ஹலோ With காம்கேர் -62: நம் வயதைவிட இளமையாக தெரிவது மகிழ்ச்சியா இடையூறா?

ஹலோ with காம்கேர் – 62
March 2, 2020

கேள்வி:   நம் வயதைவிட இளமையாக தெரிவது மகிழ்ச்சியா இடையூறா?

எல்லோருக்குமே தாங்கள் இளமையாக தெரிய வேண்டும் என்பதுதான்  விருப்பமாக இருக்கும். பலர் இதற்காகவே பிரயத்தனப்பட்டு மேக் அப் எல்லாம் போட்டுக்கொள்வார்கள். தங்களை திருத்தமாக நன்றாக வெளிப்படுத்திக்கொள்வற்காக அலங்கரித்துக்கொள்வது நல்ல விஷயம்தான். உளவியல் ரீதியாகப் பார்த்தால் அது உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் ஆரோக்கியமானதும் கூட.

இப்படி எப்போதுமே தங்களை புத்துணர்வாக வைத்துக்கொள்பவர்கள் நல்ல குணநலத்துடனும் இருந்துவிட்டால் அவர்களிடம் இருந்து நேர்மறை எண்ணங்கள் பிரவாகமாக பொங்கி வழியும்.

சில வருடங்களுக்கு முன்னர் என்னிடம் பணிபுரிந்துகொண்டிருந்த ஒரு புரோகிராமர் பிறந்த நாள் திருமண நாள் என்றில்லாமல் அவ்வப்பொழுது புது சட்டை அணிந்து வருவார். அவர்தான் டீம் லீடர். 30 வயது. அவருடைய புதுடிரஸ் லாஜிக் குறித்து கேட்டறிந்தேன்.

‘வீட்டில் மனைவியுடனோ அல்லது பெற்றோருடனோ ஏதேனும் மனஸ்தாபம் என்றால் அதே மனநிலையில் அலுவலகம் வந்தால் வேலையில் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் வாங்கி வைத்திருக்கும் புது சட்டையில் ஒன்றை ரிலீஸ் செய்துவிடுவேன். இப்படி புது சட்டை போட்டுக்கொண்டு இன் செய்துகொண்டு ட்ரிம்மாக வரும்போது மனதில் உள்ள பிரச்சனை தூரமாக தள்ளி செல்கிறது. முன்பு போலவா தீபாவளி பொங்கலுக்கு மட்டும் புத்தாடை என்பதற்கு,  இப்போதெல்லாம் ஐந்தாறு புது சட்டைகள் கைவசம் இருப்பதால் அவ்வப்பொழுது இப்படி சோர்வான மனநிலை உள்ள நாளில் போட்டுக்கொள்கிறேன்…’ என்றார்.

இவரது உளவியல் சிந்தனை நன்றாக இருக்கிறதல்லவா?

அவரவர்கள் வீட்டில் பிரச்சனை என்றால் மது, சிகரெட் என சென்றுகொண்டிருக்கும் காலகட்டத்தில் புதுசட்டை அணிந்து பிரச்சனையை தள்ளிவைப்பவரது லாஜிக் அசர வைத்தது.

ஒரு சிலர் தாங்கள் இளமையாக தெரியவேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு அலங்கரித்துக்கொள்வார்கள். ஆனால் ஒருசிலரோ அலங்கரிப்புகள் எதுவுமே இன்றி மிக எளிமையாக இருப்பார்கள். துறுதுறுவென சுறுசுறுப்பாய் வளைய வருவார்கள். அவர்களின் வயதை கணிக்கவே முடியாது. மரபியல் ரீதியாக குடும்ப ஜீன் அமைப்பியல் காரணமாக வயது குறைவாக தெரிவது வரம்தான் என்றாலும் பல இடங்களில் சற்று தொந்திரவாகவே இருக்கும்.

பஸ் ரயில்களில் பிரயாணம் செய்யும்போது நம்மைவிட எட்டு பத்து வயது குறைந்தவர்கள்கூட‘கொஞ்சம் இடம் கொடுங்களேன் வயசானவன்(ள்)’ என்று இடம் கேட்பதையும்,  ‘நான் வயசானவன்(ள்) பர்த்தில் ஏற முடியாது, நீங்கள் அப்பர் பர்த்தில் படுத்துக்கொள்கிறீர்களா’ என்று உதவி கேட்பதையும் தவிர்க்கவே முடியாது.

நம்மைவிட வயதில் குறைந்தவர்கள்கூட சட்டென உரிமையில் பெயர் சொல்லி அழைப்பதும், நீ வா போ என்றழைக்கும் போதும் முதலில் சங்கடமாகத்தான் இருக்கும்.

நாம் ஏதேனும் அவர்கள் கற்பனைக்கு மாறாக பேசிவிட்டால் இந்த காலத்து இளைஞர்களே இப்படித்தான் என நம்மை இன்றைய இளம்தலைமுறையினருடன் ஒப்பிட்டு தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இப்படி பேசுபவர்கள் நம்மைவிட வயதில் குறைந்தவர்களாகவோ அல்லது சகவயதினராகவோ இருப்பதுதான் நகைச்சுவை.

வயதில் குறைவாக தெரிவது ஒரு பிரச்சனை என்றால் வயது அதிகமாக தெரிவது அதைவிட பெரிய பிரச்சனை. சக வயதினர் ஆண்ட்டி என்றோ, அங்கிள் என்றோ அழைக்கும்போது எத்தனை மன உளைச்சலாக இருக்கும் என்பதை அவரவர்களை கேட்டால்தான் தெரியும்.

இதற்காக ஒவ்வொருவரிடமும் நம் வயதை சொல்லிக்கொண்டிருக்க முடியாதுதானே.

இதனால்தான் நான் ஒரு பாலிஸியை வைத்துள்ளேன். பள்ளி கல்லூரி  மாணவர்களை தவிர எல்லோரையுமே சார், மேடம் சொல்லி அழைப்பது சவுகர்யமாக உள்ளது. இன்னும் கொஞ்சம் பர்சனலாக இருக்க வேண்டும் என்றால் அவரவர்கள் பெயருடன் சேர்த்து சார் மேடம். சவுந்தர்யா மேடம், ரமேஷ் சார் இப்படி.

இப்போதெல்லாம் ஜி போடுகிறார்கள். சாரோ, மேடமோ, ஜியோ மனதில் உள்ள மரியாதையை அழைக்கும் வார்தையிலும் வெளிப்படுத்தினால் கூடுதல் சிறப்புதானே.

ஐடி துறையில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையுமே பெயர் சொல்லி அழைப்பது வழக்கம். ஆனால் என் நிறுவனத்தில் சார், மேடம், ஜி எது சவுகர்யமோ அதை அவரவர்கள் பயன்படுத்தலாம் என்பதுதான் 27 வருடங்களாக நான் வலியுறுத்தி வரும் விஷயம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon