ஹலோ with காம்கேர் – 85
March 25, 2020
கேள்வி: சொல்லத் தவறிய நன்றியையும், கேட்கத் தவறிய மன்னிப்பையும் இப்போது கேட்கலாமா?
நேற்று பகல் முழுவதும் லேப்டாப், அலுவலகப் பணிகள், டிவி, கொரோனா செய்திகள் கலந்துரையாடல்கள், அப்பா அம்மாவுடன் நாட்டு நடப்பு குறித்து விரிவான அலசல்.
இடையிடையில் கொரோனா வைரஸ் குறித்து சீனியர் மருத்துவர்கள் பலரின் வீடியோக்களை பார்த்தேன். அவரவர்கள் பாணியில் பேசியிருந்தாலும் அவர்கள் பேசியதன் ஒட்டு மொத்த சாராம்சம் ஒன்றாகவே இருந்தன.
‘கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் 80 சதவிகிதம் பிழைத்துக்கொள்வார்கள். அப்படி தப்பித்தவர்கள் மீதியுள்ள 20 சதவிகிதத்தினருக்கு அந்த நோய் தொற்றை பரப்பிவிட்டே செல்வார்கள். அந்த 20 சதவிகிதத்தினரில் உங்களைப் பெற்றவர்களும், உங்கள் குழந்தைகளும் இல்லாதவாறு இருக்க வேண்டுமானால் Break the Link எனப்படும் லாஜிக்கை கடைபிடியுங்கள். முழுமையாக உங்களை வீட்டடைப்பு செய்துகொள்ளுங்கள்’ என்று வேண்டி கெஞ்சிக் கேட்கிறார்கள். பேசுகின்ற மருத்துவர்களின் கண்களில் தூக்கக் கலக்கமும் சோர்வும் அவர்கள் பணி மீது மரியாதையை உண்டு செய்தன.
நம்மால் நேரடியாக எந்த உதவியையும் செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமலாவது இருக்கலாமே. குறைந்தபட்சம் நம்மையும் நம் குடும்பத்தையும் காத்துக்கொள்ளவாவது ஒத்துழைப்போம்.
வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தது கொஞ்சம் சோர்வாக இருந்ததால் மாலை 5.30 மணிக்கு மொட்டை மாடியில் கொஞ்ச நேரம் வாக்கிங் செல்லலாம் என சென்றிருந்தேன்.
செம்பிழம்பாக சூரியன் மறையும் அழகு காட்சியின் பின்னணியில் எங்கள் இருப்பிடத்தில் இருந்து 150, 200 அடி தொலைவில் உள்ள ஒரு குடியிருப்பில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு பேர் நடந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் என்னை நோக்கிய திசையில் நடப்பது சூரியனில் இருந்தே வெளியே வருவது போலவும், எதிர் திசையில் நடப்பது சூரியனுக்கு உள்ளே செல்வதும்போலவும் அத்தனை ரம்யமாக இருந்தது. புகைப்படம் எடுத்தேன். அதையே இன்றைய பதிவுக்கான புகைப்படமாக்கியுள்ளேன்.
இரவு 7 மணிக்கு மேல் இரண்டு முக்கிய போன் அழைப்புகள்.
முதல் அழைப்பு எங்கள் நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவில் மொழிபெயர்ப்பாளராக பணி புரிந்தவரிடம் இருந்து. வீட்டுச் சூழல் காரணமாக சில வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். 65+ வயது பெண்மணி. பரஸ்பர நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘உங்களால்தான் நான் வாழ்க்கையில் நம்பிக்கைப் பெற்றேன், 50 வயதுக்கு மேல் என்னுடைய திறமையை நானே அறிந்து கொள்ளச் செய்து அவற்றை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் நீங்கள்தான். எத்தனை பெரிய பரந்த மனப்பான்மை உங்களுக்கு…’ என கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். ‘என்னாச்சு மேடம்… ஏன் இவ்வளவு டென்ஷனாக இருக்கிறீர்கள்’ என கேட்டேன். ‘இனி வரும் காலம் எப்படி இருக்கப் போகிறதோ தெரியவில்லை. அதற்குள் பேச நினைப்பவர்களுடன் பேசலாம் என தோன்றியதால் போனில் அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறேன்…’ என்று சொன்னவர் மீது மரியாதை கூடியது.
இரண்டாவது அழைப்பு பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவரிடம் இருந்து. அவர் பி.ஹெச்டி செய்துகொண்டிருக்கிறார். அவருடைய உரையாடலும் கிட்டத்தட்ட நன்றி தெரிவிக்கும் விதமாகவே இருந்தது. ‘மேடம் நீங்கள் தயாரித்துக்கொடுத்த சாஃப்ட்வேர்தான் எங்களைப் போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது… கம்ப்யூட்டரிலும் மொபைலிலும் எழுதவும் படிக்கவும் முடிகிறது. என் வாழ்க்கையில் உங்களை மறக்கவே முடியாது…’ என்று குரல் தழுதழுக்கப் பேசினார். இவரிடமும் ஏன் இத்தனை உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என கேட்டபோது ‘நன்றி சொல்ல வேண்டியவர்களுக்கு நன்றியும் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பும் கேட்கத் தோன்றியது. அதனால்தான்…’ என்றார்.
கொரோனா நம் மக்கள் மனதை நேர்மறையாக சலவை செய்துகொண்டிருப்பதை உணர முடிந்தது.
நேற்றைய பொழுது இப்படியாக!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software