கனவு மெய்ப்பட[24] – ஆன்லைன் அம்பலங்கள்! (minnambalam.com)

முன்பெல்லாம் பொது இடங்களில் நம் குடும்ப விஷயங்களை பேசுவதையும், பிரயாணங்களின்போது எந்த ஊருக்குச் செல்கிறோம் எத்தனை நாட்கள் தங்க இருக்கிறோம் போன்ற விஷயங்களையும் சத்தம்போட்டு சொல்வதைக்கூட பாதுகாப்புக் கருதி நம் பெரியோர்கள் கண்டித்திருப்பார்கள்.

“சுவருக்குக்கூட காதிருக்கும்… எனவே இரவு நேரத்தில் சப்தம்போட்டு பேசக்கூடாது” என்று சொல்லி வளர்க்கப்பட்ட நம் நாட்டில் இன்று தொழில்நுட்ப உச்சத்தில் இருக்கும் நம் மக்களில் பெரும்பாலானோர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

எந்த ஊருக்குச் செல்கிறோம், எந்தத் தேதியில் கிளம்புகிறோம், என்று திரும்பி வருகிறோம், உடன் பயணிக்க இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, அதுவரை வீட்டில் யார் இருப்பார்கள் என்பதுபோன்ற விவரங்களையெல்லாம் ஃபேஸ்புக் போன்றவற்றில் தவறாமல் சொல்லிவிடுகிறார்கள். வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து தொடங்கி ஆங்காங்கே நின்று காபி, டீ, இளநீர் குடிக்கும் போஸ்களில் ஆரம்பிக்கும் ‘செல்ஃபி’ வீடு திரும்பும் வரை இது தொடர்கிறது.

நம்மை ‘டார்கெட்’ செய்ய நினைக்கும் திருடனுக்கு வேலை வைக்காமல் நாமே மிக அழகாக ‘ஸ்கெட்ச்’ போட்டுக்கொடுத்து விடுகிறோம்.

எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருக்கும் வரைதான் தொழில்நுட்ப வசதிகள் இனிக்கும். ஏதேனும் ஓரிடத்தில் சறுக்கும்போது செல்போன் மணி அடிக்கும் ஓசைகூட மரண ஓலமாக இருக்கும்.

நம் தகவல்கள் ஆன்லைனில் அம்பலமாவது எப்படி?

நாம் ஒரு சுற்றுலா செல்வதாக வைத்துக்கொள்ளலாம். அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பு. ஒரு சில நொடிகளில் அவர்களின் புகைப்படங்கள் வெளிப்பட்டு ‘People You May Know… Add Friend’ என்ற தகவல் வெளிப்பட்டு ‘அட நாம் சந்தித்தது ஃபேஸ்புக்கிற்கு எப்படித் தெரியும்’ என ஆச்சர்யப்படுத்தும்.

பஸ், ரயில், சிக்னல் நிறுத்தத்தில் என நாம் சந்திக்கின்றவர்கள் புகைப்படங்களும் ஃபேஸ்புக்கில் இதுபோல வெளிப்பட்டு நட்பாகிக்கொள்ளுங்கள் என ஆசைகாட்டும்.

நாம் பேசிப் பழகாதவர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவதில் ஃபேஸ்புக்குக்கு ஏன் இத்தனை ஆர்வம்? எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது.

நம் ஸ்மார்ட் போனில் பதிவு செய்துகொள்ளும் மொபைல் எண்கள் மூலமும், நம் போனில் உள்ள Blue Tooth, Wi-fi, GPS போன்ற தொழில்நுட்பங்கள் மூலமும் நாம் செல்லுகின்ற இடங்கள், சந்திக்கும் நபர்கள் போன்ற தகவல்கள் ஏதேனும் ஒருவடிவில் சேகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவம். அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினருக்கு திடீரென அங்கு புகழ்பெற்று விளங்கும் டார்கெட் என்ற பல்பொருள் அங்காடியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி என அலங்காரப் பொருட்களுக்கான தள்ளுபடி கூப்பன்கள் அவர்கள் மகளுடைய இமெயிலிலும், தபாலிலும் வர ஆரம்பித்தது. அந்த தம்பதியினருக்கு ஆச்சர்யம் கலந்த கோபம். படிக்கும் வயதில் உள்ள டீன் ஏஜ் பெண் இருக்கின்ற வீட்டிற்கு இப்படி கூப்பன்கள் வந்தால் கோபம் வரதா பின்னே?

கோபமாக டார்கெட் சென்று ‘எங்கள் வீட்டில் கர்பிணிப் பெண்கள் யாருமில்லை… டீன் ஏஜில் ஒரு பெண் படித்துக்கொண்டிருக்கிறாள். எதற்காக இதுபோன்ற கூப்பன்களை எங்களுக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று சத்தம் போட டார்கெட் முதலில் மன்னிப்புக் கேட்டது.

பின்னர் இமெயில், வந்து சென்ற தம்பதியினரின் வீட்டு முகவரி போன்றவற்றை வைத்து அவர்கள் வீட்டில் உள்ள டீன் ஏஜ் பெண்தான் சில நாட்களுக்கு முன் கிரெடிட் கார்ட் மூலம் ‘கர்பமாக இருப்பதை பரிசோதிக்கும் உபகரணத்தை’ வாங்கிச் சென்றுள்ளாள் என கண்டறிந்தனர்.

அவர்களிடம் உள்ள அனலடிக் சாஃப்ட்வேர் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் வாங்குகின்ற பொருட்களை வைத்து அவர்களின் விருப்பம், தேவை போன்றவற்றை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப தள்ளுபடி கூப்பன்களை அனுப்பி வைப்பது அவர்கள் வழக்கம். கர்ப்பம் என்றால் அடுத்து என்ன குழந்தை, அதற்கான உடை, விளையாட்டு சாமான்கள், அழகுப் பொருட்கள் இப்படி வாங்க வேண்டியத் தேவை இருக்கும்தானே. அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் அவர்கள் வீட்டுக்கு குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான தள்ளுபடி கூப்பன்களை அனுப்பி இருந்தார்கள். இதை அந்தப் பெற்றோருக்கு தெரிவிக்க அவர்கள் டார்கெட்டிடம் மன்னிப்புக் கேட்டனர்.

இப்படி ஒருவரிடமிருந்தோ அல்லது பலரிடம் இருந்தோ தொகுக்கப்பட்ட பல்வேறு தகவல்களை அலசி ஆராய்ந்து,  அதிலிருந்து ஒரு நூல் பிடித்து,  இது  நடந்தால் அடுத்தது  இதுதான் நடக்கும் என கணிப்பதோடு அதை பிசினஸாக்குவதற்கும் உதவுகிறது ‘டேட்டா சயின்ஸ்’ தொழில்நுட்பம்.

‘சிறு துரும்பும் பல்குத்த உதவும்’ என்பதைப்போல ‘டேட்டா சயின்ஸ்’ சிறிய விஷயத்தைக்கூட ஆராய்ந்து அறியப் பயன்படுத்தும்.

‘எனக்கு குல்ஃபி பிடிக்கும்’ என என்றோ எப்போதோ பதிவு செய்த சிறிய விவரத்தை அடிப்படையாக வைத்து குல்ஃபி ஐஸ்கிரீமைப் பிடிக்கும் நண்பர்களை நமக்கு அறிமுகப்படுத்தும்.

கூகுளில் ஒரு தகவலை தேடிவிட்டு ஃபேஸ்புக் வந்தால் நீங்கள் தேடிய தகவல் தொடர்பான விஷயங்கள் விளம்பரமாக வெளிப்படும்.

ஒரு கடைக்குச் சென்று ஒரு குறிப்பிட்ட பிராண்டில் ஒரு பொருளை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தால், உங்களுக்கு முன் நீங்கள் பார்த்துவிட்டு வந்த குறிப்பிட்ட பிராண்ட் தொடர்பான விளம்பரங்கள் இமெயிலிலும், ஃபேஸ்புக் டிவிட்டரிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

இன்டர்நெட்டில் நாம் அடிக்கடி பார்வையிடும் வெப்சைட்டுகள், சமூக வலைதளங்கள், யுடியூப் வீடியோக்கள், கூகுளில் தேடும் தகவல்கள் போன்ற அனைத்துமே ஆன்லைனில் அம்பலப்படுத்தப்படுகின்றன.

நீங்கள் எங்கோ ஓரிடத்தில் தேடும் விஷயங்களையும், முன்பின் அறிமுகமே இல்லாத நண்பர்களையும் இமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்துவதும் ‘டேட்டா சயின்ஸ்’ தொழில்நுட்பமே.

ஆன்லைனில் ஒரு வார்த்தை ஓராயிரம் புரிதல்கள்!

இன்று காலை ஒரு ஃபேஸ்புக் பதிவில் என் பெயர் Tag செய்யப்பட்டிருந்தது. என் ஃபேஸ்புக் தொடர்பில் இருப்பவருக்கு ஏதோ தொழில்நுட்ப சந்தேகம் இருந்ததால் அதை மெசஞ்சரில் கேட்டிருந்தார். அதற்கு தீர்வு சொல்லி இருந்தேன். அதற்கு நன்றி தெரிவிப்பதற்கான பதிவு அது.

அவர் என்ன சந்தேகம் கேட்டிருந்தார், அதை எப்படி தீர்வு சொன்னேன் என்ற அளவில் அந்த பதிவு அமைந்து அதற்கு நான் உதவினேன் என்ற அளவில் இருந்திருந்தால் எனக்கு நெருடலாக இருந்திருக்காது.

ஆனால் அதில்  “என் முகத்தைக்கூட பார்த்தது இல்லை, போனில் பேசியதில்லை, ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம்…ஆனாலும் நான் உதவி கேட்டவுடன் உதவினார்…”  என்று என்னை பெருமைப்படுத்துவதாக அந்தப் பதிவை எழுதி இருந்தார்.

உடனே அவருக்கு மெசேஜ் அனுப்பி அவரது பதிவில் மாற்றம் செய்யச் சொன்னேன். மேலே சொன்ன வரிகளை எடுத்துவிட்டு அவர் என்ன சந்தேகம் கேட்டார், அதற்கு நான் என்ன தீர்வு சொன்னேன் என்பதை பதிவிட்டால் மற்றவர்களுக்கும் அது பயன்படும் என்று சொன்னேன்.

எனக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும் என்றால் என் பெயரை குறிப்பிட்டு Tag செய்து “எளிமையாக தீர்வு சொன்னமைக்கு நன்றி மேடம்” என்று குறிப்பிட்டால் போதும் என்றேன்.

“என் முகத்தைக்கூட பார்த்தது இல்லை, போனில் பேசியதில்லை, ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம்… ஆனாலும் நான் உதவி கேட்டவுடன் உதவினார்…” என்பதுபோன்ற வார்த்தைகளை படிப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ள முடியும்.

சமூக வலைதளங்களில் நாம் பதிவிடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பலநூறு அர்த்தங்களைப் புரிந்துகொள்ளும் மனிதர்கள் இணைந்திருப்பார்கள். எல்லோருமே ஒரே மாதிரியான புரிதலில் இருக்க மாட்டார்கள்.

வேறுவிதமான செயல்பாடுகளுக்கும் இந்த வார்த்தைகள் தூண்டுதலாக அமையலாம்.

இவருக்கு என்றல்ல… யார் தொழில்நுட்ப சந்தேகம் கேட்டிருந்தாலும் (எனக்குத் தெரிந்தால்) விளக்கம் அளித்திருப்பேன்.

இன்று நேற்றல்ல….  1992 – க்கு பிறகானவர்களுக்கு நம் நாட்டில் தொழில்நுட்பம் வளரவே ஆரம்பிக்காத காலகட்டத்தில் முதன்முதலில் தமிழில் தொழில்நுட்பத்தை எளிய முறையில் கொண்டு சேர்க்கும் முயற்சியை என் நிறுவனத்தின் (காம்கேர் சாஃப்ட்வேர்) மூலம் நான் தொடங்கிய காலத்தில் இருந்தே யாரேனும் தொழில்நுட்ப சந்தேகம் என்றால் கூடுமானவரை அவர்களுக்கு என் பணிச்சூழலுக்கு ஏற்ப  நேரம் கிடைக்கும்போது  விளக்கம் அளித்து வருகிறேன்.

கடிதம் வாயிலாகவும், இமெயில் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொழில்நுட்ப சந்தேகங்கள் கேட்பவர்கள் கால மாற்றத்துக்கு ஏற்ப இமெயில், வாட்ஸ் அப், மெசஞ்சர் போன்றவற்றை பயன்படுத்தி கேட்கிறார்கள். அது ஒன்றுதான் மாற்றம்.

சமூக வலைதளங்களில் நாம் பகிரும் சிறு துரும்பும் பிரமாண்டமாய் விஸ்பரூபம் எடுக்கும் வல்லமை பெற்றது. அது நல்ல விஷயங்களுக்கும் உதவலாம். தீமைக்கும் வழிவகுக்கலாம். எனவே கவனம் தேவை.

யோசிப்போம்!

ஆன்லைனில் மின்னம்பலத்தில் https://minnambalam.com/k/2019/04/20/10

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 24

(Visited 67 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon