ஹலோ With காம்கேர் -40: தினமும் எழுதுவதற்கான கான்செப்ட்டுகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ஹலோ with காம்கேர் – 40
February 9, 2020

கேள்வி: தினமும் எழுதுவதற்கான கான்செப்ட்டுகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ஏற்கெனவே பலமுறை நான் சொல்லி இருப்பதைப் போல தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்துவிடுவேன். ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு சிறிய பிராத்தனை, பின்னர் ஒரு டம்ளர் சுடச்சுட ஃபில்டர் காபி இவற்றை முடித்துக்கொண்டு என் யதாஸ்தானத்தில் அமர்ந்து லேப்டாப்பை ஆன் செய்வேன்.

கோயில்களில் விஷேச தினங்களில் உற்சவ விக்ரகத்தை அதன் யதாஸ்தானத்தில் இருந்து வெளியே எடுத்து வைத்து  அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வீதி உலா அழைத்து வருவதைப் பார்த்திருப்பீர்கள். பின்னர் அதன் யதாஸ்தானத்தில் வைத்துவிடுவார்கள். அதாவது சுவாமி வழக்கமாக வீற்றிருக்கும் இடம் யதாஸ்தானம் எனப்படும்.

இந்த வார்த்தையை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் நேரங்களில் நான் அமர்ந்து பணி செய்யும் இடத்தை ‘யதாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறேன். இதைத்தவிர வேறெந்த ஒப்பீடும் இல்லை.

என் யதாஸ்தானத்தில் அமர்ந்தவுடன் அந்த நிமிடத்தில் ‘இன்று இதை எழுது’ என ஏதோ ஒரு சக்தி மனதுக்குள் மணி அடிக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

கான்செப்ட் மனதுக்குள் தோன்றியவுடன் அடுத்த 15 நிமிடங்களில் 350 வார்த்தைகளில் அது அழகிய கட்டுரை வடிவம் பெறும்.

பின்னர் அதற்கான படத்தை தேர்ந்தெடுப்பேன். படங்களின் தேர்வு என்பது சில நேரங்களில் எங்கள் காம்கேரின் அனிமேஷன் படைப்புகளுக்காக நாங்கள் தயாரித்தவையாக இருக்கும். சிலவற்றை போட்டோஷாப் மூலம் நானே வடிவமைக்கிறேன்.

சில நேரங்களில் கூகுளில் காப்பிரைட் இல்லாத படங்களை தேர்ந்தெடுப்பேன்.

புகைப்படமாக இருந்தால் நானே எடுக்கும் புகைப்படங்களையே பயன்படுத்துகிறேன்.

மொத்தமாக ஒரு நாள் பதிவிற்கு நான் எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகபட்சம் 30 நிமிடங்கள்.

என் நிறுவனப் பணிகள் சார்ந்து என் பணியாளர்களிடமும், வெளியிடங்களில் ப்ராஜெக்ட் மீட்டிங்குகளின் போதும், மேடை நிகழ்ச்சிகளிலும், மீடியா நேர்காணல்களிலும் பேசுவதோடு சரி. மற்றபடி வெளியில் பேசுவது குறைவு. ஆனால் பிறர் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். சந்திக்கும் மனிதர்களையும் படிப்பேன்.

வீட்டில் அப்பா அம்மாவுடன் அவ்வப்பொழுது அன்றாட வெளி உலக நிகழ்வுகளை விலாவாரியாக அலசி ஆராய்வேன்.

மேடை பேச்சாளர்கள் சிலர் ஒரே கருத்தை பல மேடைகளில் பேசுவார்கள். அவர்களின் மேடை நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக கவனிப்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும்.

அந்த குழப்பம் எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. குறைவான பேச்சு, நிறைய கவனிப்பு, ஆழமாக உள்வாங்கும் திறன், தேவையானதை தேவையான இடத்தில் வெளிப்படுத்தும் பாங்கு, நிறைய ஞாபகசக்தி இவைதான் தினந்தோறும் நான் என்ன எழுத வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கின்றன.

அத்துடன் என் எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒரே மாதிரியாக இருப்பதை என் எழுத்திற்கு நான் கொடுக்கும் மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன்.

எனக்குத் தெரியாததை எழுதுவதில்லை. நான் உணர்வதை மட்டும்தான் எழுதுகிறேன்.

நான் எழுதுபவை அனைத்தையும் நேரடியாக என் அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

நம் அனுபவம் என்பது நம் தனிப்பட்ட அனுபவம் மட்டும் இல்லையே. நம்மைச் சுற்றி இயங்குகின்ற பிரபஞ்சத்தில் உள்ள சகல ஜீவராசிகளின் அனுபவங்களும் சேர்ந்ததே நம் வாழ்க்கை.

அதைத்தான் நான் எழுதுகிறேன். மற்றபடி ‘இன்ன நாளில் இன்னது எழுத வேண்டும்’ என குறிப்பெல்லாம் வைத்துக்கொள்வதில்லை.

எதை எழுதுவதாக இருந்தாலும் அது என் மனதுக்குள் தங்காமல் திணறி தானாகவே எழுத்து வடிவில் வந்துகொட்டும்.

அப்படி நான் எழுதுவதை தொடர்ச்சியாக படித்துவரும் அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

இன்றைய கேள்வியை கேட்டவர்

கடந்த ஒருவருடமாக என் பதிவுகளை தொடர்ந்து படித்துவரும்

உயர்திரு. ராம்குமார் அவர்கள்.

(Visited 24 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari