தாய்மொழி அத்தனை கஷ்டமா?
கம்ப்யூட்டரில் C மற்றும் C++ என இரட்டை மொழிகள் ரொம்ப ‘பிரபலம்’. இதை தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவர்கள் நன்கறிவர்.
இந்த இரண்டு மொழிகளில் புலமைப் பெற்றிருந்தால் தொழில்நுட்பத்தில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம். ஜாவா, டாட் நெட், சி ஷார்ப் டாட் நெட், ஏ.எஸ்.பி டாட் நெட், விபி டாட் நெட், பைத்தான் இப்படி எதுவாக இருந்தாலும் ஜமாய்க்கலாம்.
ஏனெனில் லாஜிக் மற்றும் புரோகிராம் எழுதும் நுணுக்கத்தை C, C++ மொழிகளைப் போல வேறெந்த மொழியிலும் கற்க இயலாது. இவை இரண்டும் கம்ப்யூட்டரின் தாய்மொழி போல கருதப்படுகிறது.
தாய்மொழியில் புலமை பெற்றிருந்தால் உலகில் வேறெந்த மொழிகளையும் சுலபமாகக் கற்கலாம்.
இது கம்ப்யூட்டர் மொழிகளுக்கும் பொருந்தும், நாம் பேசும் மொழிகளுக்கும் பொருந்தும்.
அவரவர் தாய்மொழியில் எழுதவும், பேசவும், படிக்கவும் தெரிந்திருப்பவர்களுக்கு கற்பனை சக்தி அதிகம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சீக்கிரமாக புரிந்துகொள்வார்கள்.
மொழிகளில் உள்ள எழுத்துருக்கள் தான் மாறுகிறதே தவிர இலக்கணங்களின் அடிப்படை ஒன்றுதான். தாய்மொழியில் (அது எந்த மொழியாக இருந்தாலும்) இலக்கணத்தை புரிந்துகொள்வது சுலபம். அதனால்தான் அதில் எழுதவும், பேசவும், படிக்கவும் தெரிந்திருந்தால் உலகில் வேறு எந்த மொழியையும் கற்பது சுலபமாக இருக்கும்.
எந்த மொழியையும் கற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் தாய் மொழியை அறிந்துகொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 25, 2019