சிரிப்பு யோகா சொல்லிக்கொடுக்கும் நண்பர் சிரிப்பானந்தா அவர்களின் சமீபத்திய ஃபேஸ்புக் பதிவைப் படித்தேன்.
எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிரிப்பு யோகா சொல்லிக்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த நண்பர், நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம் ரகசியமாக வந்து ஒரு பாக்கெட்டைக் கொடுத்ததாகவும், அது ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, ஒருமுறை சாப்பிட்டால் பின்பு விட மாட்டீர்கள், ருசி சூப்பராயிருக்கும், என்று சொல்லி அவர் விருப்பத்தைக் கேட்டறியாது அவரது கைகளில் திணித்துச் சென்றதாகவும் சொல்லியிருந்தார்.
ஆனால் அன்புடன் கொடுத்த அவரது பண்பினை மதித்து, தான் சைவ உணவுக்காரன் என்று சொல்லி அவர் மனத்தைப் புண்படுத்த விரும்பாமல் அதைப் பெற்றுக்கொண்டதாகவும் சொல்லியிருந்தார்.
வீட்டிற்கு வரும் வழியில் கற்றாழை ஜூஸ் விற்கும் நபரிடம் அவர் அசைவ உணவு சாப்பிடுபவர்தானா எனக் கேட்டறிந்து அந்தப் பொட்டலத்தைக் கொடுத்தார். அந்த ஜூஸ் வியாபாரி, ‘ஆமா சார். ஆனா இன்னிக்கு விரதம், நான் வெஜ் சாப்பிட மாட்டேன், இருந்தாலும் நீங்க அன்பா கொடுக்கறீங்க, வாசனை வேற தூள் கிளப்புது, ஒரு நாள் சாமி அட்ஜஸ்ட் பண்ணிப்பாரு கொடுங்க…’ என்று சொல்லி தன் கண் எதிரிலேயே பிரியாணியைச் சாப்பிடாராம்.
அவருக்கு உணவு வழங்கிய புண்ணியம் வந்து சேருமா, விரதம் முறிக்க வைத்த பாவம் வந்து சேருமா என்பதெல்லாம் தனக்குத் தெரியாது. ஆனால் பிறர் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதே தன் நோக்கமாக இருந்தது எனத் தனது எண்ணங்களை பதிவு செய்திருந்தார்.
**ராமனும் குகனும்!**
இதைப் படித்தபோது ராமாயணத்தில் குகன் ராமனுக்குத் தேனையும் மீனையும் பக்தியோடு கொடுக்கும்போது ராமன் சொல்லுகின்ற காட்சியே நினைவுக்கு வந்தது.
*அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்*
*தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே*
*பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்ம னோர்க்கும்*
*உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்*
‘குகனே ! நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்’ என்று குகனிடம் கூறினார்.
மேலும், உயர்ந்தவர்களிடத்தில் நாம் கொடுக்கும் பரிசுப் பொருள்கள் பெரிதல்ல, அவர்களிடத்தில் காட்டும் மதிப்பும் மரியாதையுமே பெரிது என்னும் பண்பினை குகன் வாயிலாக அறிய முடிகிறது. உண்ணத்தகாத பொருளாயினும் அன்போடு தந்தால் பெரியோர்கள் ஏற்றல் வேண்டும் என்பதை ராமனின் நடத்தையால் அறியலாம்.
**சுஜாதாவும் அப்துல் கலாமும்! **
ஒருமுறை சுஜாதாவும் அப்துல் கலாமும் ரஷ்ய விஞ்ஞானிகள் கூடிய கூட்டத்திற்கு ஹைதராபாத் சென்றிருந்தபோது கூட்ட முடிவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்தார்கள். முக்கியமான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டதைக் கொண்டாடும் சந்தோஷத்தில், ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் கலாம் கையில் ஒரு கோப்பை ஓட்காவைத் திணித்துவிட்டு அதை அருந்துமாறு வற்புறுத்தினார்.
கலாமோ சுத்த சைவம். எந்த வித மது பானங்களையும் தொடாதவர். ரஷ்யருக்கு விளக்கிச் சொல்னால் அவருக்கு ஆங்கிலம் புரியாது. அதைச் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம்.
கலாம் தர்ம சங்கட நிலையில், சுஜாதாவின் அருகே வந்து இந்தக் கோப்பையில் கொஞ்சம் வெறும் தண்ணீர் கொண்டு வா என்றதும் அவரும் அப்படியே செய்திட, கலாம் தண்ணீர் கோப்பையை உயர்த்தி ‘சியர்ஸ்’ என்று கூறி சமாளித்ததாக சுஜாதாவே தன்னுடைய புத்தகம் ஒன்றில் எழுதியிருக்கிறார்.
இதுபோல சூழலைச் சமாளிப்பதும் ஒருவகை உயரிய நாகரிகம்தான்.
**வள்ளலாரால் ஏற்பட்ட மாற்றம்**
டாக்டர் ஆர். ஜெயசந்திரன். இரு கண்களிலும் பார்வைத் திறன் இழந்த மாற்றுத் திறனாளி. தமிழ்ப் பேராசிரியராக தன் பணியைத் தொடங்கிய இவர் தற்சமயம் திருத்தணி சுப்ரமணிய ஸ்வாமி அரசுக் கலைக் கல்லூரியில் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிவருகிறார்.
மூன்று வயதில் அம்மை போட்டதன் காரணமாக இரு கண்களிலும் பார்வைத் திறனை இழந்தவர். பார்வைத் திறன் உள்ளவர்களைப் போலவே படித்து, பட்டம் பெற்று, தமிழில் Ph.D செய்து டாக்டர் பட்டமும் வாங்கியவர்.
இவர் தன் ஆராய்சிக்காக எடுத்துக்கொண்ட தலைப்பு ‘வள்ளலார்’. கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டும் நம் நாட்டில் அடியெடுத்து வைத்து மெல்ல மெல்ல வளர்ந்துவந்த 2000-த்திலேயே கம்ப்யூட்டர் வாங்கி இன்டர்நெட் தொடர்பைப் பெற்று முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஜாஸ் என்.வி.டி.ஏ. போன்ற ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர் மூலம் கம்ப்யூட்டரைப் பார்வைத் திறன் இல்லாதவர்களும் பயன்படுத்த முடியும்.
திரையில் தோன்றும் விவரங்களை அந்த சாஃப்ட்வேர் படித்துக்காட்டியபடி இருக்கும். பார்வைத்திறன் அற்றவர்கள் அதைக் காதால் கேட்டு கம்ப்யூட்டரைத் திறம்பட பயன்படுத்த முடியும்.
ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்றோர் உரைகளைக் கேட்டுத் தன்னைப் பண்படுத்திக்கொண்டவர் ஜெயச்சந்திரன். வள்ளலார் குறித்து ஆராய்சிகள் செய்ததால் ‘சிறந்த சன்மார்க்கத் தொண்டர்’ என்ற விருது பெற்றார். கூடவே 20,000 ரூபாய் வெகுமதியும் கிடைத்தது.
ஆனால் விருதைப் பெற்ற பிறகு இவர் மனம் ஒரு நிலையில் இல்லை. விருதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்றுகூட நினைத்தாராம்.
அப்படிக் கொடுத்தால் விருது கொடுத்த அமைப்புக்கு அவமரியாதை செய்வதைப்போல இருக்கும். விருதைத் தன்னிடம் வைத்துக்கொண்டால் ‘அதற்குத் தகுதி இல்லை நீ’ என மனசாட்சி உறுத்தியே கொல்லும். என்ன செய்வது என யோசித்தாராம்.
அப்படி என்ன செய்தார் மனசாட்சி உறுத்தியே கொல்வதற்கு?
தன்னுடைய அசைவம் உண்ணும் வழக்கத்தையே அதற்குக் காரணமாகச் சொல்கிறார். வள்ளலார் குறித்து ஆராய்ச்சிகள் செய்து அதற்கு விருதும் வெகுமதியும் பெற்றதால், வள்ளலார் கொள்கைகளுக்குச் சற்றும் பொருந்தாமல் புலால் உண்பதால் அந்த விருதைப் பெற மனம் ஏற்கவில்லை எனச் சொன்னார்.
இரண்டே வழிகள்தான் அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து வெளிவருவதற்கு என முடிவு செய்தாராம்.
ஒன்று விருதைத் திருப்பிக் கொடுப்பது. அது மரியாதைக் குறைவு.
இரண்டாவது புலால் உண்ணும் வழக்கத்தைக் கைவிடுவது.
இரண்டாவதே சரியான வழியாகத் தோன்றியதால் விருது பெற்ற நாளிலிருந்து தன்னுடைய அசைவ உணவைத் துறந்தாராம்.
விருதுத் தொகையை வைத்து ‘அறநெறிக் கல்வி அறக்கட்டளை’ தொடங்கி அதன் மூலம் பார்வையற்றோருக்குத் தன்னால் முடிந்த அளவு உதவியும் செய்துவருகிறாராம்.
**பிறரைக் காரணம் காட்ட வேண்டாமே!**
இங்கு குறிப்பிட்டுள்ள நான்கு நிகழ்வுகளும் அடிப்படையில் நாம் நாமாகவே இருந்து பிறரையும் காயப்படுத்தாமல் வாழுகின்ற சூட்சுமத்தையே காட்டுகின்றன. எந்தப் பழக்கத்தை விட்டுக்கொடுக்கலாம், எதை விட்டுக்கொடுக்கக் கூடாது, விட்டுக்கொடுக்காத நிலையில் அதை எப்படிக் கையாளலாம் என்பதையெல்லாம் சொல்கின்றன.
நல்ல பழக்கத்தைவிடக் கெட்ட பழக்கத்துக்கு சீக்கிரமே அடிமையாகும் தன்மைகொண்டது மனித மனம். யோகா செய்யும் நண்பர்களைப் பெற்றவர்கள் அத்தனை பேரும் யோகா செய்வதில்லை. காலையில் சீக்கிரம் எழுந்து வாக்கிங்கும் ஜாகிங்கும் செல்லும் நண்பர்களைப் பெற்றவர்கள் அனைவரும் விடியற்காலையில் சீக்கிரம் எழுவதில்லை. ஆனால் மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்களைக் கொண்ட நண்பர்களைப் பெற்றவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவதைக் காண்கிறோம்.
நம் மனதில் வைராக்கியம் இருந்தால் நாம் எந்தத் தீய பழக்கத்துக்கும் அடிமையாகாமல் நாம் நாமாக வாழ முடியும்.
**மூன்று சட்டங்கள்**
காம்கேர் என் சொந்த நிறுவனமாக இருப்பதால் சில நல்ல பழக்கங்களை நிறுவனச் சட்டமாகவே வைத்துள்ளேன்.
சிகரெட் பிடித்துவிட்டு, மது அருந்திவிட்டு ஆஃபீஸுக்குள் வரக் கூடாது. அலுவலக பார்ட்டி / மீட்டிங்கில்கூட இவற்றுக்கு அனுமதியில்லை. இவை உடல் நலத்துக்காக.
கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் காலையில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். இந்த வழக்கம் மனதை ஒருமைப்படுத்தவும், மன நலனுக்காகவும்.
இதன் மூலம் ஒரு இடத்தில் பலமணி நேரம் ஒன்றாக வேலை செய்கின்றவர்களிடையே மனதளவில் நல்லிணக்கமும், ஒற்றுமையும் ஆரோக்கியமான சூழலும் உண்டாவதும் இயற்கைதானே. மேலும் அலுவலகத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு விஷயத்தைச் செய்யும்போது பணியாளர்களிடையே நல்லுறவும் வளரும் அல்லவா?
நமது நன்மைக்காகவும் சூழலின் ஆரோக்கியத்துக்காகவும் பொதுவான நன்மைக்காகவும் ஒருசில விஷயங்களை ஏற்றுக்கொண்டால் அனைவருக்கும் நல்லதுதானே.
யோசிப்போம்!
ஆன்லைனில் மின்னம்பலம் டாட் காமில் படிக்க… https://minnambalam.com/k/2019/01/04/22
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 9