யார் நண்பர்?
ஃபேஸ்புக்கில் ஆளுக்கு 5000 நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், தெரிந்த எதிரிகள் தெரியாத எதிரிகள், ஒரிஜினல் முகம் வைத்திருப்பவர் பொய் முகம் வைத்திருப்பவர் என பலதரப்பட்ட மனிதர்கள் அதில் இணைந்துள்ளனர்.
ஒரு சிலர் தனக்கு வருகின்ற Friends Request – களை ‘கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு’ பின்புலம் ஆராய்ந்து பார்த்து நட்பு வட்டத்தில் இணைத்திருப்பர். ஆனாலும் அவர்களுக்கே டிமிக்கிக்கொடுத்து ஃபேக் ஐடிகள் (Fake Ids) பலர் அவர் லிஸ்ட்டில் இருப்பர்.
ஆத்மார்த்தமாகப் பழகும் ஓரிருவரை தக்க வைத்துக்கொள்வதே பிரம்மப்பிரயத்தனமாக இருக்கும் இந்தாளில் ஃபேஸ்புக் நட்பில் இருக்கும் 5000 நபர்களையும் சமாளிப்பவர்களை நினைத்து எனக்கு பிரமிப்புத்தான்.
—***—
என் சிறு வயதில் இருந்தே மிகமிக அமைதியான பெண்ணாகவே இருந்துவிட்டதால் பள்ளி, கல்லூரி நாட்களிலும் நண்பர்கள் மிகமிக குறைவு. பெரும்பாலும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் பள்ளி கல்லூரி முதல்வர்களும்தான் என்னுடன் நட்புப் பாராட்டுவர்.
அதுபோல என்னுடன் படிக்கின்ற சக மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களின் தாத்தா பாட்டிகளுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். என்னுடன் பேசி மகிழ்வார்கள். இதன் காரணமாய் என் சம வயதினர் என்னுடைய நட்பு வட்டத்தில் குறைவு.
வீட்டில் அப்பா அம்மா இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். ‘அது இது எது’ என எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்களுடன் பேசும் சுதந்திரம் எனக்கிருந்தது. இதன் காரணமாய் நான் எப்பவுமே தன்னம்பிக்கையுடனேயே வலம் வருவேன்.
சில வருடங்களுக்கு முன்னர் நண்பர்கள் தினத்தன்று ஒரு தொலைக்காட்சி நேரலையில் இருந்து ‘நண்பர்கள் குறித்து உங்கள் கருத்தென்ன?’ என்ற கேள்வியுடன் ஓர் அழைப்பு வந்தது.
‘அப்பா அம்மாவைப் போல யார் ஒருவரால் பாதுகாப்பு உணர்வைக் கொடுக்க முடியுமோ அவர்களே நேர்மையான நண்பர்கள்’ என்று பதில் அளித்தேன். அன்று வந்த பதில்களில் மிகச் சிறந்த பதிலாக அது தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு கிஃப்ட் ஒன்றை அனுப்பி வைத்தார்கள்.
இந்த அளவுக்குத்தான் எனக்கு நண்பர்கள் குறித்த பார்வை.
—***—
ஃபேஸ்புக்கில் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் நண்பர்கள் என்றழைப்பதுகூட ஒருவகையில் சரியல்ல என்பதே என் கருத்து.
பிசினஸ் செய்பவர்கள் அவர்களின் பொருட்களை / சேவைகளை பயன்படுத்துபவர்களை எப்படி கிளையிண்ட் / கஸ்டமர் என்ற பெயரில் அடையாளப்படுத்துகிறார்களோ, அதுபோல முகநூல் என்ற பொதுவெளியில் இணைந்திருப்பவர்கள் அவரவர் ‘தொடர்பில் இருப்பவர்கள்’ மட்டுமே.
அதில் நமக்கு நேரடியாக நண்பர்களாக இருப்பவர்களும் இருக்கலாம், நம் குடும்ப உறுப்பினர்கள் இருக்கலாம், நம் ஆசிரியர்கள் இருக்கலாம், அலுவகத்தில் உடன் பணிபுரிபவர்கள் இருக்கலாம். அதனால் அத்தனை பேருமே நண்பர்கள் என்றழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அது சரி. யார் தான் உண்மையான நண்பர்? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
—***—
சமீபத்தில் முகநூல் தொடர்பில் இருக்கும் ஒருவர் ஒரு தொழில்நுட்ப சந்தேகம் கேட்டிருந்தார். தொழில்நுட்பமே என் சுவாசம் என்பதால் சில நிமிடங்களில் என்னால் தீர்வளிக்க முடிந்தது. அதற்கு மிக மகிழ்ச்சியுடன் கண்ணியமாக ஃபேஸ்புக்கிலேயே என் பெயரைக் குறிப்பிட்டு நன்றி சொல்லி இருந்தார்.
அடுத்த சில நாட்களில் தன் நண்பர் சொன்னதாக அவர் பெயரையும் குறிப்பிட்டே எனக்கு ஒரு தகவல் அனுப்பி இருந்தார்.
20 வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளிவந்துகொண்டிருந்த ஒரு தொழில்நுட்பப் பத்திரிகையில் பணிபுரிந்துகொண்டிருந்த அவருடைய நண்பர் காம்கேர் புவனேஸ்வரிக்கு அந்த பெயரை வைத்ததே தான்தான் என்று சொன்னதாக கூறியிருந்தார்.
நானோ அதிர்ச்சியின் உச்சத்தில். காரணம் அவர் சொன்ன நண்பரின் பெயரைக்கூட நான் அறிந்திருக்கவில்லை.
அதோடு மட்டுமில்லாமல் யாருக்கு யார் பெயர் வைப்பது?
கொஞ்சம் பிரபலமாகி விட்டால் (பிரபலம் என்ற வார்த்தையே எனக்குப் பிடிக்காது. ஆனாலும் இங்கு பயன்படுத்த வேண்டிய சூழல்)
அல்லது
ஒருவர் தன் சொந்த உழைப்பில் வளர்ந்துவிட்டால்…
அந்த வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட முகம் அறியா நபர்கள் எத்தனைபேர் கிளம்பிவிடுகிறார்கள் என மனதுக்குள் கோபம் கொப்பளித்தது.
என்னிடம் தொழில்நுட்ப உதவிபெற்றவருக்கு என்னை புண்படுத்தவேண்டும் என்ற எண்ணம் மனதில் துளியும் இல்லை. அவர் நண்பர் சொன்ன செய்தியை என்னிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். அவ்வளவே.
நான் உடனே என்னிடம் தொழில்நுட்ப உதவி பெற்றவரிடம் போன் செய்து பேசினேன்.
எனக்கு புவனேஸ்வரி என பெயர் வைத்ததும், காம்கேர் புவனேஸ்வரி என பெயர் வைத்ததும், என் நிறுவனத்துக்கு காம்கேர் சாஃப்ட்வேர் என பெயர் சூட்டியதும் என் பெற்றோரே என்ற பேருண்மையை அவருக்கு புரிய வைத்தேன்.
எதுஎதற்கெல்லாம் நிரூபணம் செய்ய வேண்டி உள்ளது என்று பாருங்களேன்.
—***—
நான் எனக்கெனெ Dress Code வைத்திருக்கிறேன். எந்த உடையானாலும் அதற்கு மேல் ஒரு கோட் அணிவேன்.
ஒருமுறை நான் அணிந்திருக்கும் அந்த கோட் நன்றாக இருக்கிறதா என ஒரு இலக்கிய பெண்மணியிடம் கேட்டேன். அதைவைத்து அவர் ‘நான் தான் காம்கேர் புவனேஸ்வரிக்கு டிரஸ் கோட் ஆலோசனை கொடுத்தேன்’ என்று பலரிடம் கூறி வருகிறார்.
நன்றாக இருக்கிறதா என கேட்டதற்கே இந்த கதியா? அப்படியானால் நிஜமாகவே அவரிடம் எதற்காவது ஆலோசனை கேட்டிருந்தால் என்ன சொல்வார்?
—***—
இதுபோலவே இலக்கிய மீட்டிங்குகளில்…
மக்களுக்கு நன்கு அறிமுகமான வயதில் மூத்த பெண் எழுத்தாளர்கள் பலர் என்னிடம் அவர்கள் சமகாலத்து பிற எழுத்தாளர்களைப் பற்றி ஏதேனும் குறை கூறுவார்கள். சுருங்கச் சொன்னால் அதற்கு ‘வம்பு’ என்றே பெயரிடலாம்.
நான் எந்த பதிலையுமே சொல்லாமல் அவர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்பேன். எல்லாவற்றுக்கும் பதில் அளித்தால்தான் தப்பாகிவிடும்.
ஆனால் பின் எப்போதாவது அவர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது, ‘அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரைப் பற்றி என்னிடம் சொன்னதை’ நான் சொன்னதாக பரப்பினார்கள். இதை என் உள்ளுணர்வு சொன்னதால் ஒரு சின்ன R & D செய்து கண்டுபிடித்தேன்.
சாஃப்ட்வேர்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் தேவையாய் உள்ளது R & D (Research and Development).
அதில் இருந்து இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டி இருந்தால் சரியாக நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்துக்கு சென்றுவிட்டு நிகழ்ச்சி முடியும் முன் கிளம்புவதை வழக்கமாக்கிவிட்டேன்.
எப்படி எப்படியெல்லாம் ஜாக்கிரதை உணர்வுடன் மனிதர்களிடம் பழக வேண்டி இருக்கிறது.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஏப்ரல் 19, 2019