இங்கிதம் பழகுவோம்[13] பிடித்ததை செய்ய முயற்சி செய்! (https://dhinasari.com)

சென்ற சனிக்கிழமை மாலை ஒரு பள்ளிச் சிறுமியின் அம்மாவுக்கு அப்பயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தேன்.

அம்மாவும் பெண்ணும் சொன்ன நேரத்துக்கு மிகச் சரியாக வந்திருந்தார்கள்.

14 வயது பள்ளிச் சிறுமி. நன்றாக படிக்கும் பெண். கொஞ்ச நாட்களாய் பள்ளியில் ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தாள். படிப்பிலும் நாட்டம்போய் வீட்டில் எதற்கெடுத்தாலும் அம்மாவுடன் சண்டை.

பள்ளியில் பிரச்சனையில் இருந்து தன் பெண்ணை மீட்டெடுத்த அந்த அம்மாவுக்கு உளவியல் ரீதியாக கையாளுவதில் சிக்கல் என்பதால் என்னை தொடர்பு கொண்டார்.

நான் பொதுவாகவே யாருக்குமே அறிவுரை என்ற பெயரில் எதையுமே சொல்ல மாட்டேன். என் அனுபவங்களைப் பகிர்வேன். அதில் இருந்து அவர்களுக்கு ஏதேனும் ஸ்பார்க் கிடைத்தால் மகிழ்ச்சி என்றளவில் மட்டுமே பேசுவேன்.

ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியும் அந்தப் பெண் முகத்தில் சிரிப்போ அல்லது எந்த ரியாக்‌ஷனுமே இல்லை.

ஆனாலும் நான் அவள் முகத்தைப் பார்த்துப் பேசியபடி இருந்தேன்.

‘வாழ்க்கையில் நமக்குப் பிடித்த விஷயம் என்ற ஒன்றை வைத்துக்கொள்ளணும். கமிட்டட் விஷயம் என்ற ஒன்றையும் வைத்துக்கொள்ளணும்.

உன்னைப் பொருத்த வரை கமிட்டட் விஷயம் என்பது படிப்பு. படித்துத்தான் ஆகணும்… படிக்கவில்லை என்றால் யாருமே உன்னை மதிக்க மாட்டார்கள்… 50 மார்க் வாங்கி பாஸ் ஆகும் அளவுக்குப் படித்தால்கூட போதும். ஸ்டேட்டில் முதலாவதாக வர வேண்டும், பள்ளியில் முதலாவதாக வர வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. 50 மார்க் வாங்குவது என்பது  உன்னால் முடியாத செயல் இல்லை… ஏன்னா நீ நன்றாகப் படிக்கும் பெண்… கொஞ்சம் முயற்சித்தாலே போதும்…

அப்புறம் உனக்குப் பிடிச்ச விஷயம் என்ன என்பதை தெரிந்துகொண்டு அதை தொடர்ச்சியாக செய்யணும்… உதாரணத்துக்கு உனக்கு எழுத வருமா, பாட வருமா, படம் போட வருமா எதுவாக இருந்தாலும் அதை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் செய்யலாம்… அது உன் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்…

உனக்குப் பிடிச்ச வேலையை செய்யணும்னா கமிட்டட் வேலையை ஒழுங்கா செய்யணும்னு உன் மனசுக்கு நீயே கட்டளை போட்டுக்கோ…

நிச்சயமா உன் மனசு படிப்பதற்கு கவனத்தைச் செலுத்தும்… அப்புறம் உனக்குப் பிடிச்ச வேலையை ஜாலியா செய்யலாம்…’

இதற்கும் அந்தப் பெண் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

‘சரி உனக்கு என்னதான் செய்யப் பிடிக்கும்?’ என்றேன்.

யாருமே எதிர்பார்க்காத ஒரு பதிலைச் சொன்னாள்.

‘சோஷியல் சர்வீஸ்…’

அப்பாடா வாயைத் திறந்து பேசினாளே என நினைத்து ‘அப்படியா… என்ன மாதிரி சோஷியல் சர்வீஸ்..’ என கேட்டபடி அவளை பேச விட்டேன்.

நிறைய பேசினாள். நாட்டில் நடக்கும் லஞ்சம், சுற்றுச் சூழல் பாதிப்பு என அவள் வயதில் நாம் யோசிக்காததை எல்லாம் பேசினாள். ஆனால் அதில் அதிகப்பிரசங்கித்தனமோ அதிமேதாவித்தனமோ சுத்தமாக இல்லை. உண்மையிலேயே அவளுக்கு சோஷியல் சர்வீஸில் ஈடுபாடு இருந்தது.

கடைசியில் அவள் அம்மாவுக்கு ஒரு சொல்யூஷன் கொடுத்தேன்.

‘வாரா வாரம் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் முதியோர் இல்லம் அழைத்துச் செல்லுங்கள்… அந்த பாட்டி தாத்தாக்களோடு 1/2 மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் பேச அனுமதி கேட்டு அவர்களிடம் பேச வாய்ப்பை ஏற்படுத்துங்கள்… நீங்கள் ஒரு வார்த்தை பேசும் முன்னர் அவர்கள் ஆயிரம் கதைகளைக் கொட்டுவார்கள். கிளம்பும்போது அவர்கள் கண்களில் இருந்து வரும் ஒரு சொட்டுக் கண்ணீர் உங்கள் மகளுக்கு வாழ்த்தாக அமையும்.

வாரா வாரம் ஞாயிறு எப்போதடா வரும் என்கிற அளவுக்கு அதில் அவளுக்கு ஈடுபாடு வரும். ஞாயிற்றுக்கிழமை ஜாலியா தனக்குப் பிடித்த வேலை செய்வதற்காகவே வாரத்தில் 5 நாட்கள் அவள் படிக்க ஆரம்பிப்பாள்.

பிறகு சேவை மனப்பான்மையுடன் இயங்கிவரும் நிறுவனங்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிகளுக்கு volunteer சர்வீஸ் செய்ய நீங்களும் அவளுடன் சென்று கலந்துகொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சோஷியல் சர்வீஸில் முழு ஈடுபாடு வரும்…. படித்து முடித்து அது அவள் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்க உதவும்…’

என்று அம்மாவிடம் சொல்யூஷன் கொடுத்த பிறகு அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘நீ உன் கமிட்டட் வேலையான படிப்பை ஒழுங்கா படிச்சாதான் உனக்குப் பிடிச்ச வேலையான சோஷியல் சர்வீஸுக்கு ஞாயிற்றுக் கிழமையை ஒதுக்க முடியும்… என்ன சரியா’ என்றேன்.

அவளும் தலையை ஆட்டினாள்.

‘நான் கூட உன்னைப் போல்தான்… உனக்கு எப்படி உன் அம்மா காலையில் எழுந்ததும் படிபடி என்று சொன்னால் பிடிக்காதோ அப்படித்தான் எனக்குக் கூட காலையில் எழுந்ததும் கத்தரிக்காய் குழம்பு செய், வெண்டைக்காய் கறி செய், சாதம் சமைத்து வை என்று யாராவது சொன்னால் கோபம் வரும்… சுத்தமா பிடிக்காது… ’

இதைச் சொன்னதும் அந்தப் பெண் கலகலவென கன்னத்தில் குழிவிழ சிரித்து விட்டாள்.

‘அதனால் நான் என்ன செய்வேன் தெரியுமா… சீக்கிரமே எழுந்து எனக்குப் பிடித்த எழுத்து வேலையை 2 மணி நேரம் செய்துவிட்டு வீட்டு வேலை ஏதேனும் இருந்தால் செய்வேன்….’

இப்போதும் அவள் சிரிப்பை நிறுத்தவில்லை. நான் பேசியது அவள் மனதுக்குள் சென்றுவிட்டது. இனி கவலை இல்லை. பிழைத்துக்கொள்வாள் என்று நினைத்து நிம்மதியுடன் அவள் அம்மாவிடம்,

‘உங்கள் பெண்ணுக்கு மனதுக்குள் ஏதோ ஒன்று திருப்தி இல்லாமல் அவஸ்த்தைப்படுகிறது. வெளி உலகில் இருந்து பாராட்டோ, அங்கீகாரமோ கவன ஈர்ப்பு என்ற போர்வையில் தேவைப்படுகிறது. அந்த கவன ஈர்ப்பு சரியான பாதையில் இருந்திருந்தால் கஷ்டமோ நஷ்டமோ இல்லை. அது இல்லாதபோது ஏற்பட்ட உளவியல் சிக்கல்தான் இது.

நான் சொன்னபடி அவளுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய உதவுங்கள். தானாக அவளுக்குள் ஏங்கிக்கொண்டிருக்கும் அங்கீகாரம் கிடைக்கும். படிப்பில் மட்டுமல்ல எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தும் அளவுக்கு மனதும் ஷார்ப் ஆகும்…’ என்று சொல்லி அனுப்பினேன்.

நீண்ட நேரம் பேசியதால் கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் மனதுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைத்தது.

நம் அனைவருக்குமே இந்த உளவியல் தீர்வு பொருந்தும் என நினைக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் கமிட்டட் வேலை என்ற ஒன்றையும், பிடித்த வேலை என்ற ஒன்றையும் வைத்துக்கொண்டால் நம் மனம் பேலன்ஸ் ஆகும் என்பது என் அனுபவம். பிடித்த வேலையை செய்யும்போது கமிட்டட் வேலையை செய்வதற்கான எனர்ஜி நமக்குள் பூஸ்ட் ஆவது நிச்சயம்.

இதுவரை இப்படி கமிட்டட் வேலை, பிடித்த வேலை என வைத்துக்கொள்ளாதவர்கள் இனி முயற்சித்துத்தான் பாருங்களேன்.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஜனவரி 1, 2019

தினசரி டாட் காமில்  லிங்க்… https://dhinasari.com/?p=65556  

தொடரும்…

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் ஜனவரி 1, 2019

(Visited 195 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon