ஹலோ With காம்கேர் -61: சில விஷயங்களில் சோம்பேறித்தனமாக இருப்பதில் தவறில்லை. ஏன் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 61
March 1, 2020

கேள்வி:   சில விஷயங்களில் சோம்பேறித்தனமாக இருப்பதில் தவறில்லை. ஏன் தெரியுமா?

என் எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசிக்கும் பலரும்  என்னிடம் பேசுகின்ற சந்தர்பங்களில் ‘உங்கள் எழுத்துக்களில் உங்கள் தைரியம் வெளிப்படுகிறது’ என்பதை சொல்லாமல் விடுவதில்லை. நேற்று முன்தினம் என்னுடன் பேசிய வங்கி அதிகாரி ஒருவரும் இதையே சொன்னார். ‘அப்படியா, எதை வைத்து சொல்கிறீர்கள்? என எத்தனை முறை பதில் கிடைத்தாலும் அலுக்காத கேள்வியை அவரிடமும் கேட்டேன்.

ஒரு பதிவில் ‘எனக்கு என்ன விருது கிடைக்க வேண்டும், எப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைத்தால் நான் நிம்மதியாக வாழ முடியும் என்பதை நான்தான் முடிவெடுக்க வேண்டும்.

ஏராளமான விருதுகள் வாங்கி அடுக்கியாயிற்று. என்னை நோக்கி வரும் அத்தனையையும் நான் பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்கின்ற அவஸ்தை எனக்குள் என்றுமே இருந்ததில்லை.

இப்போதெல்லாம் இளம் தலைமுறையினருக்கு விருதளியுங்கள் என சொல்லி வழிவிடுகிறேன். இப்படி நான் நிராகரிக்கும் விருதுகளும், அங்கீகராங்களும்தான் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் நான் பிறருக்கு விருது கொடுக்கும் அளவுக்கு என் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொண்டுள்ளேன். வருடா வருடம் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து ஸ்ரீபத்மகிருஷ் விருதளித்து சிறப்பிக்கிறேன்’ என்று எழுதியிருந்ததை குறிப்பிட்டு இப்படிச் சொல்வதற்கு எத்தனை மனவலிமை இருக்க வேண்டும் என்று வியந்தார்.

அவர் சொன்ன பிறகு நானும் திரும்பத் திரும்ப இந்த வரிகளை படித்துப் பார்த்தேன். எதுவும் புதுமையாக தோன்றவில்லை. காரணம் என்னை அப்படியே வெளிப்படுத்தியுள்ள எழுத்தாக இருப்பதால் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

ஒருவேளை நான் விருதுக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கிக்கொண்டிருக்கும் பெண்ணாக இருந்து வெளி வேஷத்துக்காக இப்படி பதில் சொல்லி இருந்தால் ஏதேனும் வித்தியாசத்தை உணர்ந்திருப்பேனோ என்னவோ.

பொதுவாகவே எழுதுவதற்கு ஒரு முகம் வாழ்வதற்கு ஒரு முகம் என வெவ்வேறு முகங்களை வைத்துக்கொள்வதில்லை. காரணம் சோம்பேறித்தனம்தான்.

மனதுக்குள் வெவ்வேறு முகங்களை வைத்துக்கொள்ளும்போது ஒவ்வொரு முகத்துக்கும் தனித்தனியாக ‘மேக் அப்’ போட வேண்டும். அதற்கு நேரமும் இல்லை. பிடிக்கவும் இல்லை. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான பண்புடனும், குணாதிசயங்களுடனும், ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ளும்போது இயல்பாக இருக்க முடிகிறது. சட்சட்டென மேக் அப்பை கலைத்துவிட்டு புதிதாக வேறு மேக் அப் போட வேண்டிய அவசியம் இல்லாததால் மனதில் பதட்டமோ குழப்பமோ இல்லாமல் தெளிவாக வாழ முடிகிறது. மன அழுத்தம் ஏற்படுவதில்லை. தெளிவான மனநிலையே ஆரோக்கியமான உடலுக்கு அச்சாரம்.

சோம்பேறித்தனம் கூடாதுதான். ஆனால் சில விஷயங்களில் சோம்பேறித்தனம் மிக அவசியம். குறிப்பாக எண்ணம் சொல் செயல் இவை மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றால் வெவ்வேறு முகங்களை பராமரிப்பதில் சோம்பேறித்தனம் இருந்துத்தான் ஆகவேண்டும்.

எண்ணம் ஒன்று, சொல் மற்றொன்று, செயல் இந்த இரண்டும் இல்லாமல் வேறொன்று என வாழ்பவர்கள் தங்கள் முகங்களை பராமரிக்க எத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். எங்கேனும் அவர்கள் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டால் ‘மேக் அப்’ கலைந்த அந்த முகம் காண கொடூரமாக அல்லவா இருக்கும்.

எனவேதான் சொல்கிறேன் சில விஷயங்களில் சோம்பேறியாக இருங்கள். தவறில்லை. குறிப்பாக காரியம் ஆக வேண்டும் என்பதற்காகவும் உங்களுக்கு ஒரு இமேஜ் உருவாக வேண்டும் என்பதற்காகவும் ஆளுக்குத் தகுந்தாற்போல் மாறி மாறி  உங்கள் மனதுக்கு ‘மேக் அப்’ போடுவதில் சோம்பேறியாகவே இருங்கள்.

மனதுக்கு மேக் அப் போடுவதில் சோம்பேறியாக இருந்துவிட்டால் எல்லா இடங்களிலும் உங்கள் இயல்புடனேயே வளைய வர முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணி.

சோம்பலும் நல்லதே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon