பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்க!

(NCBH குழும வெளியீடு, போன்: 044-26251968, 044-26258410, 044-26241288)

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட 2013–ம் ஆண்டு முழுவதும் ‘விவேகானந்தம்150 டாட் காம்’ என்ற இணையதளத்தில் விவேகானந்தர் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர்.

அந்த இணையதளத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செயல்படும் வாய்ப்பும் கிட்டியது. அந்த வருடம் முழுவதும் விவேகானந்தர் கட்டுரைகளை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு வித்தியாசமான கோணத்தில் கட்டுரைகளை எழுதி வந்தேன். பின்னர் அதைத் தொகுத்து ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகமாக வெளியிட்டேன்.

இதற்கு ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த  சுவாமி விமூர்த்தானந்தர் அவர்கள் அணிந்துரை எழுதிக்கொடுத்திருந்தார்.

அவரது அணிந்துரை உங்கள் பார்வைக்காக…

//ஆணித்தரமான ஒரு கேள்வியுடன் நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர். ‘பகுத்தறிவின் பயன் என்ன?’ முதல் அத்தியாயத்தில் பிடித்த நூலை விடாமல் இறுதிவரை எடுத்துச் சென்று இந்தக் கேள்விக்கு விடையாக விரிகிறது இந்நூல்.

மொத்தம் இருபது கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் சுவாமி விவேகானந்தரின் படத்துடன் ஒரு பொன் மொழி இடம் பெறுகிறது. அந்தப் பொன்மொழியைத் தன் வாழ்வின் அனுபவங்களுடன் விளக்கும் ஆசிரியர் முத்தாய்ப்பாக ஒரு பரிந்துரையை, ஒரு கேள்வியை அல்லது நம் மனதைத் தொடும் ஓர் எண்ணக் கீற்றோடு முடிப்பது சிறப்பு.

உடல் உறுப்பு தானம் கொடுக்கும்போது, இறந்த பின்னும் நாம் வாழ்கின்ற பாக்கியத்தைப் பெறுகிறோம்(பக்கம் 16) என்னும் சமுதாயப் பொறுப்பு, பணத்தை அறுவடை செய்வதற்காகவே பிள்ளைகளைப் படிக்க வைத்துப் பின்னர் அவர்களால் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படும் பெற்றோருக்கு ‘விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?’ என்ற கேள்வியுடன் ஓர் அறிவுறுத்தல் என்று ஆங்காங்கே சமுதாய நல்லுணர்வுகள் அள்ளித் தெளிக்கப்படுகின்றன.

ஆசிரியர் பெண்களுக்காகவே நான்கு தலைப்புகளை ஒதுக்கி, அவர்கள் பிரச்சனைகளைக் குறித்து, விவேகானந்தர் கருத்துகளை ஒட்டித் தம் வாழ்வின் அனுபவங்களை விரிவாகக் கூறுகிறார். ஆசிரியரின் பெண்களின் மீதான சிறப்பு அக்கறையும் அவர்களின் நிலை உயர வேண்டும் என்ற ஆதங்கமும் இதனால் வெளிப்படுகின்றன.

‘ஒரு பெண் தனது சிறப்புகளால் மட்டுமே அடையாளம் காணப்பட வேண்டும். உடலின் எடை, உயரம் இன்ன பிற கவர்ச்சிகளாலோ… அலங்காரங்களாலோ அடையாளம் கண்டு கொள்ளப்படக் கூடாது. எந்த ஒரு பெண் இந்த மனோநிலையை  அடைந்து, மன முதிர்ச்சி அடைகிறாளோ, அவளே சுதந்திரமான பெண்’ என்ற தனது அனுபவத்தில் விளைந்த கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

தம் அலுவலகத்தில் நடந்த சைபர் திருட்டைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்து, அதைச் செய்த அலுவலர் தம் தவறை உணர்ந்து திருந்தியபோது, அவரை மாமனிதராகப் பாவித்தது (பக்கம் 84),

‘ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதைப் பற்றியே பேசுங்கள், அதையே சிந்தியுங்கள், அது குறித்துக் கனவு காணுங்கள்!’ என்ற சுவாமிஜியின் இந்த அறிவுரையை ஏற்று, எந்த நேரமும் சிந்தித்து Y2K பிரச்சனையைத் தீர்க்க லாஜிக்குகளைக் கண்டுபிடித்தது(பக்கம் 115),

பகிர்ந்து வாழும் தன்மையுடைய ஒரு பெண் தன் மனதில் இடம் பிடித்தது(பக்கம் 122), தாழ்வு மனப்பான்மையில் தேங்கியிருந்த ஒரு பெண் தன்னம்பிக்கைப் பெண்ணாக நேர்ந்த தருணத்தில் சுவாமிஜியின் கூற்றை நினைவு கூர்தல்(பக்கம் 136), என்று தன் வாழ்வின் நிகழ்வுகளை சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், தான் அறியாமலேயே தன்னை வழி நடத்தியதை விவேகானந்த அனுபவமாக இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார், ஆசிரியர்.

ஆற்றொழுக்கு போன்ற பழகு தமிழிலான எளிய நடை; படிப்பவர் அருகில் அமர்ந்து பேசுவது போன்ற அணுகு முறை; வார்த்தை ஜாலங்களைத் தவிர்த்து, உண்மையை நேரடியாக உரைக்கும் பாங்கு போன்ற சிறப்பம்சங்கள் இந்த நூலை எல்லோருக்குமான ஒரு பரிசாக்குகின்றன.

ஒரு நிறுவன இயக்குநர் என்ற அளவில் நின்று விடாமல், தன்னை உயர்த்திக் கொண்டு, தன்னைச் சுற்றி உள்ளவர்களின் தரத்தையும் உயர்த்தும் நல்ல எண்ணத்துடன் செயல்படும் நூலாசிரியருக்கு சுவாமி விவேகானந்தர் தன் ஆசிகளை என்றும் பொழியப் பிரார்த்திக்கிறோம். – சுவாமி விமூர்த்தானந்தர்//

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
December 13, 2019

(Visited 105 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon