மங்கையர் மலர்

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே கோகுலம், கல்கி, மங்கையர் மலர் எனக்குப் பரிச்சியம் என்றாலும், காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகுதான் அதனுடன் இன்னும் நெருக்கமானேன்.

என் நிறுவனத்தின் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆவணப்படங்கள் தயாரிப்புகள் மூலம் நான் பெறும் தொழில்நுட்ப அனுபவங்களை எழுத்துவடிவில் வெளிப்படுத்தவும் புத்தகங்களாக வெளியிடவும் பத்திரிகைகள் பெருமளவில் உதவி புரிந்தன. அதில் கல்கி குழும பத்திரிகைகளும் அடங்கும்.

என் 12-வது வயதில் நான் எழுதிய ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கதை கோகுலம் (தமிழ்) பத்திரிகையில் வெளியானது. அதுவே என் முதல் கதை. என் படைப்பாற்றலுக்கு விதையே அந்தக் கதைதான் என்றும் சொல்லலாம்.

1996-ம் ஆண்டு மங்கையர் மலரில் ‘உலகம் உன் கையில்’ என்ற தலைப்பில் தொழில்நுட்பக் கட்டுரைத் தொடரை 1 வருட காலம் எழுதி வந்தேன். மங்கையர் மலரில் பெண்களுக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தலாம் என்று நான் எழுதி போஸ்ட் செய்திருந்த ஒரு கடிதத்துக்கு மதிப்பளித்து என்னை அழைத்துப் பேசி ‘தலைப்பு முதல் தொடரை எழுத வேண்டிய காலகட்டம் வரை’ நானே முடிவு செய்யும் சுதந்திரத்தை எனக்களித்தது மங்கையர் மலர்.

1990-களில் தொழில்நுட்பத்தை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு நான் எடுத்த முயற்சிக்கு வரவேற்பு கொடுத்தது மங்கையர் மலர். அந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றிதான் அதன் பின்னர் தொழில்நுட்ப உலகில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

அதன் பிறகு அந்தக் கட்டுரைத் தொகுப்பு ‘அநுராகம்’ பதிப்பகம் மூலம் ‘இன்ஃபர்பேஷன் டெக்னாலஜி ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியானது. அதுவே தமிழில் வெளியான என் முதல் புத்தகம் என்ற அந்தஸ்த்தைப் பெற்றது.

அதன் பிறகு 2004-ம் ஆண்டு ‘காசு கொட்டும் மல்டிமீடியா’ என்ற தலைப்பில் மினி கல்கி-யில் தனியாவர்த்தனம் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. தனி புத்தகமாக மினிகல்கியில் என் பங்களிப்பைக் கொடுத்தபோது அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்.

அந்த காலகட்டத்தில் ஆன்லைனில் அடி எடுத்து வைத்திருந்த கல்கி குழும வெப்சைட்டின் முகப்புப் பக்கத்தில் ‘டாப் 10’ மனிதர்களின் புகைப்படத்துடன் என் புகைப்படத்தையும் வெளியிட்டு பெருமைப்படுத்தினார்கள்.

பின்னர் 2014-ம் ஆண்டு கோகுலம் (ஆங்கில) இதழில் ‘லாஜிகா-Logica’ என்ற பெயரில் சிறுவர் சிறுமிகளுக்கான குவிஸ் பகுதியை ஒரு வ ருட காலம் எழுதி வந்தேன்.

2013-2014 வரை மங்கையர் மலரில் என்ற தலைப்பில் பெண்கள் அனைவரையும் ஜூனியர் பில்கேட்ஸாக்கும் முயற்சியில் ‘ஸ்மார்ட் லேடி’ தொழில்நுட்பக் கட்டுரைத் தொடர் எழுதி வந்தேன்.

அதே காலகட்டத்தில் http://mmsmartlady.blogspot.in என்ற பிளாகையும், https://www.youtube.com/user/mmsmartlady என்ற யு-டியூப் சேனலையும், https://www.facebook.com/mm.smartlady என்ற ஃபேஸ்புக் பக்கத்தையும் அறிமுகப்படுத்தி அதன் மூலம் வாசகிகளுடன் வாரந்தோறும் ஆன்லைனில்  ‘சாட்-மீட்டிங்’ செய்து தொழில்நுட்பம் குறித்து விவாதித்து அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து, தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடத்தி, பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்தி மங்கையர் மலர் வாசகிகளுடன் இணைப்பில் இருந்தேன்.

எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜுப்லி ஆண்டில்(1992-2017) கல்கி குழுமத்துடன் நான் பயணித்து வந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து தங்களுடன் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதில் பெருமை அடைகிறேன்.

பசுமையான நினைவலைகளை தொகுத்த இன்று(ம்) ஓர் இனிய நாள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி

நவம்பர் 27, 2017

 

(Visited 114 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari