ஹலோ With காம்கேர் -45: எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் காதலிக்கிறேன் என்கிறாள். எப்படி வழிநடத்துவது?

ஹலோ with காம்கேர் – 45
February 14, 2020

கேள்வி: எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் காதலிக்கிறேன் என்கிறாள். எப்படி வழிநடத்துவது?

ஆலோசனைகள் சொல்வது என் முழுநேர பணியும் இல்லை. முழுநேர சேவையும் அல்ல. ஆனாலும் தவிர்க்கவே முடியாமல் சில நேரங்களில் கவுன்சலிங் கொடுப்பதிலும் கவனம் செலுத்தத்தான் வேண்டியுள்ளது.

எட்டாம் வகுப்பு படிக்கும் தன் மகள் தன்னுடன் படிக்கும் சக மாணவனை காதலிப்பதாக கொஞ்சமும் பயமே இல்லாமல் சொல்கிறாள். பள்ளியில் இருந்தும் வகுப்பு ஆசிரியர் அழைத்துப் பேசிவிட்டார்கள். நாங்கள் சாம தான பேத தண்ட முறைகளில் அறிவுரை சொல்லிப் பார்த்துவிட்டோம். நன்றாக படிக்கும் பெண் இப்படி ஆகிவிட்டாள் என கண்ணீருடன் ஒரு பெற்றோர் தன் மகளை அழைத்து வந்தனர்.

பெற்றோரை வெளியே அமரச் சொல்லிவிட்டு அந்த மாணவியிடம் பேசினேன். நியாயமாகப் பார்த்தால் 13 வயது சிறுமியின் முகத்தில் பயம்தான் தெரிய வேண்டும். ஆனால் அவள் முகத்தில் தெரிந்தது வெறுப்பு.

நான் அவளுடைய காதல்(?!) குறித்தெல்லாம் எதுவுமே பேசவில்லை. என்னைப் பற்றித் தெரியுமா என கேட்டேன். தெரியாது என்று தலையை ஆட்டினாள்.

அவள் வயதில் நான் என் சகோதரன் சகோதரியுடன் சேர்ந்து நாங்கள் தயாரித்து டேப் ரெகார்டர் கேசட்டில் பதிவு செய்து வைத்திருந்த நாடகங்களை டிஜிட்டலில் வேவ் ஃபைலாக மாற்றி வைத்திருந்ததை போட்டுக் காண்பித்தேன்.

அவள் வயதில் நாங்கள் எழுதிய கதை, வரைந்த ஓவியங்கள், பைண்டிங் செய்த புத்தகங்களை காண்பித்தேன். கொஞ்சம் அலட்சியத்துடனேயே கவனித்தாள்.

சிறு வயதில் எழுத்து, பேச்சு, டப்பிங், ஓவியம், இசை இப்படி நாங்கள் பொழுது போக்காக என்னவெல்லாம் செய்தோமோ அவற்றை நாங்கள் படித்த தொழில்நுட்பத் துறையில் பணிகளாக மாற்றிக்கொண்டதையும் அந்தத்துறையில் உச்சத்தில் இருப்பதையும் அவளுக்குப் புரியும் விதத்தில் சொன்னேன்.

இப்போது வெறுப்பும், அலட்சியமும் கொஞ்சம் விலகி ரிலாக்ஸ் ஆனாள்.

நான் உன்னிடம் உன் நண்பன் பற்றி எல்லாம் கேட்கப்போவதில்லை. ஆனால் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் பேசத் தொடங்கினேன்.

‘உனக்கு கோபம் வருமா?’

‘நிறைய…’

‘அப்போது உன் அப்பா, அம்மா, நண்பர்கள், ஆசிரியர் இவர்களைப் பார்க்கும்போது என்ன தோன்றும்…’

‘அப்படியே கடித்துக் குதறத் தோன்றும்…’

‘உன் வீட்டில் உன் விருப்பத்துக்காக நாய் வளர்க்கிறார்களாமே அதனிடமும் கோபித்துக்கொள்வாயா?’

‘ஆமாம், நான் கோபமாக இருக்கும்போது அதை கொஞ்சவே மாட்டேன்… கிட்ட வந்தால்கூட விரட்டி அடித்துவிடுவேன்’

‘உன் வீட்டில் உன் தாத்தா பாட்டி இருக்கிறார்களாமே, அவர்கள் உன்னிடம் பேச வந்தால் என்ன செய்வாய்?’

‘கொஞ்ச நேரம் பேசாமல் இருங்களேன் என கடுப்படித்துவிட்டு என் அறைக்குள் நுழைந்து கதவை வேகமாக மூடுவேன்’

‘சரி, நீ கோபமாக இருக்கும்போது உன்னைச் சுற்றி இருக்கும் உலகை நீ வெறுக்கிறாய்… உன் செல்ல நாய், உன் மீது உயிரையே வைத்திருக்கும் அப்பா அம்மா, உன்னை நேசிக்கும் உன் தாத்தா பாட்டி, உன் நெருங்கிய நண்பர்கள் என அத்தனை பேரிடமும் உன் கோபத்தை காட்டுகிறாய்… அப்படித்தானே?’

‘ம்…’

‘மொத்தத்தில் உனக்குள் இருக்கும் கோபம் உன்னைச் சுற்றி இருக்கும் இந்த உலகை வெறுக்க வைக்கிறது அப்படித்தானே…’

கொஞ்சமாக யோசித்து ‘ஆமாம்…’ என்றாள்.

‘சரி இன்னும் ஒரே ஒரு கேள்வி… அப்புறம் நீ கிளம்பி விடலாம்…’

‘ம்…’

‘நீ சந்தோஷமாக இருந்தால் என்ன செய்வாய்?’

‘அப்பா அம்மா கழுத்தை சுற்றி செல்லமாய் முத்தமிடுவேன், நாய் குட்டியுடன் கொஞ்சுவேன், தாத்தா பாட்டியுடன் ஜாலியாக அரட்டை அடிப்பேன், என் நண்பர்களுடன் விளையாடுவேன்…’

‘ஓ…அப்படியென்றால் நீ கோபமாக இருந்தால் உன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை கோபத்துடன் பார்க்கிறாய், சந்தோஷமாக இருந்தால் உன்னை சுற்றி இருக்கும் ஒவ்வொன்றிலும் அந்த சந்தோஷத்தைப் பார்க்கிறாய்…’

‘மே பி…’

‘சரி, இப்போது உன் வகுப்புத் தோழன் உன்னை காதலிப்பதாகச் சொன்னதால் நீயும் அதை அப்படியே நம்புகிறாய்…’

இப்போது அவள் கொஞ்சம் டென்ஷன் ஆனாள்.

‘அவன் உன்னிடம் அன்பொழுகப் பேசுகிறான். நீயும் பேசுகிறாய்… இப்போது நீங்கள் இருவரும் காதலிப்பதாய் சொல்கிறாய்… சரி நீ சொல்வதன்படி நீங்கள் காதலிப்பதாக இருந்தால் உனக்கு கோபமே வரக் கூடாதல்லவா…

உனக்குள் காதல் இருப்பது உண்மை என்றால் உன்னச் சுற்றி இருக்கும் மரம் செடி கொடி உன்னுடைய செல்ல நாய் இப்படி எல்லாவற்றையும் நேசிக்கும் பாசம் அல்லவா உண்டாகி இருக்கும்.

உனக்குள் தோன்றியிருப்பது காதல் என்றால் நீ செய்யும் ஒவ்வொன்றும் அழகாக இருக்கும். உன்னைச் சுற்றி இருக்கும் உலகம் அழகாகத் தோன்றும்.

ஆனால் நீ அப்படிப்பட்ட மனநிலையில் இல்லையே. நீ காதலிப்பதாகச் சொல்லும் அந்த நண்பன் மட்டுமே அழகாகத் தோன்றுகிறான், அவன் பேசுவது மட்டுமே அன்பாகத் தெரிகிறது…’

அவளிடம் மெளனம். தலை குனிந்திருந்தாள்.

‘நீ கோபமா இருந்தால் இந்த உலகை கோபத்துடன் பார்க்கிறாய், மகிழ்ச்சியாக இருந்தால் சந்தோஷமாகப் பார்க்கிறாய். அந்த நியதிப்படி உனக்குள் தோன்றியிருக்கும் விஷயம் அன்பின் உச்சமான காதலாக இருந்தால் இந்த உலகை அன்புடன் தானே பார்க்கத் தோன்றியிருக்க வேண்டும்.

ஆனால் நீ அப்படி இல்லையே. கோபப்படுகிறாய், சண்டை போடுகிறாய், படிப்பதில்லை, உன் குறிக்கோள்களை மறந்துவிட்டாய், எதிர்கால கனவுகளை தூர விரட்டிவிட்டாய்.

அவன் காதலிப்பதாகச் சொன்னான். நீ அதை உனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதி அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

உன்னிடம் தோன்றியிருப்பது காதல் இல்லை. வெறும் infatuation.’

இதற்கு மேல் எதுவுமே பேசவில்லை. அவள் அப்பா அம்மாவை அழைத்து அவர்களுடனும் பேசி ‘முடிந்தால் பள்ளியை மட்டும் மாற்றுங்கள்’ என சொல்லி அனுப்பி வைத்தேன்.

சில மாதங்கள் கழித்து அவள் அம்மா போன் செய்தார். வேறு பள்ளிக்கு மாற்றி விட்டதாகவும் சூழல் அவளிடம் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் தகவல் கொடுத்தார்.

இந்த காலத்து குழந்தைகளை தவறான வழியில் மடைமாற்ற ஆயிரம் காரணிகள் இருக்கும்போது சரியான வழியில் மடைமாற்ற ஒரு நல்ல காரணியாவது இல்லாமல் போய்விடுமா என்ன?

அந்தக் காரணியை கண்டுபிடிக்க பொறுமை வேண்டும். கொஞ்சநஞ்சமல்ல, நிறைய.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 110 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon