ஹலோ with காம்கேர் – 44
February 13, 2020
கேள்வி: உதவி என்பது என்ன, அது எப்படி இருக்கும்?
எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் வருடா வருடம் பண்டிகை தினங்களில் காப்பகங்களுக்குச் சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். அன்றைய தினம் அவர்களுக்கான உணவுக்கும் நாங்கள் ஸ்பான்ஸர் செய்வது உண்டு.
ஒருமுறை உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் உள்ள ஏழை குழந்தைகளுடனும் வயதான பாட்டிகளுடனும் பொங்கல் கொண்டாடிவிட்டு வீடு திரும்பினோம். எங்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த செக்யூரிட்டிக்கு இனிப்பும் காரமும் கொடுத்துவிட்டு ஆஸ்ரம நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டேன்.
அவர் ஆர்வமுடம் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு அமைதியாகச் சொன்னார்.
‘செங்கல்பட்டில் இருந்தபோது அங்குள்ள ஆஸ்ரமத்தில் இதுபோன்ற பண்டிகை தினங்களில் நானும் என் நண்பர்கள் நான்கைந்து பேரும் சென்று நாங்களே சமையல் செய்து கொடுப்போம்… அரிசி பருப்பு காய்கறி போன்றவற்றை ஆஸ்ரமத்தில் கொடுத்துவிடுவார்கள்’ என்று கொஞ்சமும் கர்வமின்றி மிக இயல்பாகச் சொன்னார். சொல்லும்போதே சந்தோஷத்தில் கண்கள் மின்னின.
‘ஆஸ்ரமங்களில் சமைப்பதற்கு வெளி ஆட்களை அனுமதிப்பார்களா’ என்று கேட்டேன்.
நாங்கள் அந்த ஆஸ்ரமம் சிறிய அளவில் ஆரம்பித்த நாளில் இருந்தே உதவி செய்து வருவதால் எங்களை அவர்கள் வெளியாட்கள் போல கருத மாட்டார்கள். தன்னார்வத் தொண்டர்கள் போல கருதுவார்கள்.
நான் என்னவோ பெரிய உதவியும் தர்மமும் செய்வதைப் போல பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தபோது நாங்கள் எங்கள் கைகளாலேயே சமைத்து உணவைப் பரிமாறுவோம் என்று சொன்ன அந்த செக்யூரிட்டியின் செயல் உன்னதமாகப்பட்டது.
உதவி செய்வதற்கு பணம்தான் தேவை என்பதில்லையே, உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமே.
உதவி என்பது என்ன, அது எப்படி இருக்கும்? என்ற இன்றைய கேள்வியைப் படிக்கும்போது ‘உதவி என்பது உணர்வா என்ன அது எப்படி இருக்கும் என்று சொல்ல’ என நீங்கள் நினைக்கலாம்.
உதவி என்பது ஓர் அருமையான அறச்செயல்தான். சந்தேகமே இல்லை. ஆனால் உதவ வேண்டும் என்ற பேரன்பு நமக்குள் ஊற்றெடுப்பதே அழகிய உணர்வுதானே.
நாம் பிறருக்கு உதவி செய்யும்போது நமக்கு மகிழ்ச்சி உண்டாகும். பிறரின் தேவைக்கு தக்க சமயத்தில் உதவும்போது உதவி பெறுபவருக்கு பெருமகிழ்ச்சி கிடைக்கும். உதவுபவர் அல்லது உதவியை பெறுபவர் இருவருக்கும் ஒருசேர மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஆற்றல் உள்ள உதவியை செயலாக மட்டுமில்லாமல் உணர்வாகவும் உணர முடியும்.
தேவை இருப்பவர்களுக்கு நம்மால் ஆனதை செய்வதே உதவி. நம்மால் முடிகிறது என்பதற்காக தேவையே இல்லாதவர்களுக்கு தான தர்மம் செய்வது உதவி என்ற பிரிவில் வராது. அவை நம் பகட்டுக்காக செய்வதில் அடங்கும்.
உதவுவதால் கிடைப்பது மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம், பெருமிதம், பகட்டு, சுயதம்பட்டம், தற்பெருமை இவற்றில் ஏதோ ஓர் உணர்வாக இருந்துவிட்டுப் போகட்டும். அந்த உணர்வின் உந்துததால் செய்ய நினைக்கும் உதவியை தேவையானவர்களுக்கு கொடுப்போம் என்பதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். பிறரின் தேவை அறிந்து உதவுவதே சிறப்பு.
வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், உங்கள் இருப்பிட செக்யூரிட்டி இவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யும்போது அதற்கு பிரதிபலனாக அவர்களிடம் எதையேனும் எதிர்பார்க்கவே தோன்றும். குறைந்தபட்சம் ‘அம்மா நன்றி ஐயா நன்றி, உங்களைப் போல் யார் செய்வார்கள்’ என்ற புகழாரத்துக்காகவாவது மனம் ஏங்கும்.
இதுவே சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது தினமும் சந்திக்க வாய்ப்பில்லாத ஓர் ஏழைக்கு ஐந்து ரூபாய் கொடுத்தால் அதை நாம் மறந்தும்விடுவோம். அவரிடம் நாம் எதையும் எதிர்பார்க்கவும் போவதில்லை.
குடும்பத்துடன் ஹோட்டலில் சாப்பிடும் நாட்களில் எல்லாம் என் சகோதரி ஏதேனும் ஒரு டிபன் பார்சல் வாங்கிக்கொள்வாள். ஹோட்டலுக்கு வெளியே தென்படும் யாரேனும் ஒரு ஏழைக்குக் கொடுத்து உதவுவாள்.
அவள் மகளுக்கு 10 வயது இருக்கும்போது ஆரம்பித்த பழக்கம். இன்று அவள் அமெரிக்காவில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள்.
அவள் சிறுவயதில் சாப்பிடவே அடம்பிடிப்பாள். ஒரு வாய் சாப்பாடு ஊட்டுதே பெரும்பாடுதான். அதற்குப் பிராயச்சித்தமாகவே இப்படி சமயம் கிடைக்கும்போதெல்லாம் சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தாள்.
உதவி உன்னதமான செயல் மட்டுமல்ல, நமக்குள் ஆர்பரிக்கும் அற்புத உணர்வு. உணர்ந்துதான் பார்ப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
இன்றைய கேள்வியை கேட்டவர்
என் பதிவுகளை தொடர்ந்து படித்துவரும்
உயர்திரு. திருப்புல்லாணி ரகுவீரதயாள் அவர்கள்.