கனவு மெய்ப்பட[22] – பெற்றோர் VS பிள்ளைகள் (minnambalam.com)

தினந்தோறும் காலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் தினம் ஒரு செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்ற வாழ்த்துடன் பதிவிட்டு வருகிறேன்.

எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான் என்றாலும் அதை எல்லா தரப்பினருக்கும் புரியும்படி சுவாரஸ்யமாகச் சொல்வதால் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

எந்த ஒரு படைப்பானாலும் அது வரவேற்பைப் பெற நிறைய காரணிகள் இருந்தாலும் முக்கியாமாக இரண்டு காரணிகளைச் சொல்லலாம். அவை:

நம்மால் செய்ய முடியாத விஷயங்களை அந்தப் படைப்பின் மூலம் உணர வேண்டும் அல்லது நம்மிடம் பற்றாக்குறையாக உள்ள விஷயங்களை அந்தப் படைப்பின் மூலம் பெற்றிருக்க வேண்டும்.

அந்த வகையில் ‘குடும்பம்’ என்ற அமைப்புக்குள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பெருகிப்போன இடைவெளியை பேசிய பதிவுகளே அதிக வரவேற்பைப் பெற்றன.

அவற்றுள் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

எது இன்டிபென்டன்ட்?

வெளிநாட்டில் வாழும் ஒரு இந்திய பெற்றோரும், இந்தியாவில் வாழும் ஒரு பெற்றோரும் பேசிக்கொள்கிறார்கள். இருவருக்கும் ஒத்த வயதுடைய குழந்தைகள் இருக்கிறார்கள்.

பேச்சு சாப்பாட்டைப் பற்றி வந்தது.

‘உங்கள் குழந்தைகள் என்ன சாப்பிடுவார்கள்?’ – இந்தியாவில் வாழும் இந்தியத் தாய்.

‘பொதுவா வெளியில் சாப்பிடுவதில்லை. வீட்டில் சமைப்பதைத்தான் சாப்பிடுவார்கள். நான் இல்லாத நேரத்தில் அவரவர்களுக்கானதை அவர்களேகூட சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன். அதனால் வெளியில் சாப்பிடுவதை விரும்புவதில்லை என் குழந்தைகள்…’ – அமெரிக்க வாழ் இந்தியத் தாய்.

‘என் பிள்ளைகள் வெளியில் ஹோட்டலில் சாப்பிடுவதையே விரும்புவார்கள். நான் ஆஃபீஸில் இருந்து வருவதற்கு லேட்டானால் ஸ்வகி, ஊபர் ஈட்ஸ் என ஆப்களில் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிடுவார்கள். எனக்கு வேலை வைக்க மாட்டார்கள்…. ரொம்ப Independent!’ – இந்தியாவில் வாழும் இந்தியத் தாய்.

‘அப்படியா… இங்கும் அதுபோன்ற டோர் டெலிவரி சர்வீஸ்கள் உண்டு. ஆனாலும் என் பிள்ளைகள் வீட்டுச் சாப்பட்டையே விரும்புவார்கள். தேவைப்பட்டால் தங்களுக்குப் பிடித்ததை தாங்களே தயார் செய்து கொள்வார்கள். ரொம்ப Independent!’ – அமெரிக்க வாழ் இந்தியத் தாய்.

இன்டிபென்டன்ட், டிபன்டென்ட்க்குமான புரிதல் ஒரு இந்தியாவில் வசிக்கும் இந்தியத் தாய்க்கு எப்படி இருக்கிறது…  அமெரிக்காவிலேயே வசிக்கும் இந்தியத் தாய்க்கு எப்படி இருக்கிறது… பாருங்கள்.

இங்கு பேசிய இரண்டு குடும்பங்களில் இந்தியாவிலேயே வசிக்கும் பெற்றோர்தான் தங்கள் பிள்ளைகளை டிபன்டன்டாக வளர்கிறார்கள். ஆனால் சொல்லிக்கொள்வதோ ‘என் பிள்ளைகள் ரொம்ப இன்டிபன்டென்ட்’!

பெற்றோர் இல்லாத நேரத்தில் தங்களுக்குத் தேவையானதை தாங்களே தயாரித்து சாப்பிடும் பழக்கம் உள்ள குழந்தைகள் இன்டிபென்டன்டா அல்லது சமையல் அறை எங்கிருக்கிறது என்றுகூட தெரிந்து வைத்திருக்காத குழந்தைகள் இன்டிபென்டன்டா?

நம் நாட்டில் இப்படித்தான்,

தங்கள் குழந்தைகளுக்கு சமையல் அறை எங்கிருக்கிறது என்றே தெரியாது…

எங்கு செல்கிறான் என்றே தெரியாது நாள் முழுவதும் பிசியா இருக்கான்…

படிப்பு படிப்புன்னு எப்பவும் குரூப் ஸ்டடிதான்…

பாவம் வாரம் முழுவதும் ஓயாத வேலை. சனி ஞாயிறு அவன்(ள்) இஷ்டப்படி இருக்கட்டுமே என நாங்கள் அவனை/அவளை எங்கு செல்கிறாய் என கேட்பதே இல்லை…

என்று பிள்ளைகளை சுதந்திரமாக வளர்ப்பதாய் நினைத்து அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவதே இல்லை பல பெற்றோர்கள்.

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் உள்ள பெற்றோருக்கு எது Dependent, எது Independent என்பதற்கானப் புரிதலில் தெளிவுள்ளது.

மாற்றம் பெற்றோரில் இருந்துத் தொடங்க வேண்டும்!

குடும்பங்களை காத்த ‘தொண தொணப்புகள்’!

கூட்டுக் குடும்பங்கள் இருந்தபோது வீடுகளில் அப்பா, அம்மாவுடன் பாட்டி தாத்தா அத்தை மாமா என்றிருந்தார்கள்.

சென்ற தலைமுறையில் அம்மா அப்பா தாத்தா பாட்டி என்றானது.

இப்போது அப்பா அம்மா என்ற அளவில் சுருங்கியுள்ளது.

அப்பா அம்மாவுடன் சேர்ந்து மற்ற உறவுகளும் இருக்கும்போது குழந்தைகளிடமும் பேச்சு வார்த்தை இருக்கும்.

பேரப் பிள்ளைகளிடம்…

‘என்னடா இன்னிக்கு லேட்டு…’

‘ஏன்டா இன்னிக்கு காலேஜ் கிடையாதுன்னே… எங்க போயிட்டு வர்றே…’

‘இன்னிக்கு ஏன் இந்த டிரஸ்…’

இப்படி பாட்டி தாத்தாக்கள் ஏதேனும் கேள்விகள் கேட்டபடி இருப்பார்கள்.

பிள்ளைகள் பதில் சொல்லவில்லை என்றாலும் ‘பாட்டி தாத்தா கேட்கிறார்களே பதில் சொல்லேண்டா’ என்று பெற்றோரும் கடிந்துகொள்வார்கள். அவர்கள் தங்கள் மனதுக்குள் இருக்கும் கேள்விகளை தாத்தா பாட்டிக்கு பதில் சொல்வதன் மூலம் பெற நினைக்கும் ஓர் யுக்தி பெற்றோருக்கு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

மற்றவர்களுக்கு அவை ‘தொண தொணப்பாக’ இருக்கலாம். ஆனால் அதுபோன்ற ‘தொண தொணப்பு’ பேச்சு வார்த்தைகள்தான் குடும்பங்களுக்கு பாதுகாப்பாக இருந்து வந்தன.

வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் வயதானவர்கள் அக்கம் பக்கம் வீட்டுப் பிள்ளைகளையும் பார்த்தபடி அமர்ந்திருப்பார்கள்.

‘ஏன் உன் பெண் இத்தனை லேட்டா வீட்டுக்கு வந்தா… என்ன விஷயம்’

‘உங்க பையனை நேற்று அந்த தெருவில் பார்த்தேனே…’

என அக்கம் பக்கம் வீட்டு மனிதர்களுடனும் பேசுவார்கள். அதனை ‘வம்பு’ என்பார்கள் இன்று.

இதுபோன்ற அக்கம் பக்க வம்பு பேச்சுவார்த்தைகளும், வீட்டிலேயே இருக்கும் தொண தொணப்புகளும்தான் பல குடும்பங்களை பண்புடன் பாதுகாத்து வந்தன.

இன்று ‘பிரைவசி’ என்ற பெயரில் நம் பாதுகாப்பை இழந்து அனைத்தையும் ‘பப்ளிக்’ ஆக்கி திண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

விதை ஒன்றை போட்டால்…

16 வயது மகள், 18 வயது மகன், அப்பா அம்மா என நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம்.

அப்பா, அம்மாவுக்கு ஒரு தனி அறை.

மகளுக்கு ஒரு தனி அறை.

மகனுக்கு ஒரு தனி அறை.

அம்மா மகன் அறைக்குச் செல்கிறார். அப்பா மகள் அறைக்குச் செல்கிறார்.

இருவருமே ஏதோ புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இருவரும் அவர்களை கண்டிக்கிறார்கள்.

‘ஏன் எங்கள் அறைக்குள் எங்கள் பர்மிஷன் இல்லாமல் நுழைந்து எங்கள் பிரைவசியை கெடுக்கிறீர்கள்?’ என மகனும், மகளும் கத்துகிறார்கள்.

அப்பா அம்மா இருவரும் வேதனையுடன் அந்த அறையை விட்டு வெளியேறி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.

அறையின் உள்ளே மகனும் மகளும் ‘பிரைவசியாக’ அமர்ந்துகொண்டு தங்கள் புகைப்படத்தை ‘பப்ளிக்’ செட்டிங்கில் ஃபேஸ்புக்கில் பகிரங்கப்படுத்துகிறார்கள்.

இதில் யாரையும் குறை சொல்வதற்கில்லை. எல்லாம் நாம் ஏற்படுத்திய பழக்கமும், வழக்கமும்தான். திடீரென மாற்றுவது கடினம்.

மாற்றம் தேவை என விரும்பினால், குழந்தைகளின் சிறுவயதில் இருந்தே நல்ல பழக்கத்தையும் வழக்கத்தையும் விதைப்போம்.

விதை ஒன்றை போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?

தவறான வழிகாட்டிகளாகும் போலிப் பெருமைகள்

படித்து முடித்து வேலைக்காக பெங்களூரில் செட்டில் ஆன ஒரு இளைஞர் புகைக்கும் வழக்கத்துக்கு ஆளாகியுள்ளார்.

அதிகம் படிக்காத கிராமத்தில் வாழ்ந்துவந்த பெற்றோரை பெங்களூருக்கு அழைத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டபோது இருவரையும் அழைத்து ‘தான் புகைக்கும் வழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன். என்னால் விட முடியாது. யாராவது பார்த்து சொல்வதற்கு முன் நானே உங்களிடம் சொல்லி விடலாம் என சொல்கிறேன்…’என சொன்னதோடு அவர்களுக்குத் தெரிந்தே வீட்டில் இருக்கும் நாட்களில் தெருவில் நின்று புகைத்துவிட்டு வீடு திரும்புவார்.

இதை அவர் பெற்றோரும் ‘என் பையன் பொய்யே சொல்ல மாட்டான். தனக்கு புகைக்கும் பழக்கம் இருப்பதை எங்களிடம் வெளிப்படையாக சொல்லி விட்டான்…’என பெருமையாக பிறரிடம் சொல்லிக் கொள்வதை கேட்டிருக்கிறேன்.

புகைக்காமல் இருப்பது பெருமையா அல்லது புகைப்பதை தங்களிடம் சொல்லிவிட்டு புகைக்கும் நேர்மை பெருமையா?

இதுபோன்ற பெற்றோர்களின் தவறான பெருமை வார்த்தைகளே பிள்ளைகளுக்கு தவறான வழிகாட்டிகளாகி விடுகின்றன.

யோசிப்போம்!

ஆன்லைனில் மின்னம்பலத்தில் https://minnambalam.com/k/2019/04/06/9

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 22

(Visited 123 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon