ஹலோ With காம்கேர் -37: யார் பிரபலம்?

ஹலோ with காம்கேர் – 37
February 6, 2020

கேள்வி: யார் பிரபலம்?

இந்த கேள்விக்கு பதில் எனக்கு நன்கு தெரியும்.

முன்பே வரையறை செய்யப்பட்ட பதிலை வைத்துக்கொண்டே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதால் அதை அழித்துவிட்டு புதிய பதிலை பதிய வைப்பதற்கு சிரமமாக உள்ளது.

ஃபேஸ்புக்கில் இரண்டு வருடம் முன்னர் எனக்கு அறிமுகம் ஆகியிருந்த ஒருவர் ‘ஆஹா, எவ்வளவு திறமைசாலி நீங்கள், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் உங்கள் மீது வெளிச்சம்படுகிறது…’ என்ற தொணியில் பின்னூட்டமிட்டிருந்தார்.

அவர் போக்கிலேயே சென்று அவருக்கு புரிய வைக்க முயன்றேன்.

‘நீங்கள் ரஜினி படம் பார்ப்பீர்களா?’ என்று கேட்டேன்.

‘நான் அவரது ஃபேன்’ என்றார் அவர்.

‘ஓ… அவர் அவ்வளவு பெரிய நடிகரா?’

(ரஜினி ரசிகர்கள் கோபப்பட வேண்டாம். என்னிடம் கேள்வி கேட்டவருக்கு புரிய வைக்கவே இப்படிக்கேட்டேன்)

‘என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்… எவ்வளவு பிரபலமான நடிகர். உலகத்துக்கே தெரியுமே…’

‘அப்படியா… நான் அவ்வளவாக சினிமா பார்ப்பதில்லை… அப்படியே பார்த்தாலும் ஆக்ஷன் படங்கள் பார்ப்பதில்லை…’

‘இப்போது சொல்லுங்கள், நான் பார்ப்பதில்லை என்பதற்காக ரஜினி பிரபலமில்லை என்று ஆகிவிடுமா?’

அவருக்கு நான் சொல்ல வருவதை புரிந்துகொள்ள முடியவில்லை. நான் திரும்பவும் விளக்கினேன்.

‘என்னைப் போல் எத்தனையோ பேர் அவர் படத்தைப் பார்க்காமல் இருக்கலாம், ஏன் அவரையேகூட தெரியாதவர்கள் இருக்கலாம். அதற்காக உலகமே கொண்டாடும் ஒரு நடிகர் பிரபலம் இல்லை என்று அர்த்தம் கிடையாதுதானே… அதுபோல் நான் என்னுடைய துறையில் உச்சத்தில் இருக்கிறேன்… நீங்கள் அது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம் அல்லது என் துறை சார்ந்த தேவைகள் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்… அதனால் உங்கள் பார்வை என் மீதோ நான் செய்துகொண்டிருக்கும் பணிகள் மீதோ படவில்லை… அதற்காக என் துறை சார்ந்து உலகம் முழுவதும் சில இலட்சம் மனிதர்களால் அறியப்பட்ட நான் என் துறையில் பிரபலம் இல்லை என்று ஆகிவிடுமா?’

இப்போது என்னிடம் கேட்டவர் தெளிந்து மன்னிப்பு கேட்டார்.

2000-ம் ஆண்டு. எங்கள் காம்கேரில் அனிமேஷன் துறையை அறிமுகம் செய்திருந்த நேரம். எங்கள் பல புதுமையான அணுகுமுறையினால் அந்தத்துறையிலும் சாதிக்கத் தொடங்கியிருந்த காலகட்டம் அது.

அந்த நேரத்தில் ஒரு பிரபல நடிகர் தன் மகனுக்கும் மகளுக்கும் அனிமேஷன் துறையில் இருக்கும் கல்வி வாய்ப்புகள் குறித்து பேசுவதற்காக அவரது உதவியாளர் மூலம் போனில் தொடர்புகொண்டு, ‘சாரை நேரில் வந்து சந்திக்க முடியுமா?’ என கேட்டார்.

நான் என்ன சொன்னேன் தெரியுமா?

‘பொதுவாக சனி ஞாயிறில் தான் இதுபோல ஆலோசனைகள் கேட்பவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியும்…’ என சொல்லி ஒரு சனிக்கிழமையின் தேதியைச் சொல்லி அவரது மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு என் அலுவலகம் வந்துவிடச் சொன்னேன்.

‘மேடம் அவர் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு பிசி…’ என்று படபடத்தார்.

‘சார், அவர் துறையில் அவர் பிசி, என் துறையில் நான் பிசி… அவர் என்னிடம்தான் ஆலோசனை கேட்க வேண்டும் என விரும்பினால் அவரை பிள்ளைகளுடன் என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்…’ என்று சொல்லி போனை வைத்தேன்.

சினிமா துறை சார்ந்தவர்களை சில கோடி மக்களுக்கு மத்தியில் பிரபலமாக இருப்பர். இலக்கியத் துறை சார்ந்தவர்கள் சில இலட்சம் மக்களுக்கு மத்தியில் பிரபலமாக இருப்பர். ஒரு குறிப்பிட்ட ஊரில் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பவர் அந்த ஊர் மக்களுக்கு மத்தியில் பிரபலமாக இருப்பர்.

அவரவர் துறை சார்ந்தும், இயங்கும் தளம் / களம் சார்ந்தும் அவரவர்கள் எல்லைக்குள் அவரவர்கள் பிரபலம்தான்.

எண்ணிக்கையில் எத்தனை பேருக்கு தெரிகிறோம் என்பதிலா பிரபலம் என்ற அங்கீகராம் இருக்கிறது?

அப்படிப் பார்த்தால் மருத்துவம், அறிவியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உழைத்துக்கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களை அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதற்காக அவர்கள் பிரபலம் இல்லை என்று அர்த்தம் இல்லையே?

பிரபலம் என்ற முத்திரை பெற்ற பாக்கியவான்களும், அந்த முத்திரையை விரும்பாத அல்லது கிடைக்காத உழைக்கும் வர்க்கத்தினரும் எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்?

உணவு உடை இருப்பிடம் தாண்டி தங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்துக்காகத்தானே.

என்னைப் பொருத்தவரை என்னை நோக்கி வரும் பத்திரிகை, தொலைக்காட்சி வெளிச்சங்கள், எனக்குக் கொடுக்கக் காத்திருக்கும் அங்கீகாரங்கள், விருதுகள் இவற்றை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. எனக்கு எது மனநிம்மதியை கொடுக்கிறதோ எது என் அன்றாடப் பணிகளை பாதிக்காமல் இருக்கிறதோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து (Note this point) ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது. என்னைப் போல பலரும் பல துறைகளில் இருக்கிறார்கள்.

அதுபோல கிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையையும் தன்வசம் வைத்துக்கொண்டு தங்கள் பணிகளை செய்வதற்கு எத்தனை உழைக்கிறார்களோ அதைவிட பலமடங்கு தங்கள் மீது வெளிச்சம் பாய்வதற்கும் மெனக்கெடும் பலர் பல துறைகளில் இருக்கிறார்கள்.

உலகம் சகல ஜீவராசிகளுக்கும் பொதுவானது. அதில் வாய்ப்புகளும் அனைவருக்கும் பொதுவானதே. அந்த வாய்ப்புகளில் நம்முடைய தேர்வுகளில்தான் நாம் ஒவ்வொருவரும் வித்தியாசப்படுகிறோம்.

அவரவர் துறையில் அவரவர் ராஜாதான். ஆனால் அதை நிரூபிக்க முயலும்போதுதான் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஈகோவில் முட்டிக்கொள்கிறோம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 71 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon