இங்கிதம் பழகுவோம்[27] 1992 முதல் 2019 வரை தொழில்நுட்பப் பயணம் (https://dhinasari.com)

1992-ஆம் ஆண்டு எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மூலம் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை,  மளிகை கடை முதல் மருத்துவமனைகள் வரை  எல்லா விதமான நிறுவனங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் முயற்சியில் இறங்கினோம்.

அப்போதெல்லாம் வீடுகளுக்கு வரும் மருத்துவர்களைப் பார்த்து பயப்படும் குழந்தைகளைப் போலவே கம்ப்யூட்டர் என்ற வார்த்தையுடன் பேச ஆரம்பிக்கும் என்னைப் பார்த்தும் பயந்தார்கள்.

ஏனெனில் அப்போது நம் நாட்டில் கம்ப்யூட்டர்  என்பது படித்து பட்டம் பெற்றவர்களும், ஆங்கிலம் அறிந்தவர்களும், இளைஞர்களும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய  ஒன்று என்ற பரவலான கண்ணோட்டம் இருந்து வந்தது.

அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டருடன் மக்கள் நெருக்கமாக ஒரே ஒரு வழிதான், அது மொழியின் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதை புரிந்துகொண்டோம்.

தமிழில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வைக்கும் நுட்பத்தை ஆராய்ந்தோம். தமிழ் ஃபாண்ட்டுகளை உருவாக்கி  சாஃப்ட்வேர்கள் தயாரித்து அவற்றின் மூலம் நிறுவனங்களை அணுகி வெற்றி பெற்றோம்.

தமிழிலேயே கம்ப்யூட்டரை பயன்படுத்த தமிழ் ஃபாண்டுகள், தமிழிலேயே சாஃப்ட்வேர்கள் என  தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்து வெற்றி பெற்றோம்.

1992- 2000 வரை தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு காம்கேருக்கு உண்டு.  அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல் இன்றுவரை அந்த பணியை தொடர்ச்சியாகச் செய்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

2000-2010 வரை தொழில்நுட்பம் வளர வளர நம் மக்களும் அதனுடன் கூடவே வளர்ந்தார்கள்.

2010-2019 வரை தொழில்நுட்பம் நம் மக்களை ‘தரதர’ வென இழுத்துச் செல்லாத குறையாக இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.

1992-வில் ஆரம்பித்த எங்கள் காம்கேர் மூலமான என் பயணம் இன்றுவரை தொடர்கிறது கால மாற்றத்துக்கு ஏற்ப வெவ்வேறு கோணங்களில்…

காம்கேர் மூலம் நான் தயாரிக்கின்ற சாஃப்ட்வேர்கள், அனிமேஷன் படைப்புகள், ஆப்கள் மூலம் நான் பெறும் தொழில்நுட்ப அனுபவங்களை எழுத்து, பேச்சு என பல வடிவங்களில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் என் ஒட்டுமொத்த மகிழ்ச்சியே அடங்கியுள்ளது.

இதோ இன்று…

‘பிளாக் இனி வேலை செய்யாது’ என்ற புரளி ஃபேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில்….

அது உண்மை இல்லை என்பதற்கு ஒரு கட்டுரை தயாரித்து என் வெப்சைட்டில் பதிவாக்கினேன்.

அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு பலர் அவர்கள் பிளாக் முகவரியை எனக்கு அனுப்பி எப்படி இருக்கிறது என பார்த்து என் கருத்தைச் சொல்லச் சொல்லி கேட்டிருந்தனர்.

முதன்முதலில் என் பதிவுக்கு கமெண்ட் செய்து தன் பிளாக் முகவரியை அனுப்பியவர் திரு.வெங்கட் ரமணி அவர்கள். அவரது வயது 80+ என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து என் பார்வைக்கு அனுப்பிய பிளாகுகளை பராமரித்து வருபவர்கள் அனைவருமே 70 வயதைக் கடந்தவர்கள்.

தொழில்நுட்பத்தை வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று 1992-ல் நான் கண்ட கனவு மெய்ப்பட்டுள்ளதற்கு இதுஒன்றே போதாதா?

இப்போது சொல்லுங்கள் தொழில்நுட்பம் நம் மக்களை இழுத்துச் செல்கிறதா அல்லது நாம் தொழில்நுட்பத்தின் பின் செல்கிறோமா?

(பிளாக் இனி கிடையாது என்ற புரளிக்கான பதில் தேவைப்படுபவர்கள் இந்த லிங்கில் http://compcarebhuvaneswari.com/?p=3813)

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஏப்ரல் 9, 2019

ஆன்லைனில் தினசரி டாட் காமில் படிக்க… https://wp.me/p5PAiq-jMS

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் ஏப்ரல் 9, 2019

(Visited 71 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon