கற்பது மட்டுமே கல்வியாகுமா?

திருத்தணி ஸ்ரீசுப்ரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில்…

பிப்ரவரி 25,26,27 தேதிகளில் தொடர் தொழில்நுட்பக் கருத்தரங்கம்…

முதல் நாள் நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 25 திங்கள் அன்று தொடங்கியது.

காலை, மாலை என இரு வேலையும்

‘ஆன்லைனில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு’கருத்தரங்கில் தொழில்நுட்பத்துடன் வாழ்வியலையும் கலந்து இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினேன்.

3 நாட்கள் 12 மணிநேரங்கள், 600 மாணவர்களைச் சந்திக்கும் நல்ல வாய்ப்பு!

அந்தக் கல்லூரியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் கொஞ்சம் தயங்கினேன். மாணவர்கள் அமைதியாக உரையைக் கேட்பார்களா என்ற தயக்கம். ஆனால் கல்லூரி முதல்வர், “நீங்கள் அமைதியாகக் கருத்தரங்கை நடத்துவதற்கு நாங்கள் பொறுப்பு” என்று சொன்னார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கல்லூரி முதல்வர், ‘வீடு என்றிருந்தால் உறவினர்கள் வந்துபோக இருந்தால்தான் அழகு. அதுபோல கல்லூரி என்றிருந்தால் கற்றறிந்த அறிஞர்கள் வந்துபோக இருந்தால்தான் பேரழகு. அப்போதுதான் நல்ல விஷயங்கள், தேவையான செய்திகள், லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை கற்றுக்கொள்ள முடியும். அப்படி அறிஞர்கள் நம் கல்லூரிக்கு தயங்காமல் வர வேண்டும் என்றால் மாணவர்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்புக்கொடுக்க வேண்டும்…

இது உங்கள் இடம். இங்கு வருபவர்கள் உங்கள் விருந்தினர்கள். நண்பர்கள் என்றுகூட வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் இடத்துக்கு வரும் நண்பர்களை, விருந்தினர்களை எப்படி அன்புடன் நடத்துவீர்களோ அப்படி நடத்துங்கள்’ என்று அழகாக அவர்கள் பாணியிலேயே பேசி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

இந்தக் கல்லூரி முதல்வர் இருகண் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி. தமிழ்ப் பேராசிரியராக தன் பணியைத் தொடங்கிய இவர் தற்சமயம் அரசுக் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிவருகிறார். தமிழில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

2003-ம் ஆண்டில் இருந்தே பார்வையற்றவர்களுக்கு உதவும் திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள் (Screen Recognition Software) மூலம் கம்ப்யூட்டரில் எம்.எஸ்.வேர்ட், எக்ஸல் போன்றவற்றை பயன்படுத்தி வருவதோடு, இன்டர்நெட்டையும் திறம்பட கையாள்கிறார்.

தான் கற்றறிந்த தமிழை வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துடன் இணைத்துப் பயன்படுத்தி தன்னை அவ்வப்பொழுது அப்டேட் செய்து வருவதால்தான் இவரது வளர்ச்சி சாத்தியமாகி  பலருக்கும் முன்னுதாரணமாகியுள்ளது.

வாழ்வியல் குறித்துப் பேசும்போது கல்லூரி முதல்வரையே உதாரணமாக்கினேன்.

சூழலை மடைமாற்றும் யுக்தி!

 உணவு இடைவேளையில் கல்லூரி முதல்வருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர், ‘மாணவர்களை அறிவுரைகளால் நல்வழிப்படுத்துதல் என்பது சாத்தியமில்லை. அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனநிலையைக் கடந்து விட்டார்கள்.

அவர்களை நல்வழிப்படுத்த கல்லூரிக்குள் அவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அவற்றைத் தலைமைத் தாங்கி நடத்த  வெளியில் இருந்து அறிஞர்களை அழைப்பதன் மூலம் மறைமுகமாக நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டுவர முயசிக்கலாம்.

அறிஞர்களும், கலைஞர்களும் கல்லூரிக்குள் இருக்கின்ற நாட்களில் மட்டுமாவது அவர்களுக்குமுன் நல்ல மாணவர்களாக நடந்து பெயரெடுக்க வேண்டும் என்ற உணர்வில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் துடுக்குத்தனத்தைக் குறைத்துக்கொள்ள வாய்ப்புண்டு.

நல்ல நிகழ்ச்சிகள், கற்றறிந்த பெரியோர்கள், தினசரி வகுப்புச் சூழல் மறைந்து கலகலவென்று மாறுபட்ட சூழல் போன்றவை அவர்கள் மனதுக்குள் மாற்றத்தை உண்டு செய்யும் என்ற நம்பிக்கையில்தான் நான் இதுபோல பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறேன்.

கம்ப்யூட்டர் தொழில்நுட்ப கருத்தரங்கம், இசை நிகழ்ச்சி, அறிவியல் நிகழ்ச்சி என அவ்வப்பொழுது ஏதேனும் ஒரு நிகழ்ச்சி…’ என்றார்.

மாணவர்களுக்கு நேரடியாக அறிவுரை சொல்லித் திருத்துவது ஒரு வகை.  நல்லவற்றை கொஞ்சம் கொஞ்சமாக  உள்ளே கொண்டு வருவதன் மூலம் தேவையில்லாதவை தானாகவே வெளியேறுவதற்கு வழிவகை செய்வது என்பது மாணவர்களை நல்வழிப்படுத்த மறைமுகமான ஏற்பாடு. முன்னதைவிட பின்னதில் பலனை அதிக சதவிகிதம் எதிர்பார்க்கலாம்.

ஏனெனில் அறிவுரை என்பது எல்லா வயதினருக்குமே கசப்பான ஒன்று. சூழலை மடைமாற்றிச் செல்வது அறிவு சார்ந்த செயல்பாடு.

நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் நான் நினைத்ததைவிட படு அமைதி.

‘உங்கள் உரையினால்தான் மாணவர்கள் கட்டுண்டிருந்தனர்’ என்று முதல்வர் சொன்னபோது தொடர்ச்சியான உரையினால் ஏற்பட்ட உடல்சோர்வு கூட என்னைவிட்டு மறைந்தது.

உண்மையில் மாணவர்களின் அமைதிக்குக் காரணம் என் உரை என்பதைவிட கல்லூரி முதல்வரின் அணுகுமுறை என்றே சொல்ல வேண்டும்.

கல்விப் பிரிவு ஏற்படுத்தும் குணநலன்கள்

பி.ஏ ஹிஸ்டரி, பி.ஏ எகனாமிக்ஸ், பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.ஸி கணிதம், பி.சி.ஏ என மாறி மாறி வெவ்வேறு குரூப் மாணவர்கள் காலையிலும் மாலையிலும் நிகழ்ச்சிக்கு வந்தார்கள்.

ஹிஸ்டரி மற்றும் எகனாமிக்ஸ் மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முன்கூட்டியே என்னை எச்சரித்தார்கள். ‘மேடம் இந்த குரூப் மாணவர்களை கட்டுப்படுத்துவது கடினம்… நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்… கவலைப்பட வேண்டாம்…’ என்று பலத்தப் பீடிகைப் போட்டார்கள்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘ஏன் இந்த மாணவர்கள் மட்டும் இப்படி?’ என்றேன்.

‘பி.எஸ்.ஸி படிப்பவர்கள் பெரும்பாலும் +1,+2-வில் சயின்ஸ் குரூப் எடுத்து முனைப்போடு படித்திருப்பார்கள். நன்றாக படிக்கின்ற மாணவர்களாக இருப்பார்கள். எதிர்காலத் திட்டங்களுடன் அந்தப் பிரிவில் சேர்திருப்பார்கள்.

பி.காம் படிப்பவர்களும் +1,+2-வில் காமர்ஸ் குரூப் எடுத்து அக்கவுண்டன்ஸியில் உயரிய நிலைக்கு வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்திருப்பார்கள்.

தமிழ், ஆங்கிலம் என்ற மொழிப் பாடங்களை எடுப்பவர்கள் இயல்பாகவே சமர்த்தாக அமைதியாக இருப்பார்கள்.

ஆனால் எகனாமிக்ஸும், ஹிஸ்டரியும் படிப்பவர்கள் +1,+2 விலேயே படிப்பில் நாட்டமில்லாமல் படித்திருப்பார்கள். அதனால் கல்லூரிக்குள் நுழையும்போதே பெரிய அளவில் முனைப்பு ஏதும் இல்லாமல் துடுக்காகவே இருப்பார்கள்…’ என்று கல்லூரியில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்விப் பிரிவு எந்த அளவுக்கு அவர்களின் குணநலன்களை நிர்ணயிக்கிறது என்ற மிகப்பெரிய உளவியலைச் சொன்னார்கள்.

‘தெரியாததையும் தெரிந்துகொள்ளும்’ கண்ணோட்டம்

தினமும் நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது ஓர் உயர்தர சைவ உணவகத்தில் டிபன் சாப்பிட்டோம். அந்த ஓட்டலில் சப்ளையர்கள் அனைவரும் பெண்களே. அவர்களுக்கு 20,21 வயதுதான் இருக்கும்.

விதவிதமான சட்னி. அதில் ஒன்று என்ன வகை என தெரியாததால் எங்களுக்கு சப்ளை செய்த பெண்ணை அழைத்து கேட்டேன்.

கொஞ்சம் தடுமாறிவிட்டு ‘தக்காளி சட்னி’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஆனால் எனக்கு அந்த சட்னி குறித்த சந்தேகம் தீர்ந்தபாடில்லை. அதற்குள் சூப்பர்வைசர் அருகில் வந்து, ‘கடலை சட்னி’ என்றார்.

நல்ல சுவையாக இருக்கிறது என சொல்லிவிட்டு அவரிடம்  “குறையாகவோ, குற்றமாகவோ எடுத்துக்கொள்ளாதீர்கள். நல்ல நோக்கத்தில்தான் சொல்கிறேன்… இந்த சப்ளையர்களுக்கு கொஞ்சம்  பயிற்சி அளிக்க வேண்டும்…’ என்றதோடு நேற்றும் இதே ஓட்டலில் ஒரு சப்ளையரால் ஏற்ட்ட அனுபவத்தைப் பகிர்ந்தேன்.

எங்களுடன் சாப்பிட வந்திருந்த கல்லூரி முதல்வருக்காக  சாப்பிட்டவுடன் கை சுத்தம் செய்ய ‘ஃபிங்கர் பவுள்’ கேட்டிருந்தோம்.

பவுளில் வழிய வழிய தண்ணீர். எப்படி தண்ணீர் வெளியில் வழியாமல் கைகளை சுத்தம் செய்வது?

இன்று சட்னி வகைக்கு பதில் கூறுவதில் அவருடைய முனைப்பும் செயல்பாடும். தெரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்டுச் சொல்லி இருக்கலாம். ஆனால் முயற்சிக்கவில்லை.”

இதை கேட்ட சூப்பர்வைசர், ‘மேடம் இவங்க எல்லோருமே டீச்சர் ட்ரெயினிங், நர்சிங், பி.ஏ இப்படி டிகிரி முடிச்சுட்டு வந்திருக்காங்க… நான் படிக்காத குறைக்கு ஓட்டலில் வேலை செய்கிறேன். இவங்க படிச்சவங்க தானே… எங்காவது ஆஃபீஸ் வேலைக்கு முயற்சி செய்யலாம் இல்லையா… சொன்னால் யார் கேட்கிறார்கள்…’

என்று சொல்லிவிட்டு முத்தாய்ப்பாக, “படிச்சவங்க இல்லையா மேடம் அதான் தானாகவும் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை… கேட்டும் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. இதுவே படிக்காதவர்களாக இருந்திருந்தால் கூச்சம் இல்லாமல் நீங்கள் ‘என்ன சட்னி’ என்று கேட்ட அடுத்த நொடி ‘அண்ணே… இது என்ன சட்னி…’ என சூப்பர்வைசர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு பதிலளித்திருப்பார்கள்…” என்றார்.

படிப்பு ‘தெரியாததையும் தெரிந்துகொள்ளும்’ ஆர்வத்தையும் கண்ணோட்டத்தையும் அல்லவா ஏற்படுத்த வேண்டும்.

ஆனால் இங்கு ஏன் எல்லாமே ‘உல்ட்டாவாக’ இருக்கிறது?

மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கச் சென்ற நான் இந்த மூன்று நாட்களில் ‘புத்தகங்களைப் படிப்பது மட்டுமே கல்வியாகாது…’ என்ற பேருண்மையை வெவ்வேறு சம்பவங்கள் மூலம் கற்றுக்கொண்டு திரும்பினேன்.

கற்றுக்கொடுக்கச் சென்று, கற்றுக்கொண்டு வந்தது புது அனுபவம்.

யோசிப்போம்!

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
பிப்ரவரி 27, 2019

 

(Visited 94 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon