தமிழ் அச்சுப் புத்தகங்களின் நிலை என்ன?
முன்பெல்லாம் புத்தக வாசிப்பு பெரும்பாலானோரின் ஹாபியாக இருந்து வந்தது. அதிலும் பஸ் ரயில் பிரயாணங்களில் புத்தகங்கள் வாசிப்பது பலரின் பழக்கமாகவும் இருந்தது. வாசிப்பு என்பது பெரும் இலக்கியங்களாக இல்லையென்றாலும் பத்திரிகைகள், நாவல்கள் என்ற அளவில் பரவி இருந்தது.
இதற்காகவே பஸ் / ரயில் நிறுத்தங்களில் புத்தகக் கடைகள் நிறைந்திருக்கும். வண்டியினுள்ளும் தினசரி, வாரந்திர, மாதந்திர பத்திரிகைகள், நாவல்கள் போன்றவற்றை எடுத்து வந்து விற்பனை செய்தும் வந்தார்கள்.
இப்போது ரயில், பஸ் பயணங்களில் யாரும் புத்தகம் படிப்பதில்லை. ஆனால் விமானப் பயணங்களில் பிற நாட்டவர்கள் கைகளில் மெகா சைஸில் அவரவர்கள் மொழி புத்தகங்களை வைத்து தலை கவிழ்த்து படித்தபடி இருக்கும் போஸை காண முடிகிறது. பலர் கிண்டிலிலும், ஸ்மார்ட்போனிலும் புத்தகங்கள் வாசிப்பதை காணமுடிகிறது.
கேப்ஸ்யூல்களாகும் தகவல்கள்
இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யு-டியூப் போதுமானதாக உள்ளது. அதுவும் மொபைலில் ஒரு திரைக்குள் அல்லது அதிகபட்சமாக ஒரு ஸ்குரோல் செய்து படித்துவிடக்கூடிய தகவலாக இருந்தால் மட்டுமே படிக்கிறார்கள்.
ஆடியோ வீடியோக்களாக இருந்தால் ஒருநிமிடத்துக்குள் இருந்தால் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பொறுமை இருக்கிறது. அதற்கு மேல் சென்றால் அடுத்த தகவலுக்கு தாவிவிடுகிறார்கள்.
பத்திரிகை, செய்தித்தாள்கள் ஃபேஸ்புக்கில் பகிரும்போது லீடாகக் கொடுக்கும் தகவல்களோடு படிப்பதை நிறுத்திக்கொள்கிறார்கள். முழுமையாக தெரிந்துகொள்ளக் கூட அந்த வெப்சைட்டுக்குள் செல்வதில்லை.
இன்னும் சொல்லப் போனால் செய்திகளை மீம்ஸ்களுக்குள் அடக்கி விடுகிறார்கள் இன்று. படங்களுடன், வாசகங்களை சேர்த்து அன்றாட நிகழ்வுகளுக்கு மீம்ஸ்கள் உருவாக்கித் தருவதே ஒரு பிசினஸாக மாறி வருகிறது. பக்கம் பக்கமாக எழுதப்படும் செய்திகளை மீம்ஸ்களில் அடக்கி கேப்ஸ்யூலாக்கிக் கொடுக்கிறார்கள்.
தவிர வாட்ஸ் அப் மூலமும் தகவல்கள் ஷேர் ஆகிறது. ஒரே தகவல் ஃபேஸ்புக், டிவிட்டர், மெசஞ்சர், வாட்ஸ் அப் என பல வழிகளில் பல்கிப் பெருகி ஒருவித அயர்சியே ஏற்படுத்துகிறது.
வெரைட்டியான தகவல்கள் வெவ்வேறு வடிவில் ஃபேஸ்புக் உள்ளிட்ட ஆன்லைன் மீடியாக்களில் கொட்டிக்கிடக்கும்போது துண்டு துண்டாக செய்திகளை படித்து விடுவதால் மனமும் ஒருவித சோர்வுக்கு ஆளாவதை தவிர்க்க முடிவதில்லை. அதுவே எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட கானல்நீர் நிறைவை ஏற்படுத்திவிடுகிறது.
இதன் காரணமாய் எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக படிக்க வேண்டும் என்கின்ற உத்வேகம் குறைவதும் இயற்கைதானே.
மொழிப் பிரச்சனை
இந்த பிரச்சனை எல்லாம் 45 வயதுகளில் இருக்கும் இன்றைய தலைமுறையோடு முடிந்துவிடும்.
