கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்
நூலாசிரியர்கள் – பிரியசகி; ஜோசப் ஜெயராஜ் ச.ச.
‘டிஸ்லெக்சியா’ என்ற கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூல் கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் பேருதவியாக இருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
புத்தகத்தை தன்னம்பிக்கை சொட்ட சொட்ட எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தும் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.
இந்த புத்தகத்தில் என்னைக் கவர்ந்த வாசகங்கள் உங்கள் பார்வைக்கு…
- கடினமான வேலைகளுக்குப் பிறரால் சோம்பேறியென அழைக்கப்படும் ஆட்களைத் தேர்வு செய்கிறேன். ஏனெனில் அவர்களால் அந்த வேலையைச் செய்து முடிக்க சுலபமான வழியைக் கண்டுபிடிக்க முடியும் – பில்கேட்ஸ்
- சிக்கலான நூற்கண்டில் சிக்கு எங்கே கண்டுபிடி. சிக்கு விழுந்த விதம் புரிந்தால் அவிழ்க்கும் முறை சுலபம். புரிந்துகொள்ள மனமிருந்தால் தீர்வு என்பதும் சுலபம்.
- வேதனைகளை வாய்ப்பாகக் கருதினால் வேதனை சாதனையாக மாறிப்போகும்.
- பிள்ளைகள் தவறு செய்யும்போது கண்டிப்பதாக இருந்தாலும் ‘நீ செய்த காரியம் முட்டாள்தனமானது’ என்று சொல்லலாமே தவிர ‘நீ ஒரு முட்டாள்’ என சொல்லக் கூடாது.
- கூட்டும்போதும், பெருக்கும்போதும் விடை அதிகரிக்கும். கழிக்கும்போதும் வகுக்கும்போதும் விடை குறையும் என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை அடிக்கடி சொல்லி பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும்.
- நம் பிள்ளைகளின் சிறுசிறு தவறுகளை குத்திக்காட்டி அவர்களது சிறகுகளை ஒடிக்காமல் அவர்களது நிறைகளுக்காகப் பாராட்டி தன்னம்பிக்கை உள்ளாக்குவதே முக்கியம்.
- உண்டிக்கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – இது பழமொழி. வாசிக்க கற்பித்தோர் சுவாசிக்க கற்பித்தோரே – இது புதுமொழி.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், வால்ட் டிஸ்னி, ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன், வின்ஸ்டன் சர்ச்சில், அகதா கிறிஸ்டி, டாவின்சி, முகமது அலி, பில்கேட்ஸ், டாம் க்ரூஸ், அபிஷேக் பச்சன், நந்தகுமார் ஐ.ஏ.ஸ் ஆகிய இவர்கள் யாவரும் ‘டிஸ்லெக்சியா’ என்ற கற்றல் குறைபாடு இருந்தும் தங்கள் சுயமுயற்சியினால் கடின உழைப்பால் வாழ்வில் வெற்றி கண்டவர்கள் என்ற செய்தியை சொல்லியிருப்பது இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
33 மாதங்கள் கற்றல் குறைபாடுகள் என்ற தலைப்பில் அரும்பு மாத இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே ’ கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்’ என்ற இந்த நூல். புத்தகம் முழுவதும் உரையாடல் போல அமைத்திருப்பது சிறப்பு.
கற்றல் குறைபாடு இல்லாதவர்களுக்கும் இந்த நூல் வாழ்க்கையின் மீது நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்திருப்பதே இந்த நூலை எழுதிய நூலாசிரியர்களுக்கும், பதிப்பாளருக்குமான வெற்றியாக அமைந்துள்ளது. வாழ்த்துகள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 21, 2019