ஹலோ With காம்கேர் -86:  21 நாட்கள் வீட்டடைப்பு சுகமா சுமையா?

ஹலோ with காம்கேர் – 86
March 26, 2020

கேள்வி:  21 நாட்கள் வீட்டடைப்பு சுகமா சுமையா?

பள்ளி மாணவர்கள் விடுமுறை தினங்களை எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என திட்டமிடுவதை பார்த்திருப்பீர்கள். காலையில் சீக்கிரம் எழுந்து படிக்க வேண்டாம். நிறைய நேரம் தூங்கலாம். அம்மாவிடம் நமக்குப் பிடித்த தின்பண்டங்கள் செய்துதரச் சொல்லி சாப்பிடலாம். எப்போதுமே விளையாடிக்கொண்டிருக்கலாம் இப்படி விடுமுறைக்கால பட்டியல் நீளமாக இருக்கும். ஏன் நம்முடைய இளம் வயதில் நாமும் அப்படித்தானே இருந்தோம்.

ஆனால் நடைமுறையில் அந்தப் பட்டியலில் பத்து சதவிகிதமாவது செயல்படுத்த முடிகிறதா என்று பார்த்தால் இல்லை என்ற பதிலே கிடைக்கும். விடுமுறை தினங்களில்தான் விடியற்காலையிலேயே நன்கு விழிப்பு வந்துவிடும். முதல் சில நாட்கள் அதிகாலை விழிப்பும், நாள் முழுவதும் விளையாட்டும், இஷ்டப்பட்ட நேரத்தில் விருப்பப்படும் உணவை சாப்பிடுவது என ஒரே கொண்டாடமாகவே செல்லும். நாட்