ஹலோ with காம்கேர் – 39
February 8, 2020
கேள்வி: யார் சொல்லும் ஜோதிடம் சரியாக இருக்கும்?
சமீபத்தில் பொன் டிவி தமிழ் என்ற யு-டியூப் சேனலுக்கு ‘புத்தகம் ஏன் வாசிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் என் வாசிப்பு அனுபவங்கள் குறித்த நேர்காணல் வெளியாகி இருந்தது. (வீடியோ லிங்க்: https://youtu.be/EpHiX2xjpGk)
இந்த வீடியோவில் எங்கள் காம்கேரில் நாங்கள் 4 ஆண்டுகள் (1992-1996) ஆராய்ச்சி செய்து தயாரித்த ஜோதிடம் சாஃப்ட்வேர் குறித்தும் சொல்லி இருந்தேன். எங்கள் கொள்ளுதாத்தா, தாத்தா, பெரியப்பா, அப்பா என அனைவருமே ஜோதிடக் கலையில் வல்லுநர்கள். ஆனால் அதை வைத்து அவர்கள் பிசினஸ் செய்ததில்லை. அவர்களின் வழிகாட்டுதலில் அவர்கள் வழியில் வந்த நாங்கள் நாங்கள் படித்த தொழில்நுட்பத்தை இணைத்து ஆய்வு செய்து சாஃப்ட்வேர் தயாரித்ததை குறிப்பிட்டிருந்தேன்.
எங்களுக்கு ஜோதிடக் கலையும் தெரியும், தொழில்நுட்பமும் தெரியும் என்பதால் இரண்டையும் இணைத்து சாஃப்ட்வேர் தயாரிப்பது எங்களுக்கு சுலபமானது.
அத்துடன் சாஃப்ட்வேர்கள் தயாரிப்பதுதானே எங்கள் பிரதானப் பணியும்கூட.
என் நேர்காணலைப் பார்த்துவிட்டு ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் அவர் ஜோதிடம் பார்த்த இடத்தில் ஜோதிட சாஃப்ட்வேர்களை பயன்படுத்தி பலன் சொன்னதாகவும். 40 சதவிகிதம் மட்டுமே சரியாக இருந்ததாகவும் சொல்லி இருந்தார்.
அவருக்கு மட்டுமில்லாமல் அவரைப் போன்ற பலரின் கேள்விக்காகவும் ஜோதிடம் குறித்து சுருக்கமாக விளக்கமளிக்கிறேன்.
ஜோதிடம் சாஃப்ட்வேர்களை வைத்துக்கொண்டு 100 சதவிகிதம் சரியாக பலன் சொல்ல முடியாது. ஜோதிடம் என்பது வெறும் கட்டங்களை பார்த்து சொல்வதல்ல.
இன்ன கட்டத்தில் இன்ன கிரஹங்கள் இருந்தால் இன்ன பலன் என்று பொத்தாம் பொதுவாக பலன் சொன்னால் எப்படி சரியாக இருக்கும்.
ஜோதிடம் என்பது வெறும் ராசி நட்சத்திரம், லக்னம் மட்டுமல்ல. அது ஒரு அற்புதமான கணிதம். ஆழமாக கற்க வேண்டிய கலை. முப்பது நாளில் ஜோதிடம் கற்கலாம் என்ற புத்தகத்தை வைத்துக்கொண்டெல்லாம் கற்றுக்கொண்டுவிட முடியாது.
ராசி, நட்சத்திரம், லக்னம் இவற்றுடன் கிரஹங்களின் இடங்கள், கிரஹங்களின் சேர்க்கைகள், எந்த கிரஹகம் எந்த கிரஹத்தைப் பார்க்கிறது, கிரஹங்களின் மறைவு ஸ்தானம், இப்போது நடந்துகொண்டிருக்கும் தசாபுத்தி, இவற்றுடன் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி இந்த காலக்கட்டங்களில் கிரஹ மாற்றங்கள் என பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தே ஜாதகப் பலன்களை சரியாக சொல்ல முடியும்.
ஆனால் இன்று மூலைக்கு மூலை ஜோதிடர்கள் பெருகிவிட்டார்கள். ஒரு சிறிய அறை. ஒரு லேப்டாப், அதில் இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட இலவச சாஃப்ட்வேர். சிலர் சில ஆயிரங்கள் முதலீடு செய்து சாஃப்ட்வேரை விலைகொடுத்தும் வாங்கியிருக்கலாம்.
உங்களிடம் உங்கள் பெயர், பிறந்த இடம், தேதி, நேரம் இவற்றை வாங்கிக்கொண்டு அந்த சாஃப்ட்வேரில் டைப் செய்து அது கொடுக்கின்ற விஷயங்களை உங்களுக்கு திரும்பச் சொல்லும் ஜோதிட வல்லுநர்களை நீங்கள் சந்தித்திருந்தால் அவர்கள் சொல்வது உங்களுக்கான பலன் இல்லை. சாஃப்ட்வேர் யார் தயார் செய்திருக்கிறார்களோ அவர்களின் தொழில்நுட்ப அறிவின் தரத்துக்கு ஏற்ப கொடுக்கும் பலன் என்ற அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.
அவர்களில் பெரும்பாலானோர் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி இவற்றை மட்டும் வைத்தே இந்த காலத்தில் இன்ன நடக்கும் என சொல்லுவார்கள். அத்துடன் கோயில்களுக்கு செல்லுதல், ஹோமங்கள் செய்தல், ராசி கற்களில் மோதிரம் போட்டுக்கொள்ளச் சொல்லுதல் என பரிகாரப் பலன்களையும் இலவச இணைப்பாக கொடுப்பார்கள்.
‘அப்போ யார்தான் பலன் சரியாகச் சொல்லுவார்கள்’ என்று கேட்கிறீர்களா?
அடிப்படையில் ஜோதிடக் கலையில் ஆழமான ஈடுபாடும், அதுகுறித்த அதீத ஞானமும் உள்ளவர்கள் நீங்கள் கொண்டு செல்லும் ஜாதகத்தைப் பயன்படுத்தாமல் அவர்களே ஜாதகம் எழுதி பலன் சொல்லுவார்கள். அதாவது ராசி கட்டம், நவாம்சம் கட்டம், பாவ கட்டம் (‘பா’-வை அழுத்தி வாசிக்காமல் ஆங்கில B ஐ உச்சரிப்பதைப் போல மென்மையாக வாசிக்கவும்) இவற்றை அவர்களே தாங்கள் கற்றறிந்த கலையின் ஞானத்தால் எழுதுவார்கள் அல்லது இந்த கட்டங்களை தயாரிக்க மட்டும் சாஃப்ட்வேர்களை பயன்படுத்துவார்கள்.
இவர்கள் ஜோதிட சாஃப்ட்வேர்கள் கொடுக்கும் பலன்களை கூற மாட்டார்கள். ஆழமாக ஆராய்ந்து கணக்கீடுகள் செய்து உங்கள் ஜாதகத்துக்கான பலனை கணித்துச் சொல்வார்கள்.
நீங்கள் கொடுக்கும் பிறந்த தேதி, நேரம், இடம் இவை சரியாக இருந்து நீங்கள் செல்லும் ஜோதிடரும் புலமை பெற்றவராக இருந்தால் 90 சதவிகிதம் அவர்கள் சொல்லும் பலன்கள் சரியாக இருக்கும்.
இதுதான் சாத்தியம். மற்றபடி ஜோதிடர்கள் முற்றும் உணர்ந்த முனிவர்கள் அல்ல. கடவுளும் அல்ல. அவர்களும் மனிதர்களே. ஜோதிடக் கலையைப் படித்தவர்கள். அவ்வளவே.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software