அடுத்த தலைமுறையினருக்கு இந்தப் பிரச்சனை இல்லை. ஆமாம் அவர்களுக்கு தமிழே எழுதப் படிக்கத் தெரியப் போவதில்லை. பின் எங்கே தமிழில் வெளிவரும் செய்தித்தாள்களையும், பத்திரிகைகளையும், புத்தகங்களையும், இலக்கியங்களையும் வாசிப்பது?
ஒருமுறை என் வீட்டுக்கு விசேஷத்துக்கு வந்திருந்த ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படித்துவிட்டு கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கக் காத்திருக்கும் இளைஞர்களிடம் எங்கள் வீட்டு லைப்ரரியை காட்டி இதிலிருந்து எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் எடுத்துப் படியுங்கள் என்றேன்.
அதிலுள்ள புத்தகங்களின் தலைப்புகளைப் பார்த்துவிட்டு ‘எங்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது’ என்றார்கள்.
அதிர்ச்சியாக இருந்தது. தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதம் எடுத்துப் படித்திருந்தார்களாம்.
தமிழ் என் தாய்மொழியாக இருந்ததுடன் அதையே என் இரண்டாவது மொழியாகவும் எடுத்துப் படித்திருந்ததால்தான் என்னால் சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியங்களைக் கூட படிக்க முடிந்தது. தினந்தோறும் வாசிப்பதை என் சுவாசமாகவும், எழுதுவதை என் சுவாசத்தில் உயிராகவும் கருதி வருவதால்தான் என்னால் என் பணி தொழில்நுட்பமாக இருந்தாலும் தொழில்நுட்பம், தன்னம்பிக்கை, வாழ்வியல் என 100-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழில் எழுத முடிந்தது. இன்றும் தொடர முடிகிறது.
பல்கலைக்கழகங்களுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்காகவும் தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு புத்தகங்களை ஆங்கிலத்திலும் எழுதி அவை மாணவர்களுக்கு பாடதிட்டமாக இருந்தாலும் அவற்றை எழுதும்போதுகூட எளிமையான தமிழில் விளக்கும் பாவத்துடன்தான் அணுகி எழுதுகிறேன்.
தொழில்நுட்ப வளர்ச்சி
தமிழகமெங்கும் 1990-க்குப் பிறகானவர்களுக்கு தொழில்நுட்பத்தைத் தமிழில் கொண்டு சேர்த்த முயற்சியில் பெரும் பங்கு வகித்திருக்கிறேன் என்பதில் மனநிறைவு உண்டு எனக்கு.
தமிழில் வெளியான தொழில்நுட்பம் சார்ந்த அச்சு புத்தகங்கள் நூலகங்களில் இடம்பெற்றதே தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிகளில் எல்லாம் தொழில்நுட்பம் சென்று சேர்ந்தமைக்கு மிக முக்கியக் காரணமானது.
தமிழில் தொழில்நுட்பத்தை எளிமையாகக் கொண்டுவந்ததில் புதுமை; ஆசிரியர் இல்லாமலேயே புத்தகத்தை வைத்துக்கொண்டு கம்ப்யூட்டரில் பயிற்சி செய்து கற்றுக்கொள்ளும் எளிமையான நுணுக்கம்; தமிழ் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொழில்நுட்ப வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தையே பயன்படுத்தி வரும் பாங்கு; இவைதான் தொழில்நுட்பம் சார்ந்த என் எழுத்துக்களின் சிறப்பாக பிறர் சொல்லும் கருத்துக்கள்.
என் நிறுவனத்தை (காம்கேர் சாஃப்ட்வேர்) தொடங்கிய காலம்தொட்டு என் தொழில்நுட்ப அனுபவங்களை அப்படியே எழுத்துக்களில் பதிவு செய்து புத்தகங்களாகக் கொண்டு வந்துகொண்டிருக்கிறேன்.
அச்சுப் புத்தகங்களில் மட்டுமில்லாமல் CBT (COMPUTER Based Tutorial), WBT (WEB Based Tutorial) என எந்தெந்த வழிகளில் எல்லாம் தொழில்நுட்பத்தை தமிழில் கோண்டு சேர்க்க முடியுமோ அத்தனை முயற்சிகளையும் அந்தந்த காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேற்கொண்டேன்.
கல்வி சார்ந்து தமிழில் ஆடியோ புத்தகங்கள், வீடியோ புத்தகங்கள் என இ-கன்டென்ட் தயாரிப்புகளையும் தயாரித்து வருகிறோம்.
இப்போது மின்னூல்களில் (E-Books) அதிக கவனம் எடுத்து வருகிறோம். அடுத்தகட்டமாக APP வடிவிலும் புத்தகங்களை கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறோம்.
எளிய தமிழில் தொழில்நுட்பம் ஒருபக்கம். நூலகங்களில் அவை பிரதான இடம் பெற்றது ஒரு பக்கம். இதன் காரணமாய் புத்தக விற்பனையும் உச்சம் பெற்றது. இப்படி எல்லா பக்கங்களிலும் தமிழில் தொழில்நுட்பம் பரந்து விரிந்து வளர்ந்தது.
தொழில்நுட்பத்தை அவரவர்கள் தாய்மொழியில் பயன்படுத்தும் நுட்பத்தைக் கொண்டு வந்ததும், கம்ப்யூட்டர் / லேப்டாப் விலை குறைந்ததும், இன்டர்நெட் கட்டணம் சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் சரிந்ததும் நம் மக்கள் தொழில்நுட்பத்துடன் இணைந்து பணிபுரிய காரணமாக இருந்தது.
இப்போது தொழில்நுட்பம் நம் மக்களை தன்னுடன் சேர்த்து அசுர வேகத்தில் இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.
வாசிப்பு குறைவும் அச்சுப் புத்தகங்களின் வீட்சியும்
- தொழில்நுட்பத்தின் அசுர வேகப் பயணத்தில் நம் மக்களுக்கு வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பகிரப்படும் செய்திகளை நுனிப்புல் மேயும் மனப்பாங்கு அதிகரிகரித்து விட்டது.
- ஏதேனும் தேவை என்றால் கூகுளில் தேடி எடுத்துக்கொள்ளலாமே… எதற்காக காசு கொடுத்துப் புத்தகம் வாங்க வேண்டும் என்ற மனோபாவமும் அதிகரித்து விட்டது.
- அத்தனையும் இலவசமாக கிடைக்கும்போது காசு கொடுத்து எதற்காக புத்தகங்கள் வாங்க வேண்டும்?
- தவிர ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்களில் பெரும்பாலான அச்சுப் புத்தகங்கள் அவற்றின் அட்டையில் இருந்துத் தொடங்கி இம்பிரிண்ட் பக்கம் முதற்கொண்டு அச்சு அசலாக உள்ளது உள்ளபடி ஒரு புள்ளி, கமா, செமிகோலன் மாறாமல் கடை தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைப்பதைப் போல இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
- பிறகு எப்படி காசு கொடுத்து வாங்குவார்கள் அச்சுப் புத்தகங்களை?
- எழுத்தாளர்கள் பெருகி வாசகர்கள் குறைந்து வருகிறார்கள். எழுத்தாளர்களின் புத்தகங்களை அவரவர்கள் குழுக்களுக்குள் இருப்பவர்களும், அவர்களின் நண்பர்களும் மட்டுமே வாங்குவதையும் காண முடிகிறது.
- கதை, தன்னம்பிக்கை, நாவல்கள், இசை, நாடகம் இப்படி ஒவ்வொரு பிரிவினரின் புத்தகங்களையும் அந்தந்த துறை சார்ந்தவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். அதுவும் நட்புக்காக வாங்குபவர்களே அதிகம்.
- புத்தகங்களை வாங்கினால் வீடுகளில் வைப்பதற்கும் இடம் இருப்பதில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம்.
இ-புத்தகங்கள் வாசிப்பதும் சுகமே!
முன்பெல்லாம் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நிறைய புத்தகங்கள் வாங்குவேன். எனக்கு மட்டுமில்லாமல் அப்பா அம்மா அமெரிக்காவில் வசிக்கும் என் சகோதரன் சகோதரிக்காகவும் புத்தகங்களை வாங்கி குவிப்பது வழக்கம்.
பயணங்களின்போது ஷோல்டர் வலிக்க வலிக்க பல்வேறு டாப்பிக்குகளில் புத்தகங்களை ஒரு தனி பையில் சுமந்து சொல்வேன்.
அயல்நாட்டுப் பயணங்களிலும் அவர்கள் அனுமதிக்கும் எடைக்குள் புத்தகங்களுக்கும் பிரதான இடத்தை ஒதுக்கிக்கொள்வேன். நெடுந்தூர விமான பயணங்களில் ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்துக்கு மாற வேண்டிய சூழலில் பல மணி நேரங்கள்கூட காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதுபோன்ற சூழலில் நான் சுமந்து சென்ற புத்தகங்கள்தான் நேரத்தை சுலபமாகக் கடக்க உதவி செய்யும்.
ஆனால் இ-புத்தகங்கள் பெருகிவரும் இந்நாளில் 70 வயதைத்தாண்டிய என் அப்பா அம்மா உட்பட நாங்கள் அனைவருமே இ-புத்தகங்களுக்கு மாறிவிட்டோம்.
நான் மட்டுமல்ல என் பெற்றோரும் இலவசமாக படிக்க அனுமதிக்கும் பத்திரிகைகளை இலவசமாகவும், கட்டணம் செலுத்திப் படிக்கக் கூடிய தினசரி, வாராந்திர மாதாந்திர பத்திரிகைகளுக்குக் கட்டணம் செலுத்தியும் ஆன்லைனில்தான் படிக்கிறார்கள்.
கம்ப்யூட்டர், டெஸ்க்டாப், ஸ்மார்ட்போன், கிண்டில் என எல்லா சாதனக்களிலும் அவர்களாலும் வாசிக்க முடிகிறது.
முதலில் அச்சுப் புத்தகங்களுக்குப் பழகிய நம் கண்களும் மனதும் இ-புத்தகங்களுக்குப் பழகுவதற்கு சற்று முரண்டுபிடிக்கும்தான்.
நடைமுறையில் அச்சுப் புத்தகங்களைவிட எல்லா விதங்களிலும் மிக சுலபமாக இருப்பது இ-புத்தகங்களே. இந்த விஷயம் புத்தக பிரியர்களுக்கும், ஆராய்ச்சிக்காக நிறைய புத்தகங்களைப் வாசிப்பவர்களுக்கும் நன்கு தெரியும்?
ஏற்கனவே ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், வாட்ஸ் அப் என பலவழிகளில் தகவல்களைப் படித்துப் பழகிய நம் மக்களுக்கு இ-புத்தகங்களை வாசிப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான செயல்பாடல்ல.
கொஞ்சம் மெனக்கெட்டு இ-புத்தகங்கள் மீது கவனத்தைக் குவித்தால் அதுவும் சாத்தியமே.
இனி வரும் தலைமுறையினர் தமிழில் அச்சு புத்தகங்களை படிக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. காரணம் தமிழே அவர்களுக்கு வாசிக்க தெரியப்போவதில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இப்போதைய வாசகர்களின் வாசிக்கும் மனப்பாங்கும் மாறிவிட்டது.
நம்மில் பெரும்பாலானோர் நிமிடத்துக்கு ஒருதரம் பார்த்துக்கொண்டிருக்கும் ஃபேஸ்புக்கில்கூட ஒரு ஸ்கிரீனைத்தாண்டிய பதிவுகளை எழுதினால் யாருமே படிப்பதே இல்லை. கடந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள்.
முதலில் படத்தை கவனிக்கிறார்கள். அடுத்து முதல் வரி, சுவாரஸ்யமாக இருந்தால் தொடர்ந்து அடுத்த சில வரிகள், போரடித்தால் கடைசி வரிக்குத் தாவி விடுகிறார்கள்.
ஒருமுறை ஃபேஸ்புக்கில் என் பிறந்த நாளுக்கு என் அப்பா அம்மாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து என் இன்றைய உயர்வுக்குக் காரணமான என அப்பா அம்மா குறித்து எழுதி இருந்தேன்.
பலரும் என் அப்பா அம்மாவுக்கு திருமண நாள் வாழ்த்துச் சொல்லி இருந்தார்கள். பெரும்பாலானோர் முழு பதிவையும் படிப்பதில்லை. இவ்வளவுதான் வாசிப்பின் ஆழம் இங்கே.
அச்சுப் புத்தகமோ, இ-புத்தகமோ தமிழ் புத்தகங்கள் விற்பனை ஆவதற்கும் பதிப்புத்துறை வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கும் அடுத்துவரும் தலைமுறையினருக்கு தாய்மொழி தமிழை பள்ளியிலோ அல்லது பிரைவேட்டாகவோ கற்றுக்கொள்ளும் சூழல் வர வேண்டும். தமிழ்ப் பேசக் கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது, படிக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
கல்விச் சூழல், பெற்றோர் மனநிலை இப்படி எல்லாமே மாறினால் மட்டுமே வரும்காலத்தில் தமிழ் புத்தகங்கள் நிலைத்து நிற்கும். புதிதாக வாசகர்கள் உருவாகாவிட்டாலும் இப்போதிருக்கும் வாசகர்களையாவது தக்க வைத்துக்கொள்ள முடியும்.
அடுத்த செவ்வாய் கிழமை (மே 28, 2019)…
இ-புத்தகங்களை எங்கு வாங்கலாம்? எப்படி வாசிக்க வேண்டும்?
இ-புத்தகங்களை படிக்க கிண்டில் போன்ற சாதனங்களை வாங்க வேண்டுமா?
அவை விலை அதிகம் இருக்குமே?
இதுபோன்ற பல சந்தேகங்களுக்கான பதில்களை கொடுக்கிறேன்…
காத்திருங்கள்
எழுத்தும் ஆக்கமும்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 21, 2019