நேற்று ஒரு கல்லூரி மாணவி போன் செய்திருந்தார். ஆங்கிலத்தில் பேசினாள்.
சைபர் க்ரைம் குறித்து பிராஜெக்ட் செய்துகொண்டிருப்பதாகவும் அதற்குப் பயன்படுத்துவதற்காக நான் எழுதிய ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு புத்தகத்தின் ஆங்கில எடிஷன் வந்துவிட்டதா என்று கேட்டார்.
‘Not yet published… Do you have the Tamil Edition of that Book?’ என்று கேட்டேன்.
‘Yes mam… I have read…’ என்றதும் நான் தமிழ் மோடுக்கு அவரை மாற்றினேன்.
‘தமிழ் புத்தகத்தை எங்கு வாங்கினீர்கள்?’ – நான்
‘வாட்ஸ் அப்பில்தான் படித்தேன்’ – மாணவி
‘வாட்ஸ் அப்பிலா?’ – நான்.
‘ஆமாம் மேடம்… அப்பாதான் எனக்கு அனுப்பி இருந்தார்…’ – மாணவி.
‘அப்பா என்ன செய்துகொண்டிருக்கிறார்?’ – நான்.
‘தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டெண்ட்…’ – மாணவி
‘ஓ. வாட்ஸ் அப்பில் நீங்கள் படித்ததை புத்தகத்தை எனக்கு அனுப்ப முடியுமா?’ – நான்.
‘உங்க புக் மேம்… இப்பவே அனுப்பி வைக்கிறேன்….’ – மாணவி.
‘நன்றிம்மா…’ – நான்.
‘மேம், நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் புத்தகத்தின் ஆங்கில வெர்ஷன் வாட்ஸ் அப் எடிஷனில் வந்தால் எனக்குத் தகவல் கொடுங்கள் மேம்…’ – மாணவி.
இப்படிக் கேள்விப்படுவது இது முதன்முறை இல்லை.
இப்போதெல்லாம் புத்தகங்கள் தேவைக்காக எனக்கு வரும் அழைப்புகளில் பெரும்பாலும் ‘வாட்ஸ் அப்’ எடிஷன் வந்துவிட்டதா என்றே கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த மாணவி சொன்ன ‘வாட்ஸ் அப் எடிஷன்’ என்ற வார்த்தை கொடுத்த அதிர்வில் இருந்து மீள்வதற்குள்…
நான் எழுதி விகடன் வாயிலாக வெளியான ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற புத்தகத்தின் முகப்பு அட்டை, இம்பிரிண்ட் பக்கம் எனத்தொடங்கி அச்சுப் புத்தகம் அப்படியே இ-புக்காக PDF வடிவில் வந்தது.
ஸ்கேன் செய்தெல்லாம் PDF ஆக்கவில்லை. அச்சு புத்தகம் இ-புத்தகமாக வாட்ஸ் அப்பில் இருந்தது.
‘வாட்ஸ் அப்’ எடிஷனில் புத்தகங்கள் இலவசமாக பகிரப்படுகிறது என்று நினைத்தே பேசிய அந்த மாணவியின் அறியாமையை நினைத்து வேதனைப்படுவதா?
இல்லை பலரின் பேருழைப்பினால் உருவாகும் அச்சுப் புத்தகங்கள் இப்படி வாட்ஸ் அப் எடிஷனாக இலவசமாக உலா வருவதை நினைத்து வேதனைப்படுவதா?
ஏற்கெனவே அச்சுப் புத்தகங்களின் விற்பனை குறைந்து வருகிறது. ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் இ-புத்தகங்களும் இப்படி இலவசமாக ஷேர் ஆகிக்கொண்டிருந்தால் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்களின் நிலை என்னாவது?
முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும். தொழில்நுட்பத்தில் உள்ள இந்த லீக்கை தொழில்நுட்பத்தின் மூலமாகத்தானே களைய முடியும்.
நானும் R & D செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் வழிபிறக்கலாம்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 15, 2019