இங்கிதம் பழகுவோம்[22] சோடச உபசாரம்! (https://dhinasari.com)

எங்கள் குடும்ப நண்பர். வயது 80+ இருக்கும். எங்கள் அப்பா அம்மாவுடன் பணிபுரிந்தவர். என் சிறுவயது முதலே அவரை தெரியும். அவ்வப்பொழுது போன் செய்து பேசுவார்.

என் மீது தனி பாசம் உண்டு. அவர் சொல்வதை பொறுமையாக காதுகொடுத்து கேட்பதும் ஒரு காரணம்.

நானும் என் தம்பி தங்கையும் சிறுவயதில் 5 வருடங்கள் கர்நாடக இசை கற்றோம். பிறகு வீணை கொஞ்ச காலம், தம்பி மட்டும் மிருதங்கம், மோர்சிங்…. என்பதால் இசை குறித்து ஓரளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறேன்.

நேற்று தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சேனலில் வீணை கச்சேரி. வாசித்தவர் பெயரும் என் பெயராக இருந்ததால் என் நினைவு வந்து என்னுடன் போன் செய்து பேசினார்.

வீணைக்கு முன் இருந்த மைக்கின் வால்யூமும் அது சார்ந்த சவுண்ட் நுட்பமும் பக்கவாத்தியங்களைவிட குறைவாக இருந்ததால் பக்கவாத்தியங்களின் இசை டாமினேட் செய்தன. வீணையின் இசையை முழுமையாக ரசிக்க முடியவில்லை. அது குறித்து சில நிமிடங்கள் பேசினார்.

ஆடியோ டெக்னீஷியன்களுக்கு அந்தத் துறை குறித்த ஞானம் மட்டும் போதாது. எந்த நிகழ்ச்சிக்கு செல்கிறார்களோ அதுகுறித்த முழுமையான ஞானம் இல்லாவிட்டலும், அடிப்படையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.

எத்தனை உயரிய ஞானம்.

இப்போ வீணை பிராக்டிஸ் செய்கிறாயா? என கேட்டார்.

‘இல்லை… நேரம் சரியாக இருக்கிறது… கண் விழிப்பதே லேப்டாப்பில். அப்புறம் ஆஃபீஸ். வரிசையாக தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள். இடையே என் எழுத்து, பேச்சு, படிப்பு, கிரியேஷன் என சென்றுகொண்டிருக்கிறது…’ என்றேன்.

‘ஆமாம். வீணை என்றால் அதற்கு சகல மரியாதைகளையும் கொடுத்து பக்தியுடன் எடுக்க வேண்டும்… ஏதோ ஸ்மார்ட்போனை எடுத்தோமா, வாட்ஸ் அப்பில் டைப்பினோமான்னு இருக்க முடியாது…’ என்று யதார்த்தத்தைச் சொன்னதோடு கூடுதலாக ஒரு Add-On தகவலையும் பகிர்ந்தார்.

‘பொதுவாக வயதானவர்களுடன் ஏன் இளைஞர்கள் பேசுவதில் ஆர்வம் காட்டுவதில்லை தெரியுமா…. அவர்களை பார்த்தால் மரியாதை கொடுக்க வேண்டும்… பொறுமையாக உட்காரச் சொல்லி ஆசுவாசப்படுத்த வேண்டும். எப்படி இருக்கிறீர்கள் என கனிவாக உபசரிக்க வேண்டும்… இப்படி தங்கள் நேரத்தில் (!) கொஞ்சம் செலவிட்டு அவர்கள் முகம் பார்த்துப் பேச வேண்டும்.

இதுவே இளம் வயதினரைப்  பார்த்தால்  ‘ஹாய்’  சொல்லிவிட்டுச் சென்றுகொண்டே இருக்கலாம் அல்லது பார்த்தும் பார்க்காமல் கூட செல்லலாம்? இத்தனை சோடச உபசாரம் தேவையில்லையே’

என்ன அற்புதமான ஒப்பீடு.

சென்ற முறை அவர் போன் செய்திருந்தபோது நான் மீட்டிங்கில் இருந்ததால் பேச முடியவில்லை என்பதற்கு விளக்கம் கொடுத்தேன்.

‘எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்துத்தான் புரியவைக்க வேண்டுமானால் அந்த நட்பில் உண்மை இருக்காது. உன்னை என்னால் புரிந்துகொள்ள முடியும்.’ என்றார்.

எத்தனை உயரிய  பண்பாடு.

இவரிடம் நான் பேசியது 15 நிமிடங்கள். அதுவும் போனில். முகம் பார்க்கவில்லை. அவர் சொல்வதை காதுகொடுத்து மட்டுமே கேட்டேன். கற்றுக்கொண்டதோ வாழ்க்கைக்கு அத்தியாவசியமான முத்தான மூன்று விஷயங்கள்.

எல்லாவற்றையும் அவசரகதியில் கடந்து சென்றுகொண்டிருக்கும் நாம், இயற்கை இலவசமாகக் கொடுத்துள்ள அறிவிற்சிறந்த மூத்தோர்களையும் பண்பாளர்களையும்  கண்டுகொள்ளாமல் ஏதேதோ கவுன்சிலிங் வகுப்புகளுக்கு சென்று பயிற்சி எடுக்கிறோம்.

கவுன்சிலிங் வகுப்புகளுக்கு பணத்தைக்கொட்டி செலவு செய்யும் நேரத்தை சோடச உபசாரம் செய்ய செலவிடலாமே!

யோசிப்போம்!

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
மார்ச் 5, 2019

ஆன்லைனில் தினசரி டாட் காமில் படிக்க… https://wp.me/p5PAiq-j76

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் மார்ச் 5, 2019

(Visited 91 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon