ஹலோ with காம்கேர் – 3
ஜனவரி 3, 2020
கேள்வி: நல்ல திறமை இருந்தும் நம்மைவிட திறமையில் குறைந்தவர்கள் புகழிலும் பணத்திலும் முன்னணியில் இருக்கிறார்களே?
இந்த ஏக்கம் இல்லாதவர்கள் அபூர்வம்.
வாழ்க்கையில் புகழ் அடைவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் திறமை மட்டும் போதாது.
அப்போ வேறென்ன வேண்டும்?
திறமையை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அப்டேட் செய்ய வேண்டும்.
இதையெல்லாமும் செய்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் முன்னேற முடியவில்லையே?
வேகமாக முன்னேற திறமையை சரியான இடத்தில் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
சரியான இடத்தில் என்றால்?
நீங்கள் ஓவியம் வரைபவர் என்றால் பத்திரிகைகளில் வரைந்துகொடுப்பதுடன் நின்றுவிடாமல் ஓவியத்தின் அடுத்த கட்டமான அனிமேஷனில் அந்தத் திறமையைப் பயன்படுத்த கற்க வேண்டும்.
இதையெல்லாமும் செய்தாலும் என்னைவிட திறமை குறைந்தவர்கள் புகழின் உச்சிக்குச் சென்றுவிட்டார்கள். என்னால் முடியவில்லையே?
இப்படி மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாமல் இருந்தாலே நீங்கள் நல்ல இடத்தில்தான் இருக்கிறீர்கள் என்பது புரியும். அனிமேஷன் கற்றுக்கொண்டு அனிமேஷன் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கும், அனிமேஷனை திரைத்துறையில் பயன்படுத்துபவர்களுக்கும் கிடைக்கின்ற பணமும், புகழும் வேறு மாதிரியாகத்தானே இருக்கும்.
திறமையை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள், எங்கு பயன்படுத்துகிறீர்கள், எதை நோக்கிப் பயணிக்கிறீர்கள், எதையெல்லாம் தியாகம் செய்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் வளர்ச்சி இருக்கிறது.
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் வளர்ச்சி என்பது பணமும் புகழும் மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கைக்கு உந்துசக்தியாக இருக்கும் ஆத்மதிருப்தி போதுமான அளவு தொடர்ச்சியாகக் கிடைப்பதுகூட வளர்ச்சிதான்.
ஒரு குறும்படம்.
படிப்பில் ஆர்வமே இல்லாத ஒரு மாணவன். எப்போதும் எல்லா சப்ஜெக்ட்டிலும் ஃபெயில் மார்க். படிப்பைவிட ஓவியத்தில்தான் ஆர்வமாக இருக்கிறான்.
இதற்காகவே அவன் அப்பாவிடம் தினமும் திட்டும் அடியும் வாங்குகிறான். அம்மா அவனை தட்டிக்கொடுத்து படிப்பில் முனைப்பு ஏற்பட உதவுகிறார். ஆனாலும் அவனுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படவே இல்லை.
இதன் காரணமாய் ஒரு கட்டத்தில் அவன் அம்மா அவனுடன் பேசுவதை நிறுத்துகிறார். அம்மா தன்னுடன் பேசாததால் அவன் மனமுடைந்து நன்றாக படிக்க முயற்சிக்கிறான்.
தேர்வில் எல்லா சப்ஜெக்ட்டிலும் பாஸ் மார்க் வாங்குகிறான். வகுப்பாசிரியர் அவன் பாஸ் மார்க் வாங்கியதற்காகப் பாராட்டியதோடு மற்ற மாணவர்களையும் எழுந்து நின்று கைத்தட்டச் சொல்கிறார். ஒரு பேனாவை பரிசளிக்கிறார்.
‘ஜஸ்ட் பாஸ்’ ஆனவனுக்கு கைத்தட்டலுடன் பரிசும் கொடுக்கிறாரே ஆசிரியர் என மற்ற மாணவர்கள் மனம் குமைகிறார்கள்.
வீட்டில் அவன் அம்மாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அன்று மாலை சாக்லெட் எடுத்துக்கொண்டு அதே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் அவனுடன் படிக்கும் மாணவர்கள் வீட்டுக்கெல்லாம் செல்கிறார். தன் மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்.
என் மகன் முதல் ரேங்க், என் மகன் எல்லா சப்ஜெக்ட்டிலும் நூற்றுக்கு நூறு, என் மகள் மொழிப்பாடத்தில்கூட செண்டம் எடுத்திருக்கிறாள் என ஒவ்வொருவரும் வழக்கம்போல தங்கள் பெருமையைச் சொல்ல ஜஸ்ட் பாஸ் ஆன மாணவனின் அம்மா என்ன சொல்கிறார் தெரியுமா?
‘அதெல்லாம் சரி, என் மகனுக்கு இன்று வகுப்பில் கைதட்டல் கிடைத்தது, ஆசிரியர் பேனா பரிசளித்துள்ளார்… உங்கள் பிள்ளைக்குக் கிடைத்ததா?’ என்ற ஒற்றை கேள்வியில் அவர்களை வாயடைக்கச் செய்கிறார்.
ஒருசிலருக்கு நூற்றுக்கு நூறு வாங்குவது சாதனை, ஒரு சிலருக்கோ பாஸ் மார்க் வாங்குவதே சாதனைதான்.
இதுதான் சாதனையின் அளவுகோல்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software