ஹலோ with காம்கேர் – 43
February 12, 2020
கேள்வி: யார் பணக்காரர்?
என் நிறுவனத்தின் 26-வது ஆண்டுவிழா நிறைவடைந்திருந்த நேரம். அப்போது எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது.
‘மேடம்….நல்லாயிருக்கீங்களா…உங்கள் ஆண்டு விழாவிற்கு என்னால் வர இயலவில்லை….எப்படி நடந்தது மேடம்…. நீங்கள் தொடங்கி வைத்த டி.டி.பி சென்டர் நல்லபடியா போய்க்கிட்டிருக்கு…’
போன் செய்த பெண்ணை எனக்கு ஐந்து வருடங்களாகத் தெரியும். ஒருமுறை நான் நடத்திய சுயதொழில் கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கிறாள்.
அப்போது அவளுக்கு 18 வயதிருக்கும். இரண்டு கால்களையும் இழந்த அப்பா; கொடூரமான முறையில் இறந்து போன அம்மா; 10 வயதிலும், 12 வயதிலும் இரண்டு தங்கைகள். இவற்றோடு சென்னையில் குடியேறியிருந்த, அவளுடைய தன்னம்பிக்கை எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. குடிசை வீடு. அதில் நான்கு ஜீவன்கள் வாழ்க்கை நடத்தியாக வேண்டும். சுயமாக வேலை செய்கின்ற ஆலோசனைகளைத் தவிர வேறெந்த உதவியையும் என்னால் அவளுக்கு செய்ய முடியவில்லை.
இரண்டு மூன்று இடங்களில் வேலை செய்து அனுபவம் பெற்ற பிறகு அவள் குடிசைக்கு அருகிலேயே ஒருவர் மட்டுமே உட்கார்ந்து வேலை செய்யும்படியாக சின்னதாக டிடிபி சென்டர் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டாள். அதை திறந்து வைக்க என்னை அழைத்தாள். ஒரு பிரின்டரை வாங்கி பரிசளித்து விட்டு அவள் கடையை தொடங்கி வைத்து விட்டு வந்தேன்.
‘மேடம் உங்க பிசினஸ் எப்படி போய்கிட்டிருக்கு…உங்க கண்டுபிடிப்புகள், உங்க முயற்சிகள், உங்க படைப்புகள் எல்லாம் வெற்றியடைய வாழ்த்துக்கள் மேடம்…புத்தகம் நிறைய போடுங்க மேடம்…எங்களைப் போன்றவங்களுக்கு உதவியா இருக்கும்…ஏதாவது என்னோட உதவி வேணும்னா கேளுங்க மேடம். ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து செஞ்சித் தரேன்…வாழ்த்துக்கள் மேடம்….’
மாதம் ஒருமுறை போன் செய்வாள். ஒவ்வொரு முறை இப்படி பேசிவிட்டுத்தான் தன் பேச்சை முடிப்பாள் அவள். இவ்வளவு கஷ்ட ஜீவனத்திலும் ‘ஏதேனும் உதவி என்றால் கேளுங்கள் செய்து தருகிறேன்’ என்று எப்படி சொல்ல முடிகிறது என நான் வியந்ததுண்டு.
இத்தனைக்கும் நான் எந்த ஒரு பெரிய உதவியையும் அவளுக்கு செய்து விடவில்லை. எதிர்பார்ப்பில்லாத நேசத்தை அவளிடம் என்னால் உணர முடிகிறது.
கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவான் பில்கேட்ஸிடம் ஒருவர் ‘உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?’ என்று கேட்கிறார்.
“ஆம். ஒருவர் இருக்கிறார். நான் கம்ப்யூட்டர் துறையில் ஜெயிப்பதற்கு முன்னால் ஒருநாள் செய்தித்தாள் வாங்கிப் படிப்பதற்கு காசில்லாமல் நியூயார்க் விமான நிலையத்தில் கடைகளில் தென்பட்ட நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுவன் என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான். என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை, இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.
மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். அப்போதும் அந்தச் சிறுவன் நாளிதழை இலவசமாகக் கொடுத்தான்.
ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.
20 வருடங்கள் கழிந்தது. நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனை தேடிக் கண்டு பிடித்தேன்.
அவனிடம் என்னைத் தெரிகிறதா என கேட்டேன்.
‘தெரிகிறது. புகழ் வாய்ந்த பில்கேட்ஸ் தானே நீங்கள்’ என்றான்.
பல வருடங்களுக்கு முன்னால், எனக்கு இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை கொடுத்தாய். அதற்கு கைமாறாக உனக்கு ஏதேனும் கொடுக்க விரும்புகிறேன் என்றேன்.
அந்த இளைஞன் சொன்ன பதில் எனக்கு சரியான பாடத்தைக் கற்பித்தது.
‘உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது. நான் ஏழையாய் இருந்த போது உங்களுக்குக் செய்தித்தாள் கொடுத்து உதவினேன். ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள். நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் ’ என்றான்.
அந்த இளைஞன்தான் என்னைவிட பணக்காரன்” என்று பதில் சொன்னார் பில்கேட்ஸ்.
உதவி செய்வதற்கு பணக்காரனாக இருக்க வேண்டுமென்பதோ, பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது. உதவ வேண்டும் என்ற குணத்திற்கு நேரம் காலமெல்லாம் இல்லை, ஏழை பணக்காரன் என்ற பேதமெல்லாம் கிடையாது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்வதே உதவி. அதுவே ஆகச்சிறந்த மனிதாபிமானம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software