விரும்பாததை ஏற்றுக்கொள்வது மிகப் பெரிய துறவறம் (மல்லிகை மகள் ஏப்ரல் 2019)

இந்த நாள் இனிய நாள் – 54

சாப்பாடு விஷயத்தில் சிறுவயதிலேயே எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஒரு விஷயத்தைச்  சொல்லிக் கொடுத்தார்கள்.

எந்த காய்கறியை சமைத்திருந்தாலும் முதலில் தட்டில் வைப்பதை வேண்டாம் என்று ஒதுக்காமல் சாப்பிட்டுவிட வேண்டும். பிடித்திருந்தால் இன்னும் கேட்டுச் சாப்பிடலாம். அது கசக்கும் பாகற்காயாக இருந்தாலும் சரி, சுவையைக் கூட்டும்  உருளைக்கிழங்கு ரோஸ்ட்டாக இருந்தாலும் சரி. இதுதான் எங்கள் வீட்டு ஹெல்த் ரூல்.

எனவே, எங்களுக்குப் பிடிக்காத பாகற்காயாக இருந்தால் முதலில் தட்டில் வைப்பதை அப்படியே ஒரே வாயில் அடைத்து விழுங்கி விடுவோம். விருந்தினர் வீடுகளுக்குச் செல்லும்போது நாங்கள் தட்டில் வைத்ததை உடனடியாக சாப்பிட்டு விட்டால் எங்களுக்கு அந்த காய் மிகவும் பிடித்திருப்பதாக நினைத்து மீண்டும் வைப்பார்கள். அவர்களுக்கு எங்கள் சாப்பாட்டு விதியை பிறகு புரிய வைப்போம்.

நமக்குப் பிடித்ததை சாப்பிடுவது, பிடித்தவர்களுடன் நட்பு பாராட்டுவது, பிடித்த இடங்களுக்குச் செல்வது போன்றவை  சிறப்பானவைதான். ஏன், நமக்குப் பிடித்தவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பதுகூட உயர்ந்த செயல்தான்.

ஆனால், பிடிக்காததை சாப்பிடுவது, நம்மை ஏதேனும் ஒரு காரணத்தால் வெறுப்பவர்களுடன் நட்பு பாராட்டுவது என நமக்குப் பிடிக்காதவற்றை ஏற்றுக்கொள்வது என்பது எல்லாவற்றையும்விட உயந்த செயல்.

ஒருமுறை காந்திஜியின் சபர்மதி ஆஸ்ரமத்திற்கு வினோபா சாப்பிடச் சென்றபோது, காந்திஜி சமைத்துப் பரிமாறினார். வினோபாவிற்கு பாகற்காய் பிடிக்காது என்று காந்திஜிக்குத் தெரியாது. அதை இலையில் பரிமாறிவிட்டு சாதம் எடுத்துவர உள்ளே சென்றுவிட்டார் காந்திஜி.

வினோபா பாகற்காய் பொரியலை ஒரே வாயில் எடுத்து விழுங்கிவிட்டார். சாதம் பரிமாற வந்த காந்திஜி, வினோபாவுக்கு பாகற்காய் என்றால் அவ்வளவு இஷ்டம் என நினைத்து மீண்டும் கொண்டுவந்து இலையில் வைத்துவிட்டார்.

அப்போது வினோபா, ‘விரும்பியதை விடுவதுதான் துறவறம் என நினைத்தேன், விரும்பாததை ஏற்றுக்கொள்வது அதைவிட மிகப் பெரிய துறவறம் என்று புரிந்துகொண்டேன்’ என்றார்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 26, 2019

2019 வருடம் முழுவதும் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில்
தினந்தோறும் நான் எழுதி வந்த
ஃபேஸ்புக் கட்டுரைத் தொடர்
மல்லிகை மகள் ஏப்ரல் 2019 இதழில் வெளியானது.

 

 

 

 

(Visited 66 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon