நன்றும் தீதும்!
சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் இளம் பெண் டாக்டருக்கு நடந்த கொடுமை குறித்து ஃபேஸ்புக்கில் நான் எழுதிய எச்சரிக்கைப் பதிவுக்கு ‘அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ ஒன்றிரண்டு தீய செயல்கள் நடைபெறுவதால் ஆண்கள் எல்லோருமே கெட்டவர்களாகிவிட மாட்டார்கள்…’ என ஒரு நண்பர் பின்னூட்டமிட்டிருந்தார்.
அந்த ஒன்றிரண்டு கொடூரங்கள் நமக்கே நடந்துவிடலாம் என்ற பதற்றம் இல்லாமல் எப்படி பயணிக்க முடியும். ஒரு எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லதுதானே என கருத்திட்டிருந்தேன்.
தீய விஷயங்கள் ஒன்று சேரும் அளவுக்கு நல்ல விஷயங்கள் ஒன்று சேர்வதில்லை. தீய விஷயங்களை செய்பவர்கள் ஈகோ இல்லாமல் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து தாங்கள் செய்கின்ற தீய காரியங்களை சாதித்துக்கொள்கிறார்கள்.
நல்ல விஷயங்களை செய்பவர்களுக்குள் ஒற்றுமை இருப்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஈகோ இருக்கத்தான் செய்கிறது. தனித்தனியாக பெயர் வாங்கவும், பாதை அமைக்கவும் ஆசைப்படுவதால் நல்ல விஷயங்கள் பெரிய அளவில் நடைபெறுவதுமில்லை. அவை பேசப்படுவதும் இல்லை. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இதுதான் உண்மை.
‘ஒருவன் தனியா இருந்தா தப்பு செய்ய தோன்றும். நான்கு பேரோடு சேர்ந்திருந்தால் அவர்களில் ஒருவன் நல்லவனாக இருந்தாலும் மற்றவர்களை கெட்டது செய்ய விடமாட்டான். தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு’ என பொதுவாக நம் பெரியோர்கள் சொல்லுவதை கேள்விப்பட்டிருப்போம். இன்று அந்த லாஜிக் மாறிவிட்டதே. நான்கு பேர் சேர்ந்திருக்கும்போது நடக்கும் தவறுகள் பெருகிவிட்டனவே.
ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு நான் எழுதிய ‘மனதை Format செய்யுங்கள்’ என்ற சுயமுன்னேற்ற புத்தகத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டிருந்தேன்.
சென்னையில் பிசியாக இருக்கும் ஓரிடத்தில், முன்இரவு நேரத்தில், புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்துக்கு அருகே, நான்கு இளைஞர்கள் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே, ஒரு நாய் 8 குட்டிகளை ஈன்றிருந்தது.
அவர்களில் ஒருவன் ஒரு குட்டி நாயின் மீது கல்லைவிட்டு எறிய, தாய் நாய்க்கு வந்ததே கோபம். ஆக்ரோஷமாய் அவர்களை கொலை வெறியில் பார்த்து ஊளையிட ஆரம்பித்தது.
அந்த இளைஞர்களுக்கு அந்த தாய் நாய் மீது வந்ததே கோபம். அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்களால் அந்த குட்டி நாய்களை அடித்தே கொன்று விட்டார்கள்.
தாய் நாய் எவ்வளவு போராடியும் தன் குட்டிகளைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த செய்தியை இறந்த எட்டு குட்டிநாய்களும் வரிசையாய் படுத்திருக்க, தாய் நாய் ஏக்கத்தோடு அவற்றைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தார்கள். அது மிகவும் பரிதாபமாக உள்ளத்தை உருக்கும் காட்சியாக இருந்தது.
நாயாக இருந்தாலும், அந்த இளைஞர்களுக்கு அந்தத் தாய்நாயைப் பார்க்கும் போது பெண்நாயாக மட்டுமே பார்க்க முடிந்திருக்கிறது. அதனால் தான் அதைப் பழிவாங்கும் எண்ணத்தில் பிறந்து சிலமணி நேரங்களே ஆகியிருந்த பிஞ்சு நாய்க்குட்டிகளை கொன்று வெறியை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நல்லவர்கள் பெருக வேண்டும். நல்லவை செழிக்க வேண்டும். நற் செயல்கள் செய்பவர்கள் இணைய வேண்டும். அப்போதுதான் தீயவை குறைய கொஞ்சமாவது வாய்ப்பு உண்டாகும்.
சில தினங்களுக்கு முன்னர் 70 வயதை நெருங்கும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ஒரு தொழில்நுட்ப உதவிக்காக என்னைத் தொடர்பு கொண்டார். பேசிக்கொண்டிருந்தபோது பத்திரிகை துறையில் அவரது பல நண்பர்களை நினைவு கூர்ந்து அவர்களது பண்புகளைப் புகழ்ந்து பேசினார்.
ஒரு நாள் அவர் நண்பர் ஒருவரை சந்திக்க ஒரு பத்திரிகை அலுவலகத்துக்கு சென்ற போது தன்னுடைய ஜூனியர் ஒருவர் எதேச்சையாக தன்னைப் பார்த்தவுடன் தன்னுடைய இருப்பிடத்திலிருந்து எழுந்து வந்து வரவேற்று உபசரித்து அன்புடன் பேசி நலன் விசாரித்தார். இந்த நிகழ்ச்சி தனக்கு இன்னமும் நெகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
இப்படி பலரது செய்கைகள் நமக்கு நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதை நாமும் பல நேரங்களில் உணர்ந்திருப்போம்.
‘நான் ஒரு கல்யாணத்துக்குச் சென்றபோது வயது முதிர்ந்த ஒரு மாமி என்னை இனம் கண்டுகொண்டு என்னிடம் வந்து செளக்கியமா என விசாரித்தார்… அந்த மாமி பாவம் கால் நடக்க முடியாமல் நடந்து வந்து பேசியது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது… நம் மீது இவ்வளவு அன்பா என சந்தோஷமாக இருந்தது…’
‘வழக்கமாகச் செல்லும் அந்த காய்கறி அங்காடியில் பழம் விற்கும் பையன் என் விருப்பம் அறிந்து நல்ல பழமாக எடுத்து அவனே ஒரு பையில் போட்டு உதவியது எனக்கு ஒரு சந்தோஷம்…’
‘ஒரு கோயிலுக்குச் சென்றபோது அந்தக் கோயிலில் தீபாரதனை காண்பித்துக்கொண்டிருந்தார்கள்…. நான் வாசலில் இருந்து ஓடி வருவதை கவனித்த குருக்கள் எனக்காக காத்திருந்து எனக்கு விபூதி குங்குமம் அளித்ததை நான் ரொம்ப ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்…’
‘ஆட்டோ டிரைவர் ஒருவர் நான் அவர் ஆட்டோவில் ஏறியதில் இருந்தே பதட்டமாக இருப்பதை கவனித்துவிட்டு ஏனம்மா இந்தப் பதட்டம்… பதட்டமா இருந்தா நினைச்சத செய்ய முடியாது… கொஞ்சம் பொறுமையா இருங்க… எல்லாம் நல்லபடியா நடக்கும்… என்று ஆறுதலாகப் பேசியபோது பிரச்சனையின் வலி பாதியாகிவிட்டது. எத்தனை நல்ல குணமுள்ள ஆட்டோ டிரைவர்…’
இப்படியான செய்கைகளையும், வார்த்தை உபசரிப்புகளையும் எங்கோ ஓரிரு இடங்களில்தான் இன்று காணமுடிகிறது.
ஒரு சின்ன பாசிட்டிவான வார்த்தை, மரியாதைக்குரிய செயல்பாடு அன்று முழுவதும் நாம் செய்கின்ற பணிகளுக்கு ஊக்கம் அளிப்பதை பல நேரங்களில் உணர்ந்திருப்போம். இதுபோன்ற சந்தோஷங்களை நாம் பிறருக்கும் அளிப்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டாமே!
ஒருசில பாசிட்டிவான அனுபவங்கள் பாடல்களின் பின்னணி இசை போல நம் மனதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்து வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக நம்மை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும்.
எப்படி சின்னச் சின்ன சந்தோஷ நினைவுகள் வாழ்நாள் முழுவதும் நம் நினைவில் நின்று நம்மை மகிழ்விக்கிறதோ, அதுபோலதான் வருந்தத்தக்க நினைவுகளும் நம் மனதை நெருடலாகவே உறுத்திக்கொண்டிருக்கும். எப்போதும் அது குறித்தே சிந்திக்கவில்லை என்றாலும்கூட அந்த அனுபவத்தை ஒத்த அனுபவங்களை எதிர்கொள்ளும்போது அந்த நினைவுகள் வந்து அச்சுறுத்தும். பாதுகாப்பாக பயணிக்க அந்த அச்சுறுத்தல்கூட அவசியம்தானே!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
February 14, 2020
சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’ மாத பத்திரிகையில் (பிப்ரவரி 2020)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 11
புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி பிப்ரவரி 2020