கனவு மெய்ப்பட[21] – ‘நோ காம்ப்ரமைஸ்’! (minnambalam.com)

சமீபத்தில் நடிகை நயன்தாரா மீதான வார்த்தை அத்துமீறலை அதே சினிமா துறைச் சார்ந்த ஒரு நடிகர் ஒரு சினிமா மேடையிலேயே விமர்சித்தார்.

இது சினிமா துறைச் சார்ந்த பெண்களுக்கு மட்டுமல்ல. எல்லா துறை சார்ந்த பெண்களுக்கும் பகிரங்கமாக நடக்கின்ற நிகழ்வுகளே. இன்று சமூக வலைதளங்களும் மீடியாக்களும் பெருகி தொழில்நுட்ப உச்சத்தில் இருப்பதால் பெரும்பாலானோருக்கு அது குறித்து கருத்துக்களைப் பகிர ஒரு களமும், தளமும் கிடைத்திருக்கிறது. அது ஒன்றுதான் பெண்கள் விஷயத்தில் ஏற்பட்டிருக்கின்ற முன்னேற்றம்.

பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவியில் இருந்து ஓய்வு பெற்று அதே துறையில் இன்றளவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் ஒரு பெண்மணியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பெயர் ரேணுகா தேவி.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த கல்வி சார்ந்த பின்புலமும் இல்லாமல் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து அந்த பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராகவும் பதவி உயர்வு பெற்று சாதனை செய்தவர் அவர். மொழியியல் மற்றும் தொடர்பியல் புலத்துறையில் புலத்தலைவராகவும் இருந்திருக்கிறார். இதே துறை சார்ந்த மாணவர்களுக்கு முனைவர் பட்டம் பெறுவதற்கு கைடாகவும் இருந்து உதவியிருக்கிறார்.

ஒரு பெண் என்பதாலேயே மேடை நிகழ்ச்சிகளில் அவர் பெயரை கடைசியாக வாசித்து பேச அழைக்கும் சின்னச் சின்ன அவமதிப்புகள் முதல் பல்வேறு அலட்சியப் போக்குகளை எல்லாம் கடந்து முன்னேறிய சாதனைகளை பகிர்ந்துகொண்டார்.

இப்படி கல்வி, சினிமா, அரசியல் என எந்தத்துறை சார்ந்த  பெண்களானாலும் சரி எந்த வயதினராக இருந்தாலும் சரி, அவர்கள் பொதுவாக பணியில் இருக்கும் ஆண்களுக்கும் இருக்கக் கூடிய அலுவலக பாலிடிக்ஸ்களுடன் சேர்த்து பெண்களுக்காகவே சுமத்தப்படும் அலட்சியங்களையும், அவமதிப்புகளையும் கடந்தே வர வேண்டியுள்ளது.

பிரச்சனை இல்லாத இடமேது?

எதற்கு இந்த வம்பு… எதுவுமே வேண்டாம் என வீட்டுக்குள்ளேயே பெண்கள் முடங்கி இருந்தாலும் யாருடைய தொடர்புமே இல்லாமல் தீவில் வசிப்பதுபோல இருந்துவிட முடிகிறதா?

ஈ.பி மீட்டர் ரீடிங் எடுப்பவர்கள், சிலிண்டர் போடுபவர்கள், பால் பாக்கெட் செய்தித்தாள் போடுபவர்கள், கேபிள் டிவி கட்டணம் வசூலிப்பவர்கள், கொரியர் என  எத்தனையோ நபர்களை தினந்தோறும் கடந்துதானே வர வேண்டியுள்ளது.

ஒருமுறை ஒரு பிரபல கொரியர் அலுவலகத்தில் பணிபுரியும் கொரியர் கொடுக்க வந்த நபரால் ஏற்பட்ட மன உளைச்சலை என்னவென்பது?

வீட்டின் உள்ளே இருந்து கொரியர் வாங்க வந்த ஒரு பெண்ணை அவர் நடந்து வருவதைப் போல இடுப்பை ஒடித்து நடித்துக்காட்ட, அந்த பெண்  நடந்ததை உணர்வதற்குள், அவசரமாக கொரியரைக் கொடுத்துவிட்டு ஓடிவிடுகிறார்.

அவர் கொரியர் அலுவலகத்துக்குச் சென்று புகார் அளித்ததும், அவர்கள் மேலிடத்துக்கு தகவல் கொடுத்து, பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்ததும் தனி கதை.

ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக செய்தி ஒன்று டிவியில் ஓடிக் கொண்டிருந்தது. முன்பெல்லாம் கடைக்கு சிறுவர் சிறுமிகள் வந்தால் குழந்தைகள் என பாசத்துடன் சாக்லெட், மிட்டாய் எல்லாம் கொடுத்து அனுப்புவார்கள்.  இன்று குழந்தைகளைக் கூட குழந்தைகளாகப் பார்க்கும் மனோபாவம் போய் வெறும் சதைப் பிண்டங்களாகப் பார்க்கும் கொடூர மனப்பாங்கு எங்கிருந்து வந்தது?

பார்வைகள், வார்த்தைகள், செய்கைகள் என ஏதேனும் ஒரு வகையில் பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒருமுறை சிங்கப்பூரில் இருந்து என்னை சந்திக்க வந்திருந்த ஒரு கிளையிண்ட் ‘உங்கள் நிறுவனம் என்  நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தால் சிங்கப்பூரில் மட்டுமல்ல உலக அளவில் உங்கள் பெயரை கொண்டு சேர்க்கிறேன். உங்கள் திறமை எல்லாம் இங்கேயே முடங்கி உள்ளதே… நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர்…’ என்று புகழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்.

அதுவரை அமைதியாக இருந்த நான்  “உங்கள் புகழ்ச்சிக்கு நன்றி. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. என்னைப் பற்றியும், என் நிறுவனத்தைப் பற்றியும் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது. இன்றும் நான் நானாக இருந்து உலகளாவிய அளவில் பிரபலமாகியிருக்கிறேன்” என்பதற்கான பல சான்றுகளையும் எடுத்துக்கூறி  அவர் புகழாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

தோற்றத்தை வைத்து போற்றுதலும், தூற்றுதலும்!

ஒரு பெண்ணின் ஆளுமையை வீழ்த்த அவர்களைக் குறைகூற செய்திகள் எதுவும் இல்லாதபோது, அவர்கள் தோற்றத்தைக் கையில் எடுத்துக் கொண்டு  சாடுவதுதான் பெரும்பாலானோரின் மனோநிலை.

ஒன்று அழகை வைத்து பெண்களை போற்றுகிறார்கள் அல்லது தூற்றுகிறார்கள்.

பிஜேபி மாநில தலைவர் தமிழிசை அவர்களை அவரது நிறத்தினாலும், சுருட்டை முடியினாலும், உருவத்தினாலும் எத்தனை மீம்ஸ்களில் அவமதித்திருப்பார்கள்.

ஆனால் அத்தனையையும் அவர் சட்டை செய்யாமல் ஒருசில நேரங்களில் அவற்றுக்கு நகைச்சுவையாகக் கூட பதிலளித்திருக்கிறார்.

இவரது சுருட்டை முடிக் குறித்து மீம்ஸ் பற்றி  கேட்டபோது  தமிழிசை சிரித்துக் கொண்டே,  ‘என் முடி சுருட்டை. அதனால் அதை சுருட்டி முடிபவள் நான், பொதுப் பணத்தைச் சுருட்டி முடிபவள் அல்ல’ என்று கூறினார்.

இவர் தோற்றம் குறித்து பேசுபவர்களுக்கு அவர் சப்தமே இல்லாமல் செய்துவரும் மருத்துவ சேவைகள் குறித்துத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள். தெரிந்திருந்தாலும் அவை குறித்து விமர்சிக்க மாட்டார்கள்.

சமீபத்தில் திருமதி தமிழிசை, அவர் கணவர் திரு சவுந்தராஜன் இருவரின் பேட்டி  ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பானது.

இவர் தன் தந்தை வகித்து வந்த காங்கிரஸ் கட்சியில் சேராமல் பிஜேபியில் இணைந்தபோது, இவர் தந்தை இவருடன் ஆறு மாதம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்பதை மிக நெகிழ்ச்சியாக எடுத்துச் சொன்னார்.

இவர் அல்ட்ராஸ்கேன் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.   தஞ்சாவூர் பொது மருத்துவமனையில் நிறுவப்படாமல் இருந்த அல்ட்ராஸ்கேன் உபகரணத்தை நிறுவுவதற்குக் காரணமாக விளங்கியிருக்கிறார்.

கிராமங்களிலும் டயாலிசிஸ் திட்டம் எப்படி உருவானது என்ற கேள்விக்கு சிறுநீரக மருத்துவரான இவரது கணவர்  திரு. சௌந்தர்ராஜன் கூறுகையில்,  “சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்த்தன் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்தார். டீ சாப்பிட்ட அறையிலிருந்து 4 பைப் லைன்கள் செல்வதைப் பார்த்து என்னவென்று கேட்டார்.

அப்போது, 2 மெஷின்கள் வைத்து ஏழைகளுக்கு இலவசமாகவும்  மற்றவர்களுக்கு 200 ரூபாய்க்கும் டயாலிசிஸ் செய்து வருகிறேன். தமிழிசைதான் அதைப் பார்த்துக்கொள்கிறார் என்று அவரிடத்தில் சொன்னேன். உடனடியாக அது பற்றிய அறிக்கை ஒன்று தயாரித்து தருமாறு சொன்னார்.

ஆனால், அதற்குள் அமைச்சரவை மாறிவிட்டது. சுகாதாரத்துறை அமைச்சரும் மாறிவிட்டார். இனிமேல் நமது திட்டம் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு விட்டுவிட்டோம்.

ஒருநாள் திடீரென்று சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா எங்களைத் தொடர்புகொண்டு, ‘உங்கள் திட்டம் குறித்து ஹர்ஷவர்த்தன் குறிப்பு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். டெல்லி வந்து நேரில் விவாதிக்க முடியுமா’ என்று கேட்டார்.

அப்படித்தான் பிரதம மந்திரியின் கிராமங்களிலும் டயாலிசிஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது” என்றார்.

பொதுவெளிக்கு வரும் பெண்களுக்கு குடும்பமும், திருமணமும் தடையாக இருக்கும் என காலம் காலமாகப் பேசப்பட்டுவரும் சூழலில்,  ஒரு பெண் மனது வைத்தால் தன் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்காமல், தன் குடும்பத்தையும் விட்டுக் கொடுக்காமல் ஜெயிக்க முடியும் என்பதற்கு  தமிழிசை தம்பதிகள் இருவர் முகத்திலும் நேர்காணல் தொடங்கிய நிமிடம் முதல் முடிவு வரை நிலவிய மகிழ்ச்சியே சாட்சியானது.

சாதனைப் பெண்கள் திறமையானவர்களாக, நேர்மையானவர்களாக, எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாத மன உறுதியும் இருந்தால் போதும். பண பலமோ, அரசியல் பின்புலமோ, பிறர் வரையறுத்து வைத்திருக்கும் அழகோ தேவையில்லை.

பெண்ணியம் குறித்த பார்வைகள் மாறுபடலாம். ஆண்களை எதிர்ப்பது பெண்ணியத்தின் நோக்கம் இல்லை. தன்னைப் புரியவைக்கும் சாதுர்யம், நேர்மை, தைரியம், தன்னம்பிக்கை, மதிநுட்பம், தவறைச் சுட்டிக்காட்டும் மேன்மை, பாரபட்சம் காட்டாத அன்பும் அரவணைப்பும், தன் கருத்தில் உறுதியாக இருப்பது, தனது உரிமை குறித்த பிரக்ஞை இவையெல்லாம் பெண்ணியத்தின் பண்புகள்.

முக்கியமாக நாம் நாமாக வாழும் பக்குவம் இருந்துவிட்டால் சந்தேகமே இல்லாமல் நாம் பெண்ணியவாதியே.

யோசிப்போம்!

ஆன்லைனில் மின்னம்பலத்தில் https://minnambalam.com/k/2019/03/30/6

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 21

(Visited 100 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon