ஹலோ with காம்கேர் – 4
ஜனவரி 4, 2020
கேள்வி: இறைசக்திக்கும் இயற்கைக்கும் என்ன வித்தியாசம்?
நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் நம்முடைய வெற்றி தோல்விகளுக்கு நம்முடைய திறமையும் உழைப்பும் மட்டுமே காரணம் என்று.
ஆனால் அப்படி அல்ல அது.
நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது. அதுவே இறைசக்தி. நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நம் உழைப்புக்கு ஏற்ப அமையவும் வெற்றி கிடைக்கவும் ஆத்ம திருப்தி உண்டாகவும் இறைசக்தியும் வேண்டும்.
நம்முடைய முயற்சிகள் அனைத்தையும் தொய்வின்றி செய்வதற்கு நம் உடல் நலனும் மன நலனும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா. அதற்கு உதவுவது இயற்கை.
இறைசக்தி, இயற்கை இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டால் காலம் என்ற ஆசானிடமாவது நம்பிக்கை வையுங்கள். காலம் கற்றுக்கொடுப்பதைப் போல வேறெந்த ஆசானும் சொல்லிக்கொடுத்துவிடப் போவதில்லை.
இதே கருத்தை அர்த்தமுள்ள இந்துமதம் நூல் மிக அழகாக சொல்கிறது.
‘எப்போது நீ நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உனக்கு மேலே ஒன்று வேலை செய்கிறது என்று அர்த்தம். அதன் பெயர்தான் விதி. வீரன் வெற்றி பெற்றால் வீரத்தால் விளைந்தது. கோழை தோல்வியடைந்தால் கோழைத்தனத்தால் வந்தது. வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பெற்றாலோ விதியின் பிரவாகம். எடுத்து வைத்த அடியெல்லாம் வழுக்குகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லையா. நின்றுவிடு. முடிவை கடவுளிடம் விட்டுவிடு. அவன்மீது நம்பிக்கை இல்லை என்றால் காலத்திடம் விட்டுவிடு. நடுக்கடலில் தத்தளிக்கும் ஆளே இல்லாத படகுகூட என்றோ ஒருநாள் ஏதோ ஒரு கரையைச் சேரும்…’
கிட்டத்தட்ட 365 நாட்களுக்கும் மேலாக தினமும் மிகச் சரியாக 6 மணிக்கு இந்த நாள் இனிய நாளாகட்டும் என வாழ்த்தி பதிவிட்டு வரும் என்னால் இன்று 6 மணிக்கு பதிவிட இயலாதததுக்கு ஒரு காரணம் உள்ளது. அதற்குள் பதட்டமாகி வாட்ஸ் அப்பிலும், மெசஞ்சரிலும் ஒரு சிலர் நலன் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
நேற்று இரவு 1 மணி முதல் உடல் நலம் சரியில்லாமல் இப்போது வரை தொடர்கிறது. மணித்துளிகள் 1,2,3,4,5,6…. என கடந்துகொண்டே இருந்தது. நானும் விழித்துக்கொண்டுதான் இருந்தேன். இயற்கை மருத்துவம் எதற்கும் கட்டுப்படவில்லை. துரும்பையும் தூக்கிப் போடக்கூட வலுவின்றி வலியுடன்கூட உடல் உபாதை.
நான் பொதுவாக மருத்துவமனை செல்வதில்லை. இயற்கை மருத்துவத்துக்கு கட்டுப்படாதபோது முடியவே முடியாத இறுதிகட்ட நிலையில்தான் செல்வேன். இன்று அந்த நிலை.
அந்த அப்பாவுடன் 7 மணிக்கு மருத்துவமனை சென்று திரும்பும் வழியில் அலுவலகத்துக்குச் சென்று சில முக்கிய பணிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்துகொடுத்துவிட்டு வீடு திரும்பினேன். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு வேலை நேரத்தில் வீடு திரும்புகிறேன்.
முதல் வேலையாக ‘ஹலோ With காம்கேர்’ பதிவை எழுதி போஸ்ட் செய்துள்ளேன்.
சாதாரண ஒரு ஃபேஸ்புக் பதிவை சரியான நேரத்துக்குக் கொடுக்கவே இயற்கையின் துணை அவசியமாகிறது என்றால் பெரிய பெரிய விஷயங்களுக்கெல்லாம் அது எத்தனை அவசியம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software