ஹலோ with காம்கேர் – 38
February 7, 2020
கேள்வி: மரணத்துக்கான முன்னேற்பாடுகள் அத்தனை கொடூரமானதா?
முன்பெல்லாம் ‘நல்லது செய்தால் சொர்க்கத்துக்குப் போகலாம், தப்பு செய்தால் நரகத்துக்குத்தான் போகணும்’ என்று சொல்லி சொல்லி வளர்த்தார்கள்.
இப்படிச் சொன்னவர்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட்டா வந்து சொன்னார்கள்.
ஆனாலும் நம் மக்கள் இதையெல்லாம் நம்பினார்கள். ஓரளவுக்கு தங்கள் மனசாட்சிக்கு உட்பட்டு நல்லவிதமாகவே நடந்துகொண்டார்கள்.
சொர்க்கம் என்பதை பாலும் தேனும் ஓடுகின்ற இடமாகவும், பூக்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனமாகவும், கேட்டதெல்லாம் கிடைக்கும் பூங்காவனமாகவும் கற்பனையில் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தோம்.
நரகத்துக்குச் சென்றால் கொதிக்கும் எண்ணையில் முக்கி எடுப்பார்கள், பொசுக்கும் தீயில் தள்ளிவிடுவார்கள் போன்ற பயங்கரமான காட்சிகளை நினைத்துப் பார்த்து கொஞ்சமாவது நியாயமாக நடந்துகொண்டோம்.
சொர்க்கம் என்றால் நல்வழியில் சென்றால் கிடைக்கும் நன்மைகள். நரகம் என்றால் தீவழியில் செல்வதால் கிடைக்கும் கொடுமையான வெகுமதிகள்.
நாகரிகம் வளர வளர, அறிவியல் தெரிய தெரிய மனிதன் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்ய கற்றுக்கொண்டான்.
விளைவு. குழந்தைகளைக்கூட குழந்தைகளாகப் பார்க்கத் தெரியாமல் வெறும் சதைப் பிண்டங்களாய் பார்க்கும் மனோபாவம் பெருகிவிட்டது. வயதான பாட்டிகள், மனவளர்ச்சியில்லாமல் தெருவில் பிச்சை எடுக்கும் பெண்கள், தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுமிகள் என சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன் சுயலாபத்துக்குக் கணக்குப் பார்க்கும் கொடூரர்கள் பெருகிவிட்டார்கள்.
சமீபத்தில் ‘புதிய தலைமுறை’ பத்திரிகையில் தூக்கு தண்டனை எப்படி கொடுக்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
‘தூக்கிலிடப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தூக்கு தண்டனை கைதியின் உயரம், எடை, தூக்குக்கயிற்றின் நீளம், உடல் தொங்கவிடப்படும் உயரம், கைதியின் கழுத்தின் சுற்றளவு இவற்றை அளப்பார்கள்.
கைதியின் கடைசி ஆசை, எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டு அவை சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் அவற்றை நிறைவேற்றுவார்கள்.
தண்டனை நாளன்று கைதியின் கையைப் பின்னால் கட்டி, முகமூடியால் முகத்தை மூடி காவலர்கள் கைதியை தூக்கு மேடைக்கு அழைத்து வருவார்கள். தூக்கு மேடையில் கைதி முரண்டு செய்து அடம்பிடித்தால் அவர்களின் இரு கால்களையும் சேர்த்துக் கட்டுவார்கள். பிறகு தண்டனையை நிறைவேற்றுபவர் லிவரை பிடித்து இழுக்க மேடை தரைதளம் இறங்கும்…’
இப்படியாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
ஒரு மனிதனுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், அயல்நாட்டுப் பிரயாணம் இவற்றுக்கான முன்னேற்பாடுகள் அனைத்துமே சுகமான அனுபவங்கள். ஆனால் மரணத்துக்கான முன்னேற்பாடுகளை ஒரு மனிதன் எதிர்கொள்வது எத்தனை கொடியது.
இப்படியெல்லாம் நடக்கும் என தெரிந்திருந்தால், மரணத்தின் வாசலுக்குச் செல்வது இத்தனை வேதனையான அனுபவமாக இருக்கும் என முன்பே அறிந்திருந்தால் ஒரு வேளை தவறு செய்வதற்கு முன் யோசித்திருப்பார்களோ என அவர்கள் மீது சின்ன கழிவிரக்கம் தோன்றியது.
நன்றாக படித்தால் நல்ல வேலைக்குப் போகலாம், கார், பங்களா என வாழலாம் என சொர்க்கத்தைக் கற்பனை செய்யக் கற்றுக்கொடுக்கும் இந்த சமூகம் தவறு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் அது எத்தனை கொடூரமாக இருக்கும் என்பதையும் சொல்லிக்கொடுக்க தவறுவதாலும் குற்றங்கள் பெருகுகின்றன.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்லவிதமாக வாழ அறிவுரை சொல்வதுடன், நல்ல குணநலன்கள் இல்லாவிட்டால் என்ன மாதிரியான தண்டனைகள் கிடைக்கும் என்பதற்கு இதுபோன்ற சிறை கைதிகளின் தண்டனைகள் குறித்து எடுத்துச் சொல்லி விவாதிக்கலாம்.
நேர்மறையான தகவல்களைப் பேசி நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பது ஒரு வழி. எதிர்மறையான தகவல்களை(யும்) எடுத்துச் சொல்வதன் மூலம் நல்ல விஷயங்களை இன்னும் ஆழமாக குழந்தைகள் மனதில் பதியச் செய்வது மற்றொரு வழி.
முன்னதைவிட பின்னது சீக்கிரம் கற்றுக்கொடுக்கும்.
சொர்க்கத்தை காட்டி வளர்ப்பது முக்கியம். நரகம் எப்படி இருக்கும் என்பதையும் சொல்லி வளர்ப்பது அதைவிட முக்கியம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software