பத்திரிகையாளராக!

பத்திரிகையாளராக  வெளியிட்ட மாத இதழ்…

பத்திரிகையின் பெயர் ‘டிஜிட்டல் ஹைவே’.

2003-ம் ஆண்டு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துக்காக தொடங்கப்பட்ட இந்தத் தொழில்நுட்ப மாத இதழுக்கு சில வருடங்கள் எடிட்டராகவும் இருந்திருக்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் அந்த இதழுடன்  மல்டிமீடியா அனிமேஷன் சிடி ஒன்றை இலவசமாக இணைத்து வெளியிடுவோம்.

பத்திரிகையின் அச்சுப் பிரதி மற்றும் அத்துடன் இணைத்துக்கொடுக்கும் அனிமேஷன் சிடி இரண்டுமே காம்கேரில் வடிவமைக்கப்பட்டன.

என் துறைசார்ந்த ஒரு பத்திரிகையின் தலைமை என்பது எத்தனை பெருமையான விஷயம். சுகமான அனுபவம்.

மதுரையில் இருந்து ஒரு பதிப்பாளர் வெளியிட அதன் ஆசிரியராக தலைமையேற்க என்னை தொடர்புகொள்ள மகிழ்ச்சியுடன் அதையும் ஏற்றுத் திறம்பட செய்துவந்தேன்.

தொழில்நுட்பத்துக்காகவே கொண்டுவரப்பட்ட இந்த மாத இதழை  தலைமை ஏற்று நடத்துவதற்கு இரண்டு காரணங்களுக்காக கொஞ்சம் யோசித்தேன்.

ஒன்று காம்கேரில் இதற்காக நேரத்தை ஒதுக்க முடியுமா என்கின்ற கேள்வி,  இரண்டாவது எங்கள் காம்கேரின் பணியின் இருந்து திசைமாறி சென்றுவிடுவேனோ என்கின்ற தயக்கம்.

நிறையவே யோசித்தேன். தொழில்நுட்பத்தை தமிழகமெங்கும் கொண்டு செல்ல மேலும் வலுவான ஓர் ஆயுதமாக பத்திரிகைப் பொறுப்பு தோன்றவே அந்தப் பொறுப்பையும் ஒரு ப்ராஜெக்ட்டாகக் கருதி ஏற்றேன். எங்கள் காம்கேரின் ஒரு பணியாகவே இந்தப் பத்திரிகைப் பணியும் நடந்து வந்தது.

முகப்பு அட்டையில் இருந்து பின்பக்க அட்டை வரை ஒவ்வொரு பக்கமும், என் கண்காணிப்பில் என் கண் முன்னே எங்கள் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது.

வடிவமைப்பு மட்டுமல்ல செய்தி சேகரிப்பு, நேர்காணல்கள், கட்டுரைத் தொகுப்புகள் என A-Z அத்தனையையும் நான் முடிவெடுக்க வேண்டும். பத்திரிகையில் ஒரு படைப்பு எழுதி வெளியாவதே சுகமான அனுபவமாக இருக்கும் வயதில் ஒரு பத்திரிகையையே நடத்தும் வாய்ப்பு என்றால் அது இறை அருள் என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

பளபள காகிதத்தில் பக்கத்துப் பக்கம் வண்ணமயமான வடிவமைப்பில் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு இணையாக வெளிவந்த அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அனுபவம் கொடுத்த தன்னம்பிகையும், தைரியமும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

பத்து வயதிலேயே என் திறமை எழுத்து, சகோதரியின் திறமை ஓவியம், சகோதரனின் திறமை கார்ட்டூன் என கண்டறிந்தோம். அம்மா அப்பாவின் வாசிக்கும் வழக்கத்தால் அந்த வழக்கம் எங்களுக்குள்ளும்.

அவர்கள் சேமித்து வைக்கும் பத்திரிகை செய்திகளை எங்கள் கைகளால் நாங்களே பைண்டிங் செய்வது, அவற்றை புத்தக அலமாரியில் லைப்ரரியில் அடுக்குவதைப்போல அடுக்குவது என எங்களைச் சுற்றி புத்தகங்களே. எங்கள் வீடே லைப்ரரிபோலதான் இருக்கும்.

நாங்கள் மூவரும் போட்டிப் போட்டுக்கொண்டு எங்கள் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்புவது, அது வெளிவரும் நாளை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குவது இப்படியாக என் கனவுகள் பத்திரிகை துறை சார்ந்தே இருந்தன.

நான் கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்றதால் என் பணி தொழில்நுட்பம் சார்ந்து அமைந்துவிட்டது.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்கவே யோசித்துக்கொண்டிருந்த 1992-ல் காம்கேர் நிறுவனத்தை தொடங்கி, சாஃப்ட்வேர் தயாரிக்கும் பணியை முதன்மைப் பணியாகக்கொண்டு செயல்படத் தொடங்கிய நிறுவனத்தின் வாயிலாக எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அத்தனையையும் எழுத்து, புத்தகம், பேச்சு, அனிமேஷன், பயிற்சி என எல்லா கோணங்களிலும் தொழில்நுட்பத்தை தமிழகமெங்கும் எடுத்துச் சென்றதில் பெரும்பங்கேற்றுள்ளேன்.

எந்த சூழலிலும் என் படைப்பாற்றலை விட்டுவிடாமல் தொழில்நுட்பம் பக்கம் மடைமாற்றினேன். அவ்வளவுதான்.

(Visited 98 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon