வாழ்க்கையின் OTP-19 (புதிய தலைமுறை பெண் – பிப்ரவரி 2020)

இந்த உலகம் எனக்கு சொந்தம்!

தீர்வே இல்லாத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை!

‘உங்கள் இலக்கை எந்த வயதில் நிர்ணயித்தீர்கள்?’ என பல நேர்காணல்களில் கேட்டிருக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை கிரியேட்டிவிட்டி தான் என் திறமை. ஆனால் நான் படித்ததோ கம்ப்யூட்டர் சயின்ஸ். அடுத்தடுத்து ஆய்வு செய்து டாக்டரேட் செய்வதுதான் முதலில் எனக்கான இலக்காக இருந்தது.

ஆனால்…

கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டம் பெற்று சுயமாக பிசினஸ் தொடங்கியவுடன் அந்தத் துறையில் இந்த சமுதாயத்துக்குத் தேவையான பல விஷயங்கள் இருப்பது தெரிந்து என் இலக்கை அப்படியே விரிவாக்கி சமுதாய கண்ணோட்டத்தில் குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, முதியோர்களுக்கு என பல்துறை சார்ந்தவர்களுக்கும் பயனுள்ள வகையில் சாஃப்ட்வேர்கள், அனிமேஷன் படைப்புகள், ஆப்கள் தயாரிப்பதை இலக்காகிக் கொண்டேன்.

என் பணியின் மூலம் நான் செய்கின்ற ஒவ்வொரு விஷயமுமே ஒரு ஆய்வுதான்.

நமக்கான இலக்கை  நிர்ணயம் செய்துகொள்ளும்போது அதன் நோக்கம் அடுத்தடுத்த நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் வகையில் நம் சிந்தனையை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதே இலக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான OTP.

வாழ்க்கையில் நமக்கான இலக்குகளை வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணிப்பது நல்ல விஷயம்தான். தங்கள் பிள்ளைகள் இப்படித்தான் வரவேண்டும் என ஒரு விதையை தங்கள் மனதுக்குள்ளும் விதைத்து தங்கள் பிள்ளைகள் மனதுக்குள்ளும் விதைத்து அதற்காகவே தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள்.

இதனால் அவர்கள் வைத்துக்கொண்டுள்ள இலக்கில் வெற்றியடைய முடியாத சூழல் உருவாகும்போது பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் பெற்றோர்களே உடைந்துபோகிறார்கள். படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்குக் காரணம் ’கொக்குக்கு ஒன்றே மதி’ என ஒரே இலக்கை வைத்துக்கொண்டு வாழ்க்கை மொத்தத்தையும் அதற்காகவே பணயம் வைப்பதுதான்.

எப்பவுமே மிலிட்டரி மிரட்டலில் இலக்கை நோக்கிய பயணம். வேறு சிந்தனைகளுக்கு மனதில் இடமே இல்லாதபோது சந்தோஷங்களை அனுபவிக்கவும், தோல்விகளை எதிர்கொள்ளவும் மனம் பழகியே இருக்காதபோது சின்ன சறுக்கல் வந்தால் கூட ‘அவ்வளவுதான் வாழ்க்கை’ என ஒடிந்துபோய் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அவலமான மனநிலை.

இதற்கு என்ன செய்யலாம்?

எங்கள் தொழில்நுட்ப உலகில் ஒரு பரிசோதனைக்கான தீர்வை கண்டுபிடிக்க Else if Statement என்று ஒருகை புரோகிராம் நுட்பம் உண்டு.

அதாவது if என்ற கட்டளை மூலம் முதலில் ஒரு நிபந்தனையை (Condition-1) பரிசோதிக்க வேண்டும். அதன் பதில் சரி என வந்தால் அதற்கான ஆணைத்தொடர்களை (Statement-1) இயக்க வேண்டும்.

தவறு என வந்தால் else if என்ற கட்டளை மூலம் அடுத்த நிபந்தனையை (Condition-2) பரிசோதிக்க வேண்டும். அதன் பதில் சரி என வந்தால் அதற்கான ஆணைத்தொடர்களை (Statement-2) இயக்க வேண்டும்.

தவறு என வந்தால் else if என்ற கட்டளை மூலம் அடுத்த நிபந்தனையை (Condition-3) பரிசோதிக்க வேண்டும்.

இப்படியாக ஒவ்வொரு நிபந்தனையாக பரிசோதனை செய்துகொண்டே வர வேண்டும். எந்த நிபந்தனைக்குமே சரி என பதில் வரவில்லை என்றால் இறுதியாக உள்ள else என்ற கட்டளைக்கு பிறகுள்ள ஆணைத்தொடர்களை (Default Statement) இயக்க வேண்டும். அதுவே நாம் எடுத்துக்கொண்டுள்ள பரிசோதனைக்கான தீர்வாகும்.  ‘

If (condition-1)

{

Statements-1

}

else if (condition-2)

{

Statements-2

}

else if (condition-3)

{

Statements-3

}

else

{

Default Statements

}

இதே நுட்பத்தை நம் இலக்குகளை நோக்கிய பயணத்துக்கும் பயன்படுத்தலாமே. ஒரே இலக்கை வைத்துக்கொள்ளாமல் அது சார்ந்த பிற பிரிவுகளையும் அடுத்தடுத்த இலக்குகளாக வைத்துக்கொண்டால் ஒன்றில் தவறும்போது மற்றொன்றை பிடித்துக்கொண்டு முன்னேற முடியுமல்லவா?

எங்கள் தொழில்நுட்பம் ஒருபோதும் எந்த ஒரு பரிசோதனைக்கும் ‘தீர்வே கிடையாது ஓடிப்போ’ என்று சொல்வதில்லை. நம் வாழ்க்கையும் அப்படித்தான். ஆனால் நாம்தான் தீர்வே இல்லையோ என நினைத்து இலக்குக்கான எல்லைக்கு நாமே முற்றுப்புள்ளி வைத்துக்கொள்கிறோம். பலர் வாழ்க்கையையும் முடித்துக்கொள்கிறார்கள்.

உதாரணத்துக்கு ‘சினிமா’என்பது உங்கள் கனவு என்றால் ‘சினிமாவில் நடிப்பு’, ‘சினிமாவில் கதை வசனம்’, ‘சினிமாவில் கிராஃபிக்ஸ்’, ‘சினிமாவில் எடிட்டிங்’ என உங்கள் கனவுகளை விரிவாக்கிக்கொள்ளுங்கள்.

‘சினிமாவில் நடிப்பு’ என்ற இலக்கு தோல்வியில் முடிந்தால்,  ‘சினிமாவில் கதை வசனம்’ என்பதைப் பற்றிக்கொள்ளலாம். அதுவும் தோல்வியில் முடிந்தால் ‘சினிமாவில் கிராஃபிக்ஸ்’ என்பதைப் பற்றிக்கொள்ளலாம். அதுவும் தோல்வியில் முடிந்தால் ‘சினிமாவில் எடிட்டிங்’ என்பதைப் பற்றிக்கொள்ளலாம். இவை எதுவுமே ஒத்துவரவில்லை என்றால் சின்னத்திரைக்குள் நுழைந்துவிடலாமே. ஆயிரம் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றனவே.

இதுதான் இலக்கை நோக்கிய பயணத்தில் ஜெயிப்பதற்கான ஒரே லாஜிக்.

குற்றம் செய்ய கூசுவோம்!

இரு தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தியை படித்தேன். ஒரு பெற்றோர். தந்தைக்கு செக்யூரிட்டி பணி. தாய் வீட்டு வேலை செய்கிறார்.  கஷ்டப்பட்டு உழைத்து தன் மூன்று பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து ஆளாக்கி வருகிறார்கள். இவர்களது மூத்த மகளுக்கு திருமணம் செய்துவிட்ட நிலையில் அவரது மற்ற இரண்டு பெண் குழந்தைகளும் பள்ளியில் 10-ம் வகுப்பும் 12-ம் வகுப்பும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் பத்தாம் வகுப்பு ஒரு மகள் வீட்டில் இருந்த கால் சவரன் தங்க மோதிரத்தை திருடி அடகு வைத்து பள்ளி தோழிகளுக்கு விருந்தளித்தும் தனக்கு இரண்டு புது உடை வாங்கியும் செலவு செய்துவிட்டார். அவள் பெற்றோர் இதைக் கண்டுபிடித்து அந்த நகையை மீட்டெடுத்து வந்த பிறகு மகளை கண்டித்திருக்கிறார்கள். அறிவுரையும் சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் அந்த பெண் குற்ற உணர்வால் அவமானமடைந்துள்ளார். மன இறுக்கம் தாங்காமல் தூக்கிட்டுக்கொண்டு இறந்துவிட்டதாகவும் செய்தியை முடித்திருந்தார்கள்.

இது  வீட்டுக்குளேயே நடந்த குற்றம். இதுபோன்ற செய்திகளை நித்தம் நாம் கடந்துதான் வருகிறோம்.

ஆங்காங்கே பொதுவெளியில் கொடூரமான தவறுகள் / குற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. டிஜிட்டல்மயமாகிவிட்ட இன்று நம் சின்ன சின்ன அசைவுகளும் கண்காணிக்கப்படுகின்றன என தெரிந்தும்  துணிகரமாக பல்வேறு குற்றங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மாட்டிக்கொள்வோம் என தெரிந்தும் தவறுகளை எந்த தைரியத்தில் செய்கிறார்கள்?

குற்றம் செய்யும் போது ஏற்படாத அவமானமும் குற்ற உணர்வும் மன இறுக்கமும் மாட்டிக்கொள்ளும்போது உண்டாவது எப்படி என்று யோசிக்கும்போது அதன் பின்னணியில் உள்ள உளவியல் புரியும்.

தவறு செய்யக் கூடாது, தவறு செய்தால் தண்டனை கிடைக்கும், தவறு செய்வது மகாபெரிய பாவம் என்றெல்லாம் முந்தைய தலைமுறையினர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைப் பாடங்கள். இதனால் ஓரளவுக்கு பிள்ளைகள் வளரும்போதே ஒழுக்கத்துடன் வளர்ந்தார்கள். எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருப்பதைப்போல் இதிலும் விதிவிலக்குகள் இருக்கலாம்.

அன்று தவறுகள் நடக்கவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன எனலாம்.

இன்று பெற்றோர்கள் பிள்ளைகளுடன் மனம்விட்டு பேசுவது என்பதே குறைந்துவிட்டது. அப்படியே பேசினாலும் ‘மொக்கைப் போடாதேம்மா…’, ‘போரடிக்காதேப்பா…’ என பிள்ளைகள் பெற்றோரின் வாயை அடக்குவதையும் காணமுடிகிறது.

நிறைய பேசினால் காதில் வாங்குவதில்லை. குறைவாகப் பேசினால் புரிந்துகொள்வதில்லை. நிறைவாகப் பேச பெற்றோர்களுக்கே பயிற்சியில்லை.

பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாடதிட்டத்தை குறிப்பிட்ட நாட்களுள் முடிக்க வேண்டிய நிர்பந்தம். தேர்வுகள், போட்டிகள், நிகழ்ச்சிகள் என்றே நாட்கள் நகர்ந்துவிடுகின்றன.

குற்றங்கள் செய்வது பாவம் என்பதே பலருக்குக் கற்பிக்கப்படவில்லை. சாப்பிடுவது தூங்குவது வேலைக்குப் போவது போல குற்றங்களும் இயல்பாக நடக்கின்றன.  அதனால் அவற்றை செய்யும்போது குற்ற உணர்வு எதுவும் தோன்றுவதில்லை.

குற்றங்கள் செய்வதில் படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. புகழின் உச்சத்தில் இருப்பவர், பணம் வசதிப் படைத்தவர் என எல்லா பிரிவினரும் தங்கள் சூழலுக்கு ஏற்ப ஏதேனும் ஒருவகையில் குற்றங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

மாட்டிக்கொள்ளும்போது குற்ற உணர்வு தானாகவே உண்டாகிறது. ஏனேனில் பலரும் கவனிக்கிறார்கள். ஏளனமாகப் பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் அவமானம் தானாகவே தொற்றிக்கொள்கிறது.

குற்றம் செய்யும்போது யாரும் கவனிப்பதில்லை என நினைத்து செய்வதால் குற்ற உணர்வோ, அவமானமோ எதுவுமே அவர்களுக்குள் தோன்றுவதில்லை.

யாரும் பார்க்காதபோதும் தவறுகள் செய்யக்கூடாது என்பது கற்பிக்கப்பட வேண்டும். குற்றங்கள் செய்வது தவறு என்ற உணர்வை அதிகரிக்க வேண்டும். அது ஒன்றே குற்றங்கள் குறைய உதவும் OTP.

முழு சுயநலமாக இருங்கள்

சுயநலமாக இருங்கள் தவறே இல்லை. அதிலும் கஞ்சத்தனமாக இல்லாமல் முழு சுயநலத்துடன் இருங்கள் என்றே நான் சொல்ல வருகிறேன். என்ன புரியவில்லையா? மேலே படியுங்கள்.

