என் வாசிப்பு வழக்கம்!

என் வாசிப்பு வழக்கம்!

நான் எப்போதும் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்து தொடங்கி கடைசி பக்கம் வரை அப்படியே படிக்க மாட்டேன்.

அப்படி படிக்கச் சொன்னால் ஏதோ ஒரு வளையத்துக்குள் என்னை பொருத்தி அதன் ஓட்டத்தில் மட்டுமே நான் நடக்க வேண்டும் என்று யாரோ என்னைக் கட்டுப்படுவதைப்போன்ற ஒரு மனநெருக்கடிக்கு ஆளாகிவிடுவேன்.

எழுத்து, ஓவியம், புகைப்படம், லேஅவுட், கலர் கான்செப்ட், ஆடியோ வீடியோ, பிரிண்டிங்  என அனைத்திலுமே ஆர்வமும் திறமையும் இருப்பதாலும், அவற்றை(யும்) என் ப்ரொஃபஷனாகவும் எடுத்துக்கொண்டிருப்பதாலும் ஒரு புத்தகத்தில் உள்ள எழுத்துக்களையும் வார்த்தைகளையும் மட்டும் தனியாக பிரித்து ரசிக்க முடிவதில்லை.

முதலில் புத்தகத்தின் முன் அட்டை, பின் அட்டை. அடுத்து ஆசிரியர் புகைப்படம், ஆசிரியர் குறிப்பு.

புத்தகத்தினுள் சென்று ஆசிரியர் உரை, பதிப்பாசிரியர் உரை.

அப்படியே புத்தகத்தின் பக்கங்களை அப்படியே புரட்டிக்கொண்டே வருவேன். பரவலாக ஒரு பார்வை.

கட்டுரை தலைப்பு, துணை தலைப்பு, கேப்ஷன்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், லேஅவுட் அனைத்தையும் என் மனசு சேகரித்துக்கொண்டே வரும்.

எந்த இடத்தில் என் கவனம் முதலில் குவிகிறதோ அதுவே ஸ்டார்டிங் பாயிண்ட் எனக்கு. அப்படியே ஆரம்பித்து முன்னும் பின்னுமாக முழு புத்தகத்தையும் விரைவாக படித்துவிடுவேன்.

தேவைப்பட்டால் புரியாத கான்செப்ட்டை ஒருமுறைக்கு இருமுறையாக படித்து புரிந்துகொள்வேன்.

ஒருமுறை படித்துவிட்டால் அதை மறக்காமல் நினைவிலும் வைத்துக்கொள்ளும் ஆற்றலும் உள்ளது.

எந்த இடத்தில் எந்த பக்கத்தில் என்ன கான்செப்ட் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் என துல்லியமாகவும் என்னால் சொல்ல முடியும்.

ஆங்கிலப் புத்தகம், தமிழ் புத்தகம் எதுவானாலும் இதே லாஜிக்தான்.

இன்னும் சொல்லப் போனால் தமிழ் புத்தகத்தைவிட ஆங்கிலப் புத்தகத்தை சீக்கிரமே படித்துவிடுகிறேன்.

இதுபோல ஒவ்வொருவருக்கும் புத்தகம் படிக்க ஒரு வழக்கம் இருக்கும். அதை சரி தவறு என்ற விவாதத்துக்குள் கொண்டுவர முடியாது. அவரவர் செளகர்யம். புரிதல்.

முன்பெல்லாம் பிரயாணங்களின்போது தோள்பட்டை வலிக்க வலிக்க புத்தகமூட்டையையும் சுமந்து சென்றுகொண்டிருந்தேன். இப்போது கிண்டில் இருப்பது செளகர்யமாக உள்ளது. அதை மட்டும் பத்திரப்படுத்தினால் போதுமானதாக உள்ளது.

உலக புத்தக தினமான இன்று என் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஏப்ரல் 23, 2019

(Visited 76 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon