சிறுகதைத் தொகுப்பு – யசோதையின் கண்ணன்
கதையாசிரியர்: கமலா நடராஜன்
பதிப்பகம்: காயத்திரி பதிப்பகம் (044-24898162)
‘யசோதையின் கண்ணன்’ என்ற சிறுகதை தொகுப்பின் பெயரே ஈர்ப்பாக இருக்க, அந்தக் கதையையே முதல் கதையாக எடுத்துப் படித்தேன்.
ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு கருத்தும் கற்பனையும் நிறைந்த பாசமும் பரிதவிப்பும் கலந்த ஒரு நெடும் நாவலை கதையாக்கியுள்ள நூலாசிரியரை நினைத்து வியந்தேன்.
இந்தக் கதையில் வரும் இரண்டு ஜோடிகள் அந்தக்காலத்து ஜெமினி கணேசன் சாவித்திரி ஜோடியையும், சிவாஜி எம்.என்.ராஜம் ஜோடியையும் நினைவூட்டிச் சென்றார்கள்.
இந்த சிறுகதை தொகுப்பை எழுதியவர் திருமதி கமலா நடராஜன். வயது 87. தன் 83 வயதில் இருந்து எழுத ஆரம்பித்தவரின் முதல் சிறுகதை தொகுப்பு நூல் இது.
வெளியிட்டவர் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவன் தனது காயத்திரி பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது. இவர்தான் நூலாசிரியரின் மூத்த மகள்.
தன் அம்மாவின் முதல் நூல் வெளியீட்டு விழாவை சமீபத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கல்சுரல் சென்டரில் வெகு விமர்சையாக நடத்தினார்.
இந்த புத்தகத்தில் உள்ள எல்லாக் கதைகளையும் படித்து முடித்தபோது வேறொரு உலகுக்குச் சென்று வந்ததைப் போன்ற ஓர் உணர்வு.
இந்த நூலில் உள்ள எல்லா கதைகளிலும் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யத்தை அழகாக எடுத்துச் செல்கிறார். கணவன் அல்லது மனைவி இருவரில் யார் ஒருவர் இறந்தாலும் மற்றொருவரும் இறந்துவிடுவதைப் போல கொண்டு சென்று கணவன் மனைவி பாசப்பிணைப்பை அந்தக் கால பாணியில் எடுத்துச் சென்றிருப்பது அருமை.
காதலையும் விட்டு வைக்கவில்லை. காதல் ஜோடிகளை நாகரிகமாக காட்டியுள்ளார்.
ஆபத்தில் உதவினாலே காதல் வந்துவிடுவதாக இன்ஸ்டன்ட் காதல்களை காட்டும் சினிமா போல் இல்லாமல் ஆபத்தில் உதவுபவர்களை அண்ணனாகவும், தங்கையாகவும் பாவிக்கும் மனோபாவத்தை விவரிப்பது தெய்வீக ரசனை.
“தாயுமானவள் என்ற கதையில் ‘ஆண் பெண் உறவில் காதல், திருமணம், சகோதரத்துவம், தாயன்பு மட்டுமில்ல, அதற்கு மேலும் ஒரு விளக்க முடியாத தெய்வீக உணர்வு இருக்கிறது. இதற்கு இந்த சமுதாயம் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும்… என்னைப் பொருத்தவரை பத்மா ஒரு தாயுமானவள்” என்று கதை நாயகன் சொல்லுவதாக முடித்திருப்பார். இந்த ஒரு கருத்தில் நூலாசிரியர் வாசகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிடுகிறார்.
பெண்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், புதுமைப் பெண்களாகவும் காட்டியிருக்கும் அதே சமயம் அவர்கள் நம் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காதவர்களாகவும் காட்டியுள்ளார்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை உணர்த்தவும் ஒரு கதை எழுதியுள்ளார்.
‘அன்புக்கு பாஷை எதற்கு… மனிதர்களாக இருந்தால் என்ன, பறவைகளாக இருந்தால் என்ன… தெய்வம் எதிலும் இருக்கிறார்…ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள கடவுள் அன்பைப் பாலமாக வைத்திருக்கிறார் போல…’ என்பது போன்ற எழுத்து நடை வாழ்க்கையின் மீதான நம்பிக்கயை உயர்த்துகிறது.
நூலாசிரியர் பெரும்பாலான கதைகளில் இறைசக்தி மூலமாக தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை கொடுத்து சபாஷ் போட வைக்கிறார்.
மொத்தத்தில் என்னைக் கவர்ந்த கதை நாயகி ‘பாவாயி’. இந்த பெயரையே கதையின் பெயராகவே வைத்துவிட்டார்.
87 வயது அனுபவத்தின் சிந்தனை. சற்று அலசித்தான் பாருங்களேன்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 27, 2019