பள்ளி பாடத்திட்டத்தில் நான் எழுதிய வாழ்வியல் புத்தகங்கள்!

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என் சாஃப்ட்வேர் நிறுவனம் மூலம் நான் பெற்றுவரும் தொழில்நுட்ப அனுபவங்களை புத்தகங்களாக அந்தந்த காலகட்டங்களிலேயே பதிவு செய்து வருகிறேன். அது எண்ணிக்கையில் 100-ஐத் தாண்டியதும் அனைவரும் அறிந்ததே.

என்னுடைய இந்த நீண்ட தொழில்நுட்பப் பயணத்தில் என் படைப்புகளுக்கு (புத்தகங்கள், ஆடியோ வீடியோ படைப்புகள், அனிமேஷன் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்) சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி போன்றவை அங்கீகாரம் கொடுத்து வருகிறது.

அவற்றில் பல கல்லூரிகளில் நேரடியான பாடதிட்டமாகவும்,  சில சமூக  செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டமாகவும் உள்ளன.

தவிர பேரண்டிங், இளைய தலைமுறை, வாசிப்பு, இலக்கியம், தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், ஆன்மிகம் என்று என் வாழ்வியல் அனுபவங்களை  புத்தகங்களாகவும் அனிமேஷன் படைப்பாகவும் ஆவணப்படமாகவும் வெளியிட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே.

நான் எழுதிய 30-க்கும் மேற்பட்ட வாழ்வியல் புத்தகங்களில் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு புத்தகத்தை அடுத்த கல்வி ஆண்டில் பாடதிட்டமாக வைப்பதற்கு  ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்வதற்காக கீழ்க்காணும் 4 புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளேன்.

பள்ளியில் தமிழை பாடத்திட்டமாக படிப்பதற்கே யோசிக்கும் இந்தநாளில் இதுபோன்ற வாழ்வியல் புத்தகங்களை பாடதிட்டமாக வைப்பதற்கும் முயற்சி எடுத்திருக்கும் அந்த பள்ளி தலைமை ஆசிரியரை பாராட்ட வேண்டும்.

  1. இப்படிக்கு அன்புடன் மனசு
  2. குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட்
  3. மனதை Format செய்யுங்கள்
  4. திறமையை பட்டை தீட்டுங்கள்

 

ஏற்கெனவே, உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம பள்ளிகளில் நான் எழுதிய  ‘குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட்’ என்ற புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் விஜயபாரதம் பத்திரிகையில் ஒரு வருட காலம் தொடராக வெளிவந்தபோது அவற்றை அவர்கள் மாணவர்களுக்காக பயன்படுத்தியதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

‘குழந்தைகளை வளர்க்க வேண்டாம், வளர விடுங்கள்’ என்ற கோணத்தில் அத்தனையும் வளரும் குழந்தைகள் நலனுக்காக எழுதப்பட்ட கட்டுரைகள்.

இப்போது எந்தப் புத்தகம் தேர்வு செய்யப்படுகிறது என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் புத்தகத்தின் பெயருடன் பள்ளியின் பெயரையும் வெளியிடுகிறேன்.

அனைவருக்கும் நன்றி

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 3, 2019

 

 

(Visited 59 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon