பலருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதைவிட தானே ஒரு பிசினஸ் தொடங்குவதில் விருப்பம் இருக்கிறது. தவறில்லை. ஆனால் சில புரிதல்களை மனதில் நிறுத்திக்கொண்டுத் தொடங்க வேண்டும்.
பல வருடங்களாக பத்திரிகை துறையில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் அவர் மனைவியுடன் சேர்ந்து கேட்டரிங் பிசினஸ் தொடங்கியபோது என்னிடம் அவர் பகிர்ந்துகொண்டவை இன்றும் நினைவில் இருக்கிறது.
‘ஒருவரிடம் கை கட்டி அடிமைபோல வேலை பார்த்து பார்த்து அலுத்துப் போச்சு மேடம்… அதான் சொந்தமா பிசினஸ் ஆரம்பிச்சுட்டேன்…’
நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
‘ஒரு நாள் லீவு போடக் கூட ஹெச் ஆர் கிட்ட ஆயிரத்தெட்டு காரணங்கள் சொல்லணும்… எனக்கான லீவை நான் எடுக்கக் கூட ஆஃபீஸ்ல மன்றாடணும்…’
என் அமைதி அவருக்கு உற்சாகத்தைக் கொடுக்க இன்னும் என்னென்னவோ சொல்லிக்கொண்டே போனார்.
இறுதியில் என் அனுபவத்தில் மூன்று கருத்துக்களை முன் வைத்தேன்.
‘முழு சுதந்திரம் கொடுத்துவிட முடியுமா?’
‘உங்களுக்கு பல பாஸ்கள்’
‘லீவுன்னா லீவுதான்!’
‘நீங்கள் ஓரிடத்தில் வேலை செய்வதையே என்னவோ கை கட்டி அடிமைப் போல வேலை பார்த்ததா சொல்றீங்களே… அப்போ நீங்கள் தொடங்கி இருக்கும் பிசினஸில் உங்களிடம் வேலை பார்ப்பவர்களும் அப்படித்தானே நினைத்துக்கொண்டு வேலை பார்ப்பார்கள்…’ என்று கேட்டேன்.
‘நான் அப்படி நடந்துகொள்ள மாட்டேன் மேடம். முழு சுதந்திரம் கொடுத்துவிடுவேன்…’ என்றார்.
‘அப்படித்தான் எல்லா முதலாளிகளும் தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு தாங்கள் முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்… ஏன் அண்மையில் நீங்கள் வேலையை உதறிவிட்டு வந்தீர்களே அந்த ஓனர்கூட அப்படித்தான் நினைத்துக்கொண்டிருப்பார். ஆனால் உங்களை திருப்திப்படுத்த முடிந்ததா அவரால்?’ என்றபோது அமைதியானார்.
நான் தொடர்ந்தேன்.
‘நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு ஒரு பாஸ்தான். உங்கள் வேலையில் ஏதேனும் பிழை நேர்ந்துவிட்டால் அவருக்கு மட்டும் பதில் சொன்னால் போதும். ஆனால் நீங்கள் வேலை கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டால் உங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரும் உங்களின் பாஸ்போலதான்.
குறிப்பாக நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கேட்டரிங் பிசினஸில் ஆர்டர் கொடுக்கும் மொத்த குடும்பமும் உங்கள் பாஸ்தான்’ என்றபோது நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கினார்.
நான் மேலும் தொடர்ந்தேன்.
ஓரிடத்தில் பணிபுரியும்போது ‘லீவு என்றால் லீவுதான்’. போனை ஆஃப் செய்துவிட்டு உங்கள் சொந்த வேலைகளைப் பார்க்கலாம். ஆனால் சொந்த பிசினஸில் அசதியாய் இருக்கிறதென்று அரை மணி நேரம் நிம்மதியாய் ரெஸ்ட் எடுக்க முடியாது. வருடத்தின் 365 நாட்களும் நினைவுகள் உங்கள் பிசினஸ் குறித்தே சுற்றிக்கொண்டிருப்பதை தவிர்க்கவே இயலாது.’
சொந்தமாக பிசினஸ் செய்வது நல்ல விஷயம்தான். ஆனால் பிசினஸ் செய்யும்போது கட்டற்ற சுதந்திரமாக இருக்கலாம் என நினைப்பதுதான் தவறான கண்ணோட்டம். அப்போதுதான் உங்களுக்கு நீங்களே எத்தனையோ கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மறவாதீர்கள்.
புதிதாக பிசினஸ் தொடங்க(கி) இருப்பவர்களுக்கான அத்தியாவசிய டிப்ஸ்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
- உங்கள் திறமை என்ன, சக்தி என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் புற காரணங்களினால் அவை மிகைப்படுத்தப்பட்டு உங்கள் கண்களை மறைத்து உங்களை அலைக்கழிக்காமல் இருந்தாலே நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.
- ஏதேனும் ஒரு காரணத்தால் பிசினஸில் தோல்வி அடைந்தால், வெற்றி பெற்றே தீருவேன் என உங்கள் உடல் மற்றும் மனநலத்தை அடகு வைத்துவிடாதீர்கள்.
- தன்னம்பிக்கை வேறு, சாத்தியக் கூறுகள் வேறு. சாத்தியமே இல்லாத விஷயங்களில் நீங்கள் எத்தனை தன்னம்பிக்கையாக இருந்தாலும் வெற்றிபெறுவது கடினம்.
- வளர்ச்சி வேறு, வீக்கம் வேறு. பிசினஸில் நாம் கொடுக்கும் இன்புட்டுக்கு அவுட்புட் கொடுத்தால் அது வளர்ச்சி. அதை மீறிய அவுட்புட் கிடைக்கிறதென்றால் நீங்கள் எங்கோ சறுக்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணருங்கள்.
- ‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டும்… இந்த பிராஜெக்ட்டை செய்தால் உங்களை உலகறியச் செய்கிறோம்…’ என உங்களை உசுப்பேற்றி தங்களுக்குத் தேவையானதை செய்துமுடித்துக்கொள்ளும் சுயநலவாதிகளும் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர். எனவே உங்கள் படிப்பு, திறமை இவற்றின் அடிப்படையில் தொடங்கி இருக்கும் அல்லது செய்துகொண்டிருக்கும் பணியில் இருந்து திசை திரும்பாதீர்கள்.
- உங்கள் திறமை என்ன, அதனடிப்படையில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள், எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது உங்கள் மனதுக்கு நன்கு தெரியும். எனவே உங்களை வஞ்சப் புகழ்ச்சி செய்யும் எந்த வார்த்தைக்கும் மயங்கி சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
- ‘நீங்கள் செய்துகொண்டிருக்கும் பிசினஸுடன் சேர்த்து இதையும் செய்யலாமே…’ என்று உங்கள் திறமையை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொண்டு உங்கள் பணிக்கு இம்மியும் சம்மந்தமே இல்லாத பிராஜெக்ட்டை உங்கள் தலையில் சுமத்தி நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணியின் தன்மையையே திசை மாற்றிவிடுபவர்களும் உண்டு. உங்களுக்கு நேரடியாக ஒரு பணியைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாமல் மற்றவர்களை நம்பி அதை பிராஜெக்ட்டாக எடுக்காதீர்கள்.
- ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்… நாங்கள் செய்து தருகிறோம்…’ என அரசியல் பிரமுகரோ, ஏதேனும் ஒரு துறையில் பிரபலமானவரோ சொன்னால் அதை வேதவாக்காக நினைக்க வேண்டாம். உங்களால் செய்து முடிக்கக் கூடிய வேலைகளை நீங்களே செய்துகொள்ளுங்கள். சிபாரிசை கூடுமானவரை தவிர்க்கவும்.
- ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று உறுதி அளிக்கும் நபர்கள் நீங்கள் சிக்கலில் மாட்டும்போது தொடர்பு எல்லைக்கு வெகுதூரம் சென்றிருப்பர் அலைபேசியில் மட்டுமல்ல, நேரில்கூட முக தரிசனம் கிடைக்காது.
- தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். கடன் கொடுக்கிறார்களே என கடன் வாங்கி அதை அடைப்பதற்காக சம்மந்தமில்லாமல் ஏதேனும் ஒரு பிராஜெக்ட்டை எடுத்து அதை முடிக்கவும் முடியாமல் கடனையும் அடைக்க முடியாமல் திண்டாட வேண்டாமே.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
September 3, 2019
சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’ மாத பத்திரிகையில் (செப்டம்பர் 2019)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 6
புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி – செப்டம்பர் 2019