கனவு மெய்ப்பட[25] – ஒரு பாஸ்வேர்ட் வாழ்க்கையை மாற்றுமா! (minnambalam.com)

சிரித்துக்கொண்டே இருப்பவர்களுக்கும், மற்றவர்களை சிரிக்க வைப்பவர்களுக்கும் பிரச்சனைகளே இல்லை என நினைக்க வேண்டாம்.

மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். திரையைத் தாண்டி நிஜவாழ்க்கையிலும் தன் சோகங்களை மறைத்து மற்றவர்கள் முன் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நடித்தவர்தான் சாப்ளின்.

அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லொண்ணாத் துயரங்கள். வாழ்க்கை அவரை ஒவ்வொரு முறை காயப்படுத்திய போதும், தன் புன்னகையால் அவற்றை வென்று காட்டிய உன்னதக் கலைஞர் அவர்.

‘மழையில் நனைந்துகொண்டுச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது’ என்ற இந்த வரிகளே சாப்ளினின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கு சான்று.

பொதுவாகவே என் மனம் ஏதேனும் ஒரு நிகழ்வினால் ‘ஸ்ட்ரெஸ்’ ஆகிவிட்டால் அதை அதன்போக்கில் விட்டுவிட மாட்டேன்.

ஒருசிலரைப் போல பேசா மடந்தையாக நாட்கணக்கில் வாரக்கணக்கில் உம்மென்று முகத்தை வைத்துக்கொள்ள மாட்டேன். அறையை பூட்டிக்கொண்டு உள்ளே அமர்ந்து அமைதியாகவும் இருக்க மாட்டேன். முடிந்தால் ஸ்ட்ரெஸ்ஸுக்கான காரணத்தைக் கண்டறிந்து அந்தப் பிரச்சனையைத் தீர்க்க நேர்மையான முறையில் முழு முயற்சி செய்வேன்.

அப்படி முடியவில்லையெனில் முன்பைவிட பரபரப்பாக செயல்பட ஆரம்பிப்பேன்.

அதிகம் பேசாத நான், வலிய போன் செய்தாவது நான் மதிக்கின்ற என்னை புரிந்துகொண்ட வயதில் மூத்தோர்களிடம் பேசுவேன். முடிந்தால் நேரிலும் செல்வேன். வீட்டிலும் வாய் ஓயாமல் பேசுவேன். அலுவலகத்தில் மீட்டிங்கில் பாஸிட்டிவ் கதைகளுடன் மீட்டிங்கின் நேரத்தை நீட்டுவேன். என்னுடன் பணியாற்றுபவர்களை அவர்களின் சின்ன சின்ன விஷயங்களுக்காகவும் மனதார பாராட்டுவேன். முடிந்தால் அந்த நேரத்துக்கு ஏற்ப ‘சர்ப்ரைஸ்’ கிஃப்ட்டும் கொடுப்பேன்.

எனக்குள் இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸை இதுபோன்ற பாஸிட்டிவ் அணுகுமுறைகளினால் மனதின் ஓரத்துக்குத் தள்ளி சுருள வைப்பேன். அவ்வளவுதான். ஆனாலும் அது அவ்வப்பொழுது எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லும். அந்த சின்ன வலியும் தேவைதானே நாம் மேலும் மேலும் சிறப்பாகச் செயல்பட.

இதுபோல ஒவ்வொருவரும் தங்களை ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து விடுவித்துக்கொள்ள ஒவ்வொரு டெக்னிக்கை பயன்படுத்துகிறார்கள்.

மோமோ எஸ்ட்ரெல்லா என்பவர் பாஸ்வேர்ட் மூலம் ஸ்ட்ரெஸ்ஸை விரட்டியதுடன் சோர்ந்திருந்த தன் வாழ்க்கையை பூந்தோட்டமாக மாற்றியமைத்துக்கொண்டார். எப்படி என பார்ப்போமா?

மேஜிக் செய்து பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியுமா?

“உங்கள் இமெயில் ஐடியைச்சொல்லுங்கள் அதன் பாஸ்வேர்டை நான் சொல்கிறேன்” என்றார் பெற்றோர் ஆசிரியர் சங்ககூட்டத்துக்கு வந்த கம்ப்யூட்டர் இஞ்ஜினியர். ஐந்து பேரின் இமெயில் ஐடியை வாங்கினார். கம்ப்யூட்டரில் தட்டினார். ஐந்தே நிமிடத்தில் ஒரு துண்டுச்சீட்டில் அவர்களின் இமெயில் ஐடி பாஸ்வேர்டை குறித்துக்கொடுத்தார். கூட்டத்தில் இருந்த அனைவரும் அதிசயித்தனர். இன்று வீட்டுக்கு வந்த நண்பர் கூறிய தகவல் இது.  இது சாத்தியமா?” என்று ஃபேஸ்புக்கில் தொடர்பில் இருக்கும் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.

மாணவர்கள் பெரும்பாலானோர் password, mypassword, password123 என பொதுவான பாஸ்வேர்டுகளையே வைத்திருப்பார்கள். இதை மாணவர்களுடன் பழகுபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அவற்றை அப்படியே ஒரு லிஸ்ட்டில் பட்டியலிட்டு, இமெயில் ஐடிக்களை மற்றொரு லிஸ்ட்டில் பட்டியலிட்டு இரண்டையும் புரோகிராம் மூலம் இயக்கினால் (இதற்கான புரோகிராமை கம்ப்யூட்டர் இன்ஜினியர்களால் நிமிடத்தில் எழுத முடியும்) எந்த இமெயில் ஐடியுடன் எந்த பாஸ்வேர்ட் ஒத்துப் போகிறதோ அவை தனியாக வந்துவிடும்.

இப்படி பொதுவான பாஸ்வேர்டுகள்  நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவோரும் பலர் இருக்கிறார்கள்.

அதுபோன்ற கேஸ்களில் மற்றவர்கள் பாஸ்வேர்டை கண்டுபிடிப்பது சாத்தியம்தான்.

மற்றபடி தனி நபர்களின் பாஸ்வேர்டை கண்டுபிடிப்பது என்பது அவர்கள் பயன்படுத்தும் அதே லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் சாத்தியம். ஒரு சிலர் தங்கள் வசதிக்காக அவர்கள் பாஸ்வேர்டை இன்டர்நெட் பிரவுசரில் சேவ் செய்து வைத்திருப்பார்கள்.

அந்த கம்ப்யூட்டரை மற்றவர்கள் பயன்படுத்தும்போது பிரவுசருக்குள் சென்று இமெயில் ஐடியை டைப் செய்தால்போதும். அவர்கள் இமெயில் இன்பாக்ஸுக்குள் நேரடியாகச் சென்றுவிட முடியும். பாஸ்வேர்ட்டையும் கண்டுபிடித்து விடலாம்.

எனவே  பிரவுசரில்  உங்கள் இமெயில் பாஸ்வேர்ட், வங்கி வெப்சைட் பாஸ்வேர்ட் போன்றவற்றை சேவ் செய்யாதீர்கள்.

மற்றபடி மேஜிக் செய்து பாஸ்வேர்டை கண்டுபிடிப்பதெல்லாம் சாத்தியமே இல்லை.

பாஸ்வேர்ட் கூட வாழ்க்கையை மாற்றுமா?

பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றியாக வேண்டும்.

மேலே குறிப்பிட்டபடி பாஸ்வேர்ட் மூலம் ஸ்ட்ரெஸ்ஸை விரட்டியதாகச் சொல்லியிருந்த மோமோ எஸ்ட்ரெல்லா தான் பணிபுரியும் நிறுவனத்திலும் பாஸ்வேர்டை மாதம் ஒரு முறை கட்டாயமாக மாற்றியாக வேண்டும் என குறிப்பிட்டு, “ஒரு பாஸ்வேர்டு எப்படி என் வாழ்க்கையை மாற்றியது?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார் அவரது இணையதளத்தில்.

மேலும், புதிய பாஸ்வேர்டை உருவாக்கும் போது,  கடந்த மூன்று மாதங்கள் பயன்படுத்திய எந்த பழைய பாஸ்வேர்டையும் பயன்படுத்தக்கூடாது. பாஸ்வேர்டில் குறைந்தபட்சம் ஒரு ஆங்கில பெரிய எழுத்து, ஒரு ஆங்கில சிறிய எழுத்து, ஒரு சிறப்புக்குறியீடு ஒரு எண் இருக்க வேண்டும். பாஸ்வேர்டின் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை எட்டுக்கும் குறைவாக இருக்கக் கூடாது. இதுபோன்ற கட்டுப்படுகள் வேறு.

இதெல்லாம் வழக்கமான அலுவலக விதிமுறைகள்தான் என்றாலும், அந்த காலகட்டத்தில் அவர் பர்சனல் வாழ்க்கையிலும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின்  மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டிருந்தார். அந்த வலியில் இருந்தும், வேதனையில் இருந்தும்  மீளமுடியாமல் தவித்து தனிமையில் வாடிக்கொண்டிருந்தார்.

இந்த மனநிலையில் புதிய பாஸ்வேர்டை உருவாக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு நரக வேதனையாக இருந்தது.

சட்டென  பாஸ்வேர்ட் உருவாக்கம் பற்றி அவரது முன்னாள் பாஸ் சொன்ன குறிப்பு அவருக்கு நினைவில் வந்தது.

“பாஸ்வேர்ட் மூலம் என் வாழ்க்கையை மாற்றப்போகிறேன்” என்பதே அவர் சொல்லியிருந்த குறிப்பு. இதை எஸ்ட்ரெல்லா மனதுக்குள் ஏற்றிக்கொண்டார்.

தன்னைவிட்டுப் பிரிந்துசென்ற மனைவியின் நினைவை மறக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி அவரை மன்னிப்பது மட்டுமே. அப்போதுதான் வாழ்க்கை மீண்டும் சகஜ நிலைக்கு வரும் என்பதை உணர்ந்தவர்  அதற்கான தீர்வாக பாஸ்வேர்டைப் பயன்படுத்த முடிவெடுத்தார்.

பிரிந்து சென்ற மனைவியை மன்னிப்பதை குறிக்கும் விதமாக Forgive@h3r என புதிய பாஸ்வேர்டை அமைத்தார்.

அவர் தினமும் கம்ப்யூட்டரை ஆன் செய்யும்போதும் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு மேல் இயக்கத்தில் இல்லாமல் வைத்திருந்தால் கம்ப்யூட்டர் லாக் ஆகிவிடும். திரும்பவும்  அன்லாக் செய்யும்போது பாஸ்வேர்ட் டைப் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு முறை இந்த பாஸ்வேர்டை டைப் செய்யும் போதும், தனக்குத்தானே   “அவளை மன்னித்துவிடு” (Forgive her) என்று சொல்லிக்கொண்டே டைப் செய்வாராம்.

இப்படி தினமும் செய்ததால் அவரது மனதின் காயமும் கொஞ்சம் கொஞ்சமாக ஆறத் தொடங்கியது. ஒரு மாதத்துக்குள் அவர் பிரிவின் வேதனையில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டதாகவே உணர்ந்தார்.

அடுத்த மாதம் திரும்பவும் பாஸ்வேர்டை மாற்ற வேண்டிய நேரம் வந்தது. தனது புகைப்பிடிக்கும் வழக்கத்தை கைவிட வேண்டும் என்னும்  இலக்கை குறிக்கும் வகையில் Quit@smoking4ever  என பாஸ்வேர்டை மாற்றியமைத்தார். தினமும் இந்த பாஸ்வேர்டை டைப் செய்யும்போது புகைப்பதை கைவிட வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டே டைப் செய்வார். இதெல்லாம் கற்பனையல்ல. உண்மை. என்ன ஆச்சர்யம் ஒரே மாதத்தில் அவர் புகைப்பதையும் விட்டுவிட்டார்.

அதன் பிறகு, தனக்கான இலக்குகளை மையமாகக் கொண்ட பாஸ்வேர்டுகளை அமைத்துக்கொள்வதாகவும் அவை மனதளவிலும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதாகவும், அதன் காரணமாய் வாழ்க்கையிலும் பெருத்த மாற்றம் உண்டாவதாகவும் சொல்லி இருக்கிறார். அவர் பயன்படுத்திய பாஸ்வேர்டுகளையும் பட்டியலிட்டுள்ளார்.

Forgive@her – பிரிந்து சென்ற மனைவியை மன்னிக்க

Quit@smoking4ever – புகைக்கும் வழக்கத்தைக் கைவிட

Save4trip@thailand –  தாய்லாந்து பயணத்துக்காக சேமிக்க

Eat2times@day – ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே சாப்பிட

Sleep@before12 – இரவு 12 மணிக்கு முன் உறங்கச் செல்ல

Ask@her4date – திரும்பவும் ஒரு பெண்மீது காதல் வந்ததால் அவரிடம் பேசுவதற்கு தயார்படுத்திக்கொள்ள

No@drinking2months – இரண்டு மாதங்கள் மது அருந்தாமல் இருக்க

Facetime2mom@sunday – ஞாயிறுதோறும் அம்மாவுடன்  பேச

Save4@ring –  திருமணத்துக்காக மோதிரம் வாங்க சேமிக்க

வாழ்க்கையின் சோகமான காலகட்டத்தில் இப்படி தன் இலக்குகளையே பாஸ்வேர்டாக வைத்துக்கொள்ள ஆரம்பித்தவருக்கு திரும்பவும் மற்றொரு காதல் ஏற்பட்டு அது திருமணம் வரை சென்றதாகவும் தன் கட்டுரையில் எழுதியுள்ளார் எஸ்ட்ரெல்லா. இவரது கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க https://medium.com/@uxmomo/how-a-password-changed-my-life-7af5d5f28038

உங்கள் எண்ணம் நேர்மையாக இருப்பின் பாஸ்வேர்ட் மூலம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியதைப் பெற இந்த டெக்னிக்கை முயற்சித்துப் பாருங்களேன்.

கடந்த 25 வாரங்களாக உங்களுடன் என்னுடைய அனுபவங்களை, எண்ணங்களைப் பரிமாறிக்கொண்ட இந்தப் பயணம் இப்போது முடிவுக்கு வருகிறது.  உங்கள் ஒவ்வொருவரின் ‘கனவு மெய்ப்பட’ வாழ்த்துகள். மீண்டும் ஒரு சந்தர்பத்தில் சந்திப்போம்.

ஆன்லைனில் மின்னம்பலத்தில்  https://minnambalam.com/k/2019/04/27/10 

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 25

(முற்றும்)

(Visited 262 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon