ஹலோ With காம்கேர் -41: விடியற்காலையில் எழுந்து படிக்க சோம்பல்படும் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது எப்படி?

ஹலோ with காம்கேர் – 41
February 10, 2020

கேள்வி: விடியற்காலையில் எழுந்து படிக்க சோம்பல்படும் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது எப்படி?

என் பதிவுகளை தொடர்ச்சியாகப் படித்துவரும் பெரும்பாலானோருக்கு பிரம்ம முகூர்த்தத்தில் நான் எழுந்து என் அன்றாட பணிகளைத் தொடங்குவது குறித்து தெரிந்திருப்பதால் அவர்களின் மனதுக்குள் தோன்றும் ஆதங்கம் என்ன தெரியுமா?

நம்மால் இப்படி பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துகொள்ள முடியவில்லையே என்பதுதான்.

இதற்கும் நான் அவ்வப்பொழுது பதில் அளித்து வந்திருக்கிறேன். அவரவர் வாழ்க்கை முறை. அவரவர் பழக்க வழக்கம். அவரவர் குடும்பப் பின்னணி. அவரவர் பணி சார்ந்த அழுத்தங்கள். இவை அனைத்தையும் தாண்டி மற்றொரு விஷயம் உள்ளது. அவரவர் ஆர்வம், குறிக்கோள், இலட்சியம்.

கடைசியாக நான் சொல்லி உள்ள இந்த மூன்றும் நம்மை தூங்க விடாது. தூக்கத்திலும் சிந்திக்க வைக்கும். முடிந்தால் இந்த மூன்றையும் பிள்ளைகள் மனதில் மிக இளம் வயதிலேயே விதைக்க முயலுங்கள். தேவையான தூக்கத்தையும் விழிப்பையும் அவர்களாகவே நிர்ணயம் செய்துகொள்வார்கள்.

பள்ளி நாட்களிலேயே என்னால் இரவு கண்விழித்து படிக்க முடியாது. பகல் பொழுதுகள் கொடுக்கும் சோர்வினால் இரவு சீக்கிரம் தூங்கிவிடுவது வழக்கம். விடியற்காலை 3 மணிக்கு எழுந்து படிப்பது என் பத்து வயதில் ஏற்பட்ட பழக்கம். எனக்கு மட்டுமல்ல என் சகோதரன் சகோதரிக்கும் இதே பழக்கம்தான்.

பள்ளி கல்லூரியில் படிப்பவர்கள் பெரும்பாலும் இரவு கண் விழித்து ஒரு மணி இரண்டு மணி வரை படிப்பார்கள். ஒருநாள் கூட எங்களால் அப்படி படிக்க முடிந்ததில்லை.

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வாகட்டும், கல்லூரியில் செமஸ்டர் தேர்வாகட்டும், அமெரிக்கக் கல்லூரியில் எம்.எஸ் படிக்கும்போது வைவா தேர்வுக்கு தயார் செய்யும்போதாகட்டும் எதுவானாலும் விடியற்காலை 3 மணிக்கு எழுந்து படிப்பதுதான் வழக்கம்.

இப்படி 3 மணிக்கு எழுந்து விடும் பழக்கம் தேர்வு இல்லாத நாட்களிலும் வழக்கமாகிப் போனது. தினமும் பாடம் சம்மந்தப்படாத புத்தகங்கள் வாசிப்பது, எழுதுவது, படம் வரைவது என அத்தனை கிரியேட்டிவிட்டியையும் எங்களுக்குள் விதைத்து வளர்தெடுத்தது பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொன்னால் அதுவும் மிகையாகாது.

அலாரம் வைக்காமலேயே மூன்று மணிக்கு முன்னதாகவே விழிப்பு கொடுத்துவிடும். அந்த பழக்கமும் வழக்கமும் இன்றுவரை தொடர்கிறது.

எங்கள் காம்கேரின் ப்ராஜெக்ட் குறித்து சிந்திப்பது, எழுதுவது, படம் வரைவது, அனிமேஷன் கான்செப்ட் தயார் செய்வது, புரோகிராம் லாஜிக்குகளுக்கான குறிப்புகள் எடுப்பது, எதிர்கால திட்டங்கள் குறித்த கனவுகள் என சகலமும் பிரம்ம முகூர்த்தத்தில்தான்.

இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று வியப்புடன் கேட்பவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில், ‘ஒரு பழக்கத்தை தொடர்ச்சியாக செய்யும்போது அதுவே வழக்கமாகிவிடும்…’.

பெற்றோர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

உங்கள் பிள்ளைகளை விடியற்காலையில் எழுந்து படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். இரவு 12 மணிவரை படித்துவிட்டு தூங்கச் சென்றால் அனுமதியுங்கள். ஒவ்வொருவருக்கும் உடல்வாகு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அப்படியே விடியற்காலையில் எழுந்து படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்த நினைத்தால் மிக இளம் வயதிலேயே அந்தப் பழக்கத்தை அறிமுகப்படுத்துங்கள்… திடீரென பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிறது. விடியற்காலையில்தான் எழுந்து படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தாதீர்கள். அதுவே அவர்களுக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தும். அவர்களை அவர்கள் போக்கில் செல்ல அனுமதித்து ஜெயிக்கக் கற்றுக்கொடுங்கள்.

மற்றொரு விஷயத்தையும் சொல்லிக்கொள்கிறேன்.

பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்திருப்பவர்கள்தான் சிறப்பானவர்கள், அவர்களால் மட்டுமே வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்ற தவறான அபிர்ப்பிராயத்தை வைத்துக்கொள்ள வேண்டாம்.

எனக்கு எப்படி பிரம்ம முகூர்த்த விழிப்பு சாத்தியமானதோ அதுபோல ‘எனக்கு அதிகாலையில் எழும் பழக்கமே இல்லை. நான் எழுந்திருப்பது காலை ஏழுமணி ’ என்று கூறுகிறார் மற்றொரு சி.ஈ.ஓ.

அவர் வேறு யாருமல்ல.  கூகுள் சி.ஈ.ஓ சுந்தர் பிச்சை அவர்களே.

எனவே விழித்திருக்கும் நேரத்தில் அதை எப்படி பயனுள்ளதாக்குகிறோம் என்பதில் மட்டும் கவனம் வைப்போம். வெற்றி நிச்சயம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

இன்றைய கேள்வியை கேட்டவர்
என் பதிவுகளை தொடர்ந்து படித்துவரும்
உயர்திரு. சுந்தர கந்தசாமி அவர்கள்.

‘நான் முகநூலில் உங்கள் கருத்துகளை பின்தொடர்கிறேன்…பத்தாம் வகுப்பில் இருக்கும் என் மகள் மொழிப்பாடங்களில் 75 மதிப்பெண்களும் கணிதம் அறிவியல் சமூகஅறிவியல் பாடங்களில் ஏறத்தாழ 35-40 மதிப்பெண்களே பெறுகிறார்… அதிகாலை எழுந்து படிக்க மிகவும் சோம்பல் படுகிறார்.அவரது ஆர்வத்தை அதிகரிக்க தாங்கள் கூறும் அறிவுரை என்ன? மற்ற வேலைகளில் கவனமுடனும் புத்திசாலித்தனத்துடனும் இருப்பார்.

(Visited 59 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari