ஒரு வேலையை இலக்காக்கிக்கொண்டால் அந்த இலக்கை நாம் பற்றிக்கொள்கிறோமா அல்லது இலக்கு நம்மைப் பற்றிக்கொள்கிறதா என்பதில்தான் இருக்கிறது வெற்றியின் சூட்சுமம்.
ஒரு நாட்டில் ஒரு ஜென் குரு இருந்தார். அவர் மிகச் சிறந்த வாள் வீரர்.
அவரைச் சந்திக்க வந்த புதிய சீடன் ஒருவன், ‘இந்த நாட்டிலேயே மிகச்சிறந்த வாள் வீரனாக வேண்டும்… உங்களால் பயிற்சி கொடுக்க முடியுமா?’ என்று கேட்டான்.
அதற்கு அந்த குரு, ‘இன்னும் 10 வருடங்களில் உன்னை மிகச் சிறந்த வாள் வீரனாக ஆக்கிக் காட்டுகிறேன்…’ என்றார்.
அதிர்ந்துபோன அந்த சீடன் ‘என்னது, பத்து வருடங்களா? என்னால் அதுவரை பொருத்திருக்க முடியாது. ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும். அதற்காக நான் இன்னும் இரண்டு பங்கு அதிகமாகக்கூட உழைக்கவும் தயார்’ என்றான்.
‘அப்படியா அப்போ நிச்சயம் நீ சிறந்த வாள் வீரனாக 20 வருடங்கள் ஆகும்!’ என்ற குருவை சீடன் திகைப்புடன் பார்த்தான்.
சீடன் கெஞ்சும் குரலில், ‘தேவைப்பாட்டால் மற்றவர்களைவிட நான் இன்னும் நான்கு பங்கு கடுமையாக உழைக்கிறேன்!’ என்றான்.
‘அப்படிச் செய்தால் 60 வருடங்கள் ஆகுமே!’ என்றார் குரு.
நாம் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும்போது ரொம்ப சீரியஸாக கஷ்டப்பட்டு உடலையும் மனதையும் வருத்திக்கொண்டு செயல்பட்டால் நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு பதட்டமும் படபடப்பும் ஏற்படும். இதனால் ரிலாக்ஸ்டான மனநிலையில் பணிபுரிபவர்களைவிட சீரியஸான மனநிலையில் பணிபுரிபவர்களுக்கு ஒரு செயலை முடிக்க வேண்டிய நாட்கள் அதிகம்தான் ஆகுமே தவிர குறையாது என்பதைத்தான் ஜென் குரு சொல்கிறார்.
இலக்கை நீங்கள் பற்றிக்கொள்வதற்கும், இலக்கு உங்களைப் பற்றிக்கொள்வதற்குமான இடைவெளியைத்தான் நீங்கள் பொறுமையாக கடக்க வேண்டும். அந்த இடைவெளியை உங்கள் படிப்பு, திறமை, உழைப்பு நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, நிதானம் இவற்றால் நிரப்பினால் வெற்றி நிச்சயம்.
ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு யோசிக்காமல் பதிலளித்துவந்த நான் ஓரிடத்தில் மட்டும் கொஞ்சம் யோசித்தேன்.
‘உங்கள் பிசினஸில் நீங்கள் எடுத்த எல்லா செயல்களும் வெற்றி அடைந்திருக்காது. தோல்விகளும் நஷ்டங்களும் ஏற்பட்டிருக்கலாம். அதை எப்படி சமாளித்தீர்கள்?’
இந்த கேள்வியை கேட்ட நொடிதான் என் முயற்சிகளில் ஏற்பட்ட தோல்விகள் என்னென்ன என்றே யோசித்தேன்.
ஏனெனில்…
வெற்றியும் தோல்வியும் சேர்ந்ததே ஒரு முயற்சி. வெற்றி என்பது குறைந்த அளவு நஷ்டங்களால் உண்டாவது. தோல்வி என்பது அதிக அளவு நஷ்டங்களால் உண்டாவது. அவ்வளவுதான்.
இது பிசினஸுக்கு மட்டும் அல்ல. தனிநபர் வாழ்க்கைக்கும் பொருந்தும். இதுதான் வெற்றி தோல்வி குறித்த என் பார்வை.
‘எங்கும் வெற்றி எதனினும் வெற்றி’ என்றில்லாவிட்டாலும் குறைந்தபட்சம் தோல்வியையாவது சந்திக்காமல் இருக்க அர்த்த சாஸ்த்திரத்தில் சில நுணுக்கங்களை சொல்லப்பட்டுள்ளன.
அர்த்த சாஸ்த்திரம் பொதுவாக சமூக அரசியல் நெறிமுறைகளுக்காகவே எழுதப்பட்டிருந்தாலும் அதில் தனிமனிதனுக்குத் தேவையான பண்புகளும் ஆங்காங்கே சொல்லப்பட்டிக்கின்றன.