இந்த லேப்டாப் என்னுடையது, இந்த டிவி என்னுடையது, இந்த பைக் என்னுடையது, இந்த கார் என்னுடையது என நாம் காசு கொடுத்து வாங்கிய பொருட்களை மட்டும் நம்முடையது என குறுகிய வட்டத்தில் சொந்தம் கொண்டாடுவதை விட்டு, நாம் வாழ வந்திருக்கும் இந்த உலகத்தை ‘இந்த உலகம் என்னுடையது’ என்றும், நம்மைச் சுற்றி இயங்கும் அத்தனை ஜீவராசிகளையும் ‘இவை அத்தனையும் என் சொந்தங்கள்’ என்றும் முழுமனதுடன் சொந்தமாக்கிக்கொண்டுவிட்டால் நாம் செய்யும் எந்த ஒரு சின்ன செயலும் நமக்கு நாமே செய்துகொள்வதைப் போலதானே அமையும்.

நமக்கு நாமே செய்துகொள்ளும் எந்த ஒரு விஷயத்தையும் ஏனோ தானோ என்று செய்வோமா? நன்றாக யோசித்துப் பாருங்கள். நமக்குப் பிடிப்பதைப் போலதானே செய்வோம். அப்படி ஆசை ஆசையாக முழு அர்பணிப்புடன் செய்யும் எந்த ஒரு செயலும் அழகில்லாமல் தரமில்லாமல் போகுமா?

அதுபோலதான் இந்த உலகத்தையே நமக்கு சொந்தமாக்கிக்கொண்டால் நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் நமக்கு நாமே செய்துகொள்வதுபோன்ற உணர்வுடன் முழு ஈடுபாட்டுடன் செய்ய ஆரம்பிப்போம்.

இதைத்தான் நான் சொல்கிறேன் சின்ன விஷயங்களில் சொந்தம் கொண்டாடாமல் கஞ்சத்தனம் இல்லாமல் இந்த உலகையே நமக்கானது என பரந்த மனப்பான்மையுடன் சொந்தமாக்கிக்கொள்வோம்.

நாம் ஆசை ஆசையாய் வாங்கிய விலை உயர்ந்த காரை உங்கள் கண் முன்னே வேறு யாரேனும் மாற்று சாவி போட்டு எடுத்துச் சென்றால் விடுவோமா? விட மாட்டோம் அல்லவா. விரட்டிப் பிடிப்போம். போலீஸில் புகார் செய்வோம். எப்பாடுபட்டாவது காரை மீட்டெடுப்போம்.

நமக்கு அலுவலகத்திலோ ஏதேனும் கோபமோ டென்ஷனோ இருந்தால் வீட்டுக்கு வந்து நம் காரை நாமே அடித்து நொறுக்கி துவம்சம்தான் செய்வோமா? செய்ய மாட்டோம் தானே. நாம் என்ன மனநிலையில் இருந்தாலும் நாம் ஆசையாய் வாங்கிய காரை பத்திரமாக பூட்டி யாரும் இடித்துவிட்டுச் சென்றுவிடாமல் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டுத்தானே வீட்டுக்குள் வருவோம்.

நாம் காசு கொடுத்து வாங்கும் காரையே இந்த அளவுக்கு பாதுகாக்கும்போது பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பான மானுடப் பிறவியாய் பிறந்துவிட்டு ஏதேனும் ஒரு காரணத்துக்காக உயிரை மாய்த்துக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்?

இயற்கை நமக்குக் கொடுத்த இந்த உயிரையும் உடலையும் மாய்த்துக்கொள்வதற்கு நமக்கு உரிமையே கிடையாது. இயற்கை கொடுத்த சுவாசத்தை இயற்கை தானாக எடுத்துக்கொள்ளும்வரை வாழ்வதுதான் நியாயம்.

எந்த பிரச்சனையாகத்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. தற்கொலை ஒரு தீர்வாகாதுதானே.

நீங்கள் தற்கொலை செய்துகொள்வதால் இந்த உலகம் தன் இயல்பிலிருந்து இம்மியும் மாறப்போவதில்லை.

உங்களை நீங்களே மதிக்காமல் உங்கள் உயிரை துச்சமாகக் கருதி உங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டு, இந்த உலகம் மட்டும் உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என எண்ணி ஆதங்கப்படுவதில் என்ன நியாயம் இருந்துவிடப் போகிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

நம்மை நாம் மதிப்போம். முழு சுயநலத்துடன் இந்த உலகத்தை நம்முடையதாக்கிக்கொண்டு நேசிப்போம். இதுவே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உதவும் OTP.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP…

இலக்கில் தெளிவாக இருப்போம், குற்றம் செய்யக் கூசுவோம், முழு சுயநலமாக இருப்போம். முத்தான இந்த மூன்று விஷயங்களும் வாழ்க்கைப் பாதையில் உள்ள இடர்களை ஒதுக்கித் தள்ளி முன்னேற உதவும் OTP.

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 19
பிப்ரவரி  2020

(Visited 78 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon