு முன்னர் எப்படிப் பார்த்தேனோ அப்படியே இருக்கிறீர்கள், பழகுகிறீர்கள், பேசுகிறீர்கள், மரியாதை கொடுக்கிறீர்கள்… நடை உடை பாவனை எதிலும் ஒரு மாற்றமும் இல்லை. பெரிய விஷயம்’ என நெகிழ்ச்சியாகச் சொன்னபோது மகிழ்ந்தேன்.
‘ஆமாம்… அதுதான் என் பெற்றோர் வளர்ப்பு. எத்தனை உயரத்துக்குச் சென்றாலும் தலை வானத்தைப் பார்க்காமல் தரையைப் பார்த்து நடக்க வேண்டும். அப்போதுதான் கல் தடுக்கி கீழே விழாமல் இருக்க முடியும்… என்ற மனப்பக்குவத்தை எங்களுக்குள் விதைக்க தாங்கள் வாழ்ந்து காட்டினார்கள் என் பெற்றோர்.
அடுத்தவர்களை மதிப்பது, அவர்கள் கருத்துக்களுக்கு மரியாதை கொடுப்பது, சக ஜீவன்களை பதவி, பணத்தின் காரணமாக பாரபட்சம் காட்டாமல் சமமாக நடத்துவது இதெல்லாம் அவர்கள் வாழ்க்கையின் பாடங்கள். நான் அவற்றை உள்வாங்கி பின்பற்றுகிறேன். அவ்வளவே…’
என்று நெகிழ்ச்சியாக சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் இனிய நினைவுகளுடன் விடைபெற்றேன்.
இன்று(ம்) ஓர் இனிய நாள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 1, 2017