ஐந்தறிவுள்ள மிருகங்களிடம் இருந்தும் பறவைகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து எத்தனை அழகாக விளக்கப்பட்டுள்ளது அர்த்த சாஸ்த்திரத்தில்?
சில நாட்களாக ஒரு ப்ராஜெக்ட்டுக்காக கெளடில்யரின் சாணக்கிய நீதி படித்துக் கொண்டிருக்கிறேன். பல்வேறு நூல்களை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் குறிப்பாக பி.எஸ்.ஆச்சார்யா எழுதி நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ள கெளடில்யரின் சாணக்கிய நீதி மற்றும் டாக்டர் என்.ஸ்ரீதரன் எழுதி கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுள்ள சாணக்கிய நீதி இருவரின் நூல்களில் விரிவான விளக்கங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சில உங்கள் பார்வைக்கு.
சிங்கமும் கொக்கும் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் இரண்டு; சேவலிடமிருந்து நாம் கற்க வேண்டிய விஷயங்கள் நான்கு; காகத்திடம் இருந்து ஐந்து; நாயிடம் இருந்து ஆறு; கழுதையிடம் இருந்து மூன்று. ஆக மொத்தம் 20 பாடங்கள்.
சிங்கம் கற்பிப்பவை(1):
- கையிலுள்ள நிறைவேற வேண்டிய திட்டம் எதுவாக இருந்தாலும் அதில் நம் முழு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். திட்டம் நிறைவேறும்வரை தொய்வு கூடாது. சிங்கம் அப்படித்தான் இரையைக் கொல்கிறது.
கொக்கு கற்பிப்பவை(1):
- கொக்கு நீர்நிலையில் மீனைப் பார்த்ததும் அசையாமல் அப்படியே நின்றுவிடும். அதன் கண்கள் இரையிடமே நிலைத்திருக்கும். எதையும் சாதிக்க நினைக்கும் மனிதன் சலனப்படாமல் தன் இலட்சியத்தில் முழு கவனத்தையும் மையப்படுத்த வேண்டும்.
சேவல் கற்பிப்பவை(4):
- விடியலில் எழுதல்.
- தற்காப்பு எதிர்ப்பு இரண்டுக்குமே தயார் நிலையில் இருத்தல்.
- தனக்குக் கிடைத்ததை நெருங்கியவர்களுடன் பங்கிட்டுக்கொள்ளுதல்.
- தனக்குரிய உணவின் பங்கை விட்டுக்கொடுக்காமல் இருத்தல்.
காகம் கற்பிப்பவை(5):
- காம உணர்வை மறைவாக மட்டுமே வெளிப்படுத்துதல்.
- ஒன்றைப் பிடித்தால் அதை விட்டுக்கொடுக்காமலிருத்தல்.
- பிற்காலத்துக்காக சேமித்தல்.
- எந்த நேரமும் எச்சரிக்கையாக இருத்தல்.
- யாரையும் முழுமையாக நம்பாமை.
நாய் கற்பிப்பவை(6):
- நாய்க்கு உணவு கிடைத்தால் முழுமையாக சாப்பிட்டுவிடும்.
- சாப்பிட கிடைக்கவில்லை என்றாலும் அது கவலைப்படுவதில்லை.
- அப்போதும் அது திருப்தியாகத் தூங்கிவிடும்.
- சிறு ஒலி கேட்டாலும் விழித்துக்கொள்ளும்.
- நாய் மிகவும் எஜமான விசுவாசம் உடையது.
- தேவைப்பட்டால் அது மூர்க்கமாக சண்டையிடும்.
கழுதை கற்பிப்பவை(3):
- சலிப்படையாத அதன் உழைப்பு.
- சூழ்நிலையில் சுகம் – கஷ்டம் உணராத நடுநிலைமை.
- சலனமடையாமல் எப்போதும் திருப்தியுடன் விளங்குதல்.
இந்த இருபது குணங்களையும் பின்பற்றுகிற மனிதனுக்கு எடுத்த காரியம் எல்லாவற்றிலும் வெற்றிபெற சாதகமான சூழல் ஏற்படும் என்கிறது அர்த்த சாஸ்த்திரம்.
சூழலை தன் திறமையினாலும், கடுமையான உழைப்பாலும், கற்றறிந்த அறிவாலும் சிறப்பான முறையில் கையாண்டு வெற்றிக்கு வித்திடுவது அவரவர் சீரிய முயற்சியில் உள்ளது.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
October 3, 2019
சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’ மாத பத்திரிகையில் (அக்டோபர் 2019)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 7
புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி அக்டோபர் 2019