ராஜகோபால கனபாடிகள்!

ராஜகோபால கனபாடிகள்!

எங்கள் நெருங்கிய உறவினரும் ஆகச் சிறந்த வேதவித்தகருமான நன்னிலம் ராஜகோபால கனபாடிகள் (56) டிசம்பர் 24-ம் தேதி இரவு 10 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் சிறந்த வேத வித்வான். பாரம்பரியமான வைதீகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

வைதீகஸ்ரீ என்ற வேத பத்திரிகை நடத்தி வந்தார். http://www.vaithikasri.com/. பல்வேறு ஆன்மிக பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்தார்.

வேதம், உபநிடதம், தர்ம சாஸ்திரங்கள் குறித்து ஏராளமான ஆன்மிக புத்தகங்கள் எழுதியுள்ளார்.

தொடர்ச்சியாக ஆன்மிக உபன்யாசங்கள் செய்து வந்தார். யு-டியூபில் இவர் பெயரைத் தட்டினால் ஏராளமான ஆன்மிக உபன்யாச வீடியோக்கள் குவியும். இறப்புக்கு பின் என்ன நடக்கும்? என்ற இவரது உபன்யாசம் இந்த லிங்கில்… https://www.youtube.com/watch?v=ujRiowujLHE&feature=youtu.be

இவர் 1996 ஆம் ஆண்டில் இருந்து  ‘ஸ்ரீசீதாராமா குருகுலம்’ என்ற  வேதபாடசாலை நடத்தி வந்தார். அங்கு குருகுலம் வழக்கப்படி வேதங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. http://www.vedicgurukulam.com/

ஆன்மிக சேவைக்காக விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் மனைவி அன்னப்பூரணி குறித்தும் இங்கு சொல்ல வேண்டும். வேத குடும்பத்தில் பிறந்து சாஸ்திர சம்பிரதாயங்கள் வழுவாமல் கணவனுடன் இணைந்து பல்வேறு தர்மகாரியங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்.

எப்போதுமே மடிசார் கட்டிக்கொண்டுதான் இருப்பார். மடிசாரிலேயே ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு செல்லும் கம்பீரத்தை நான் கண்டு அதிசயத்திருக்கிறேன். இவருக்கு சமையல் முதல் சாஸ்திரம் வரை அத்துபடி. அலுவலக அக்கவுண்ட்ஸ் அத்தனையும் இவரது மேற்பார்வையில்தான். புத்தகம், பத்திரிகை, அச்சகம், உபன்யாசம் என அத்தனையிலும் கணவருக்கு உறுதுணையாக இருப்பவர்.

சென்னைப் புத்தகக்காட்சியில் இவர்கள் ஸ்டால் இல்லாமல் இருக்காது. அங்கு ராஜகோபால கனபாடிகளுடன் இவரையும் பார்த்திருப்பீர்கள். இருவரும் மாறி மாறி ஸ்டாலில் இருப்பார்கள்.

கனபாடிகள் பஞ்சகஜம் கட்டிக்கொண்டும், இவரது மனைவி அன்னப்பூரணி மடிசார் கட்டிக்கொண்டும் புத்தகக்காட்சியில் மற்ற ஸ்டால்களையும் பார்வையிடுவார்கள். அதுவே ஒரு மிடுக்கான செயல்.

இவருக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகன் கிருஷ்ணா தன் தந்தையுடனேயே வேதங்களில் ஈடுபட்டு எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வைதீகத்திலேயே ஈடுபட்டுள்ளார்.

இத்தனை சிறப்பு வாய்ந்த இவர் எங்கள் பெற்றோரிடம் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததுடன் என் வளர்ச்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டியவர். எங்கள் குடும்ப திருமணம் மற்றும் கிரஹப்பிரவேசங்களை மிகச் சிறப்பாக நடத்திக்கொடுத்தவர்.

ஈடு செய்ய முடியாத இவரது இழப்பை தாங்கும் சக்தியை இவருடைய மனைவி மக்களுக்கு கொடுத்து அருளவும் அன்னாரது ஆன்மா சாந்தியடையவும் இறைவனை பிராத்திப்போம்.

ஓம் சாந்தி.

காம்கேர் கே. புவனேஸ்வரி (டிசம்பர் 26, 2019)

(Visited 507 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon