ஹலோ… ஹலோ… தொலைபேசி துறையின் உச்சக்கட்ட வளர்ச்சி!

மே 17: உலக தொலைத்தொடர்பு தினம்

[Courtesy: 40 ஆண்டுகாலம் தொலைபேசி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அப்பா வி. கிருஷ்ணமூர்த்தி – Sub Divisional Engineer, அம்மா பத்மாவதி – Senior Telephone Supervisor]

இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம்.

1990 – களில் நம் நாட்டில் தலைகாட்டிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல நடைபயின்று மக்களை தங்கள் பக்கம் திருப்ப என்னென்னவோ பிரயத்தனங்கள் எல்லாம் செய்து பார்த்து…

கூடவே இணையத்தையும் கூட்டி வந்து பிரமாண்டங்களை காண்பித்து…

அவரவர் தாய்மொழியை அதில் பயன்படுத்த அனுமதிகொடுத்து…

லட்சங்களில் இருந்த கம்ப்யூட்டரின் விலையை சில ஆயிரங்களுக்குள் கொண்டு வந்து…

‘அப்பாடா’ என உட்காரும் நேரத்தில், மக்கள் கம்ப்யூட்டரையும் இணையத்தையும் மொபைல் தொழில்நுட்பத்துக்குள் அடக்கி அதை ஆள ஆரம்பித்து விட்டார்கள்.

மக்களை இழுத்துச் சென்ற தொழில்நுட்பம் இன்று மக்களால் ஜெட் வேகத்தில் இழுத்துச் செல்லப்படும் அளவுக்கு வியத்தகு வளர்ச்சி.

அதுவும் தங்கள் கைகளுக்குள் அடக்கி வைத்துள்ள ஸ்மார்ட்போனினாலேயே. ஸ்மார்ட்போனே கம்ப்யூட்டரும், இணையமும் என்ற நிலை.

எந்த நேரத்திலும் அயல்நாடுகளுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேசும் வசதி இப்படியாக வாட்ஸ் அப்,  ஸ்கைப் என பிரமிக்கத்தக்க வளர்ச்சி.

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழியாக போன் பேசிய காலம்

ஆரம்ப காலத்தில் நாம் உள்ளூரில் போனில் பேச வேண்டுமென்றாலே டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழியாகத்தான் பேச முடியும் என்ற நிலை. போனை எடுத்தவுடன் டெலிபோன் ஆப்பரேட்டர் ‘நம்பர் ப்ளீஸ்’ என கேட்பார். நாம் தொலைபேசி எண்ணை சொன்னவுடன் அந்த எண்ணுக்கு டெலிபோன் ஆப்பரேட்டர் இணைப்பைக் கொடுப்பார்.

இணைப்புக் கிடைத்தவுடன் மறுபக்கம் தொலைபேசியில் பதில் கிடைக்கும்வரை  ‘ரிங்பேக் டோன்’ தொலைபேசியில் வந்துகொண்டிருக்கும் இப்போதுபோலவே.

பேசிக்கொண்டிருக்கும்போது டெலிப்போன் அழைப்பு கட் ஆகிவிட்டாலோ அல்லது பேசுவது தடைபட்டாலோ டெலி போனில் உள்ள ஹூக் பட்டனை பலமுறை விட்டுவிட்டு அழுத்தினால் ஆப்பரேட்டர்களுக்கு ஒரு இண்டிகேட்டர் வந்து அவர்கள் இரு முனையில் உள்ளவர்களிடம் ‘Yes Please…’ என்று  போன் பிரச்சனை குறித்துக் கேட்பார்.

அதன்பிறகு பிரச்சனைக்கு ஏற்ப தீர்வு கிடைக்கும். இதைத்தான் Manual Exchange Operator System என்பார்கள்.

வெளியூர் வெளிநாடு பேசவேண்டுமென்றாலும் இதைப்போல டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆப்பரேட்டர் வழியாகவே பேச வேண்டும்.

‘வெளியூர் கால்’ (Outstation Trunk Call) என்றால் அவர்கள் இருக்கும் இடத்தையும் பேச வேண்டிய தொலைவையும் பொறுத்து இணைப்புக் கிடைக்க பல மணி நேரங்கள் ஆகும். சில சமயங்களில் நாள் முழுக்கக்கூட காத்திருக்க நேரிடும்.

‘வெளிநாடு கால்’ (Overseas Call Service) என்றால் கேட்கவே வேண்டாம். இணைப்புக் கிடைக்க நாள் கணக்கில்கூட ஆகலாம். ஏன் என்றால் ஆப்பரேட்டர்கள் அந்தந்த ஊர்களின் தொலைபேசி எக்ஸ்சேஞ்சுகளுடன் தொடர்புகொண்டு அந்த ஊர்களின் லோக்கல் எண்ணை அந்த எக்ஸ்சேஞ்ச்  ஆப்பரேட்டர்கள்தான் இணைப்பைக் கொடுக்க வேண்டும்.

‘லோக்கல் கால்’ போலவேதான் இணைப்பில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் டெலி போனில் உள்ள ஹூக் பட்டனை பலமுறை விட்டுவிட்டு அழுத்தினால் ஆப்பரேட்டர்கள் கவனத்து வந்து அதை அவர்கள் சரி செய்வார்கள்.

இந்த முறையில் இணைப்பைக் கொடுத்தவுடன் பேசுகிறார்களா என கவனிக்க பேசுவர்களுக்கு இடையூறு இல்லாமல் இணைப்பை அவ்வப்பொழுது கண்காணிக்கும் வசதியும் டெலிபோன் அப்பரேட்டர்கள் வசம் இருந்தது.

பேசுபவர்களின் உரையாடல்களை வெளியே கசிய விடாமல் இருக்கும் மனப்பக்குவத்துடன் வேலை செய்ய வேண்டும் என்ற மனக்கட்டுப்பாடும், பணிக்கட்டுப்பாடும்  இருந்ததால், ஆப்பரேட்டர்கள் வேலை புனிதமான வேலையாகக் கருதப்பட்டது.

STD, ISD வசதிகள்  பெருகிய காலம்

இதன் அடுத்தகட்டமாக தொலைபேசி வைத்திருப்பவர்கள் தாங்களாகவே டயல் செய்து குறுகிய தூரம் உள்ள ஊர்களுக்கு பேசும் வசதி வந்தது.

அதை அடுத்து, STD (Subscriber Trunk Dialling) வசதியுடன் தொலைதூர ஊர்களுக்கு பேசும் வசதி கிடைத்தது.

தொடர்ச்சியாக ISD (International Subscriber Dialling) வசதியுடன் வெளிநாடுகளுக்கு பேசும் வசதி கிடைத்தது.

‘ஸ்மார்ட்போன் மேனியா’ 

அதன் முதிர்ச்சியாக எந்த நேரத்திலும், எந்த ஊருக்கும் எப்போது வேண்டுமானாலும் இன்டர்நெட் இணைப்புடன் ஆடியோ கால், வீடியோ கால் என பல்வேறு வசதிகளுடன்  இலவசமாகவே பேசும் சூழலை இன்று பெற்றிருக்கிறோம்.

ஒரே வீட்டில் அடுத்த அறையில் இருப்பவர்களுடன் பேசக்கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் ‘ஸ்மார்ட்போன் மேனியா’ அனைவரையும் தொற்றிக்கொண்டுள்ளது.

எழுத்தும் ஆக்கமும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

மே 17, 2019

(Visited 276 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon