எதிராளியின் உணர்வுகளை அதிகம் புரிந்துகொள்ளும் திறனும், அதற்கேற்றாற்போல செயல்படும் ஆளுமையும் ஆணை விட பெண்ணுக்கு கொஞ்சம் அதிகம். இது பெண்களுக்கு இயற்கைக் கொடுத்த வரம்.
இந்த வரத்தை சரியாக பயன்படுத்துவதும், தவறாகப் பயன்படுத்துவதும் பெண்களின் தனிப்பட்ட சுபாவம். பொதுமைப்படுத்த முடியாது.
2007-ம் ஆண்டு என் பெற்றோர் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ அறக்கட்டளையைத் தொடங்கியபோது சென்னை வாணி மஹாலில் ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’என்ற தலைப்பில் என் பெற்றோரின் வாழ்க்கையை 1-1/2 மணிநேர ஆவணப்படமாக வெளியிட்டோம்.
அந்தப் படத்தை நான் தயாரித்ததோ அறக்கட்டளை தொடங்கப் போவதோ முன்கூட்டியே என் பெற்றோருக்குத் தெரியாது. சர்ப்ரைஸ்.
நிகழ்ச்சிக்குக் கூடுதல் சர்ப்ரைஸாக உறவினர்களையும், அப்பா அம்மாவின் அலுவலக நண்பர்களையும் அழைத்திருந்தேன். அதில் அப்பா அம்மா இருவருக்குமே அளவிலா ஆனந்தம்.
இதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.
இந்த ஆவணப்படத்தில் எனக்கு அசிஸ்டென்ட்டாகப் பணியாற்றியவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தேன்.
சொந்த ஊர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். என் நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவில் பல வருடங்கள் பணியாற்றியவர். ஒருமுறை அலுவலக மீட்டிங்கில், அவர் அப்பா குடிக்கும் வழக்கம் உள்ளவர் என்றும், அம்மாவும் அப்பாவும் சேர்ந்து எங்கேயும் வெளியில் சென்று தான் பார்த்ததே இல்லை எனவும் தன் குடும்பச் சூழலை சொல்லியிருந்தார்.
அவரது பெற்றோரை அவருக்குத் தெரியாமல் சென்னைக்கு வருவதற்கும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தேன்.
விழாவின் முடிவில் ஆவணப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் தகுந்த மரியாதை செய்தேன். என் அசிஸ்டென்ட்டுக்கு, அவர் அப்பா அம்மாவை மேடைக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் ‘Best Visualizer’ என்ற விருதளித்து கவுரவித்தேன்.
அந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை, ஆவணப்படம் இவை எல்லாவற்றையும் விட பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது எது தெரியுமா? என் அசிஸ்டென்ட்டின் பெற்றோரை(யும்) சர்ப்ரைஸாக வரச் செய்து அவர்கள் முன்னிலையில் விருதுகொடுத்த சம்பவம்தான்.
ஒரு நிர்வாகி ஆணாக இருக்கும்பட்சத்தில் அவன் தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்கலாம், செய்கின்ற வேலைக்கு வெகுமதிகள் கூட்டித் தரலாம், கிஃப்ட்டுகளும் பார்ட்டிகளும் கொடுத்து அசத்தலாம். ஆனால் இப்படி அவர்களை உணர்வுப்பூர்வமாக அணுகி இருக்க முடியுமா என்பது சந்தேகமே.
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஏப்ரல் 30, 2019
ஆன்லைனில் தினசரி டாட் காமில் படிக்க… https://wp.me/p5PAiq-kMR
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் ஏப்ரல் 30, 2019