டெக்னோஸ்கோப்[7] – உலகின் முதல் புரோகிராமர் ஒரு பெண்!

இன்றைக்கு நம் உள்ளங்கையில்  பொதிந்து வைத்திருக்கும் மொபைல் போனில் கம்ப்யூட்டரையும், இண்டர்நெட்டையும் அடக்கி இந்த உலகையே நம் கைவிரல் அசைவில் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்று தெரியும்.

சார்லஸ் பாபேஸ் (1791-1871) என்பவர் தான் முதன் முதலில் கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்து Analytical Engine என்ற முதல் கம்ப்யூட்டரை உருவாக்கினார்.

இவர் கண்டுபிடித்த கம்ப்யூட்டரை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டது. அதன் எடை ஆயிரம் கிலோ. அந்தக் கம்ப்யூட்டரின் வேகமும் மிகவும் குறைவு. ஆனால், தற்போதைய சாதாரண கம்ப்யூட்டர்களில் நினைவாற்றல் அந்த முதல் கம்ப்யூட்டரின் நினைவாற்றலை விட 10 லட்சம் மடங்கு அதிகம்.

அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான ‘ அடா பைரன் லவ்லேஸ்’ என்பவர்.

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் அடா பைரன் லவ்லேஸ்(1816-1852). இவர் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள். லவ்வேஸ் சிறுவயதிலிருந்தே தனது தந்தைப் போல கவிஞராகவும் தனது தாயான அன்னபேலே போல கணித வியலாளருமாக சிறந்து விளங்கினார்.

எழுத்து, கணிதத்தோடு இசைத்துறையிலும் சிறந்து விளங்கிய அடா லவ்வேஸ் தனது 18 வயதில் சார்லஸ் பாபேஜ் உடன் இணைந்து “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பின் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அதோடு அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார். இதுவே உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமாகக்  கூறப்படுகிறது. அக்கால கம்ப்யூட்டர் உருவாக்கத்திற்கு பெரிதும் உதவியது அடா எழுதிய புரோகிராம்கள் எனவும் சொல்லப்படுகிறது.

கம்ப்யூட்டர் துறையில் நீங்காத இடத்தைப்பெற்ற அடா லவ்வேஸ் கம்ப்யூட்டர்கள் மூலம் இசையமைக்க இயலுமென அப்போதே கூறினாராம்.

தொழில்நுட்ப துறையில் பெரிதும் ஆர்வம்காட்டி சாதனைகள் புரிந்த அடா லவ்வேஸ் தனது 36-வது வயதில் நவம்பர் 27-ல் 1852 ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் பெண்களின் முன்னோடியாக திகழ்ந்த அடா லவ்வேஸ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் படைத்த சாதனைகளை கொண்டாடும் விதமாக  ‘அடா லவ்வேஸ் தினம்’ அனுஷ்டிக்கப்படுகிறது.

அவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கம்ப்யூட்டர் லாங்குவேஜ் ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.

பல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும் . இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1984ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எழுத்தும் ஆக்கமும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூன் 18, 2019

(Visited 79 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon