அது ஒரு பெண்களால் நடத்தப்படும் ஒரு வெப்சைட். அதன் தொடக்க விழாவுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.
என்னுடன் சேர்த்து மூன்று சிறப்பு விருந்தினர்கள். மூன்று பேருமே பெண்கள்.
நான் மட்டுமே தொழில்நுட்பம் சார்ந்தத் துறை, மற்ற இரண்டு பேரும் எழுத்தாளர்கள். கொஞ்சம் பிரபலம்தான். 60 வயதைத் தாண்டியவர்கள்.
பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டோம்.
நான் காம்கேர் என்ற சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதைச் சொன்ன பிறகு ‘நானும் புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்’ என்று சொன்னேன்.
‘அப்படியா…’ என விழி விரித்து அதிசயித்தவர்கள் ‘எத்தனை புத்தகங்கள் எழுதியுள்ளீர்கள்?’ என்றார்கள் ஒருசேர.
‘100-க்கும் மேல்…’ என்றேன் மிக அமைதியாக… என் வழக்கப்படி.
அந்த அறை சப்தத்தில் காதில் விழாததால் ‘மூன்று புத்தகங்களா?’ என்று கேட்டார்கள்.
‘More than Hundred…’ என்றேன் ஆங்கிலத்தில்.
இருவருக்கும் முகம் சுருங்கிப் போனது. கொஞ்சம் பொறாமை எட்டிப் பார்த்தது. அத்தனையும் அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது.
‘நானெல்லாம் காசு கொடுத்து இன்டர்வியூவோ அல்லது புத்தகங்களோ போட்டதில்லைப்பா…’ என்றார் ஒருவர்.
‘என்கிட்ட ஒரு பப்ளிஷர் வந்தார்… உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும் இந்த புத்தகம்… இதை நீங்கள் எழுதி நாங்கள் வெளியிட இவ்வளவு பணம் கொடுத்தால் போதும்…’ என்றார் மற்றொருவர்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
நான் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளேன் என்றுதானே சொன்னேன். எதற்கு இவர்கள் பணம் குறித்தே பேசுகிறார்கள் என நினைத்தேன்.
அவர்கள் வயதுக்கு அவர்கள், ‘அப்படியா…. வாழ்த்துகள்… இளம் தலைமுறையினரின் வளர்ச்சி பிரமிப்பா இருக்கு…’. என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.
அட பிரமிக்கக்கூட வேண்டாம்… ‘வாழ்த்துகள்’ என்று ஒற்றை வார்த்தையை முகம் மலரச் சொல்வதில் அவர்களுக்கென்ன அத்தனை மனத்தடங்கல்?
நிறைய படித்து, ஏராளமான இடங்களுக்குப் பிரயாணம் செய்து, விசாலமாக இந்த உலகைப் பார்த்து அவற்றை உள்வாங்கி எழுதும் எழுத்தாளர்கள் எத்தனை உயர்வான எண்ணங்களுடன் இருக்க வேண்டும்.
‘நான் நேர்மையானவள்(ன்)’ என்று கம்பீரமாகச் சொல்வதில் தவறில்லை. ஆனால் நம்மைத் தவிர மற்ற அனைவரும் நேர்மையற்றவர்கள் என்ற எண்ணம்தான் தவறு. அந்த தொனியில் அவர்கள் இருவரும் பேசியதால் நானும் வழக்கம்போல கொஞ்சம் பதிலளிக்க வேண்டியதானது.
‘மேடம் நம்முடைய திறமை கச்சிதமா இருந்தால் யாருக்கும் எதற்கும் நம் நிலை இறங்கவே வேண்டாம்… கொஞ்சமும் நம் கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டாம்…
உங்களுக்குத் தெரியாததில்லை…
நான் சாஃப்ட்வேர் துறைக்கு வந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. என் உழைப்பையும் திறமையையும் டிவி, ரேடியோ, பத்திரிகைகள், பதிப்பகம், இணையம், பல்கலைக்கழகம் என அத்தனை மீடியாக்களும் வெளிச்சம் போட்டு காண்பித்து வருகின்றன.
அத்தனை மீடியாக்களும் என் திறமையை மட்டும் இல்லாமல் என் நேர்மைக்கும் தலைவணங்குவதால்தான் 25 ஆண்டுக்கும் மேல் என்னால் இந்தத் துறையில் நிலைத்திருக்க முடிகிறது….
பணத்தையும், பதவியையும் காட்டி முன்னுக்கு வருபவர்களின் வாழ்வு புற்றீசல் தான்.’ என்றேன்.
அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஒப்புக்கு வெறுமையாக சிரித்தார்கள். அதற்குள் ஒலிபெருக்கி எங்களை அழைக்க மேடைக்குச் சென்றோம்.
நேற்று தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எழுத்தாளர் ஒருவர் சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்காக இமெயில் செய்திருந்தார். நான் சொன்ன நேரத்துக்கு போனிலும் தொடர்புகொண்டார்.
இவரை எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் இல்லை. முகநூலில் அவ்வப்பொழுது அவர் பதிவிடும் கட்டுரைகளை படித்திருக்கிறேன். அவ்வளவுதான்.
அவருடைய சந்தேகங்களுக்கான பதிலை நான் சொன்னவுடன் அவர் சொன்ன தகவல்கள் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவர் சிங்கப்பூரில் பணியில் இருந்தபோது எல்லா நூலகங்களிலும் என்னுடைய பல புத்தகங்கள் இருந்ததை பார்த்திருப்பதாகப் பெருமையுடன் சொன்னார்.
நான் எழுதும் புத்தகங்கள், என் காம்கேர் நிறுவனம், உழைப்பு, திறமை, அப்பா அம்மா வளர்ப்பு இத்தனையையும் நுணுக்கமாக கவனித்துச் சொன்னதோடு, நான் அவருக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றார்.
அவரது மகனுக்கும், மகளுக்கும் என்னையே உதாரணம் காட்டிப் பேசுவதையும் நம்பிக்கை மிளிரச் சொன்னார்.
எழுத்து, புத்தகம், வாசிப்பு இப்படியாக பேச்சு வந்தபோது, ‘இதுவரை நானாகச் சென்று யாரிடமும் என் எழுத்துக்களை பிரசுரம் செய்யுங்கள் என்று வார்த்தை அளவில்கூட கேட்டதில்லை… என் திறமைக்கான அங்கீகாரம் எல்லா விதங்களிலும் தானாகவே என்னை நோக்கி வந்தது’ என்றேன்.
உங்கள் உழைப்பும் திறமையும் எனக்குத் தெரியும் மேடம். சிங்கப்பூரிலேயே அதை கண்கூடாகப் பார்த்து தெரிந்துகொண்டேன் என்றார்.
‘எப்படி?’ என்றேன் ஆர்வத்துடன்.
சிங்கப்பூர் தமிழ் சங்கத்துக்கு ஒரு நிகழ்ச்சிகாக திரு. காந்தி கண்ணதாசன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது அவரிடம் இவர் என் புத்தகங்கள் குறித்துப் பேசினாராம்.
அப்போது திரு.காந்தி கண்ணதாசன், ‘காம்கேர் புவனேஸ்வரியின் புத்தகங்களை நாங்கள் நிறைய வெளியிட்டுள்ளோம்’ என்று பெருமையுடன் சொன்னாராம்.
திரு. காந்தி கண்ணதாசன் அவர்கள் நான் புத்தகம் வெளியிட ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை எனக்குள் இருக்கும் திறமைக்கும் என் நேர்மைக்கும் மதிப்புக்கொடுத்து என்னைப் பெருமைப்படுத்துவது எனக்கும் மகிழ்ச்சியே.
இப்படியாகத் தொடர்ந்த எங்கள் பேச்சுவார்த்தை, நம் திறமையும் உழைப்பும் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அவை காற்றில் கலந்து நம் பெருமையை உலகமெங்கும் சொல்லிக்கொண்டே இருக்கும் என்ற என் ஆழமான நம்பிக்கையை மேலும் உறுதி செய்தது.
திரும்பவும் சொல்கிறேன்…. நம்மிடம் இருக்கும் திறமையிலும், உழைப்பிலும் நேர்மை இருக்குமேயானால் நாம் யாருக்கும் தலைவணங்க வேண்டியதில்லை.
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
பிப்ரவரி 26, 2019
ஆன்லைனில் தினசரி டாட் காமில் படிக்க… https://dhinasari.com/?p=71151
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் பிப்ரவரி 26, 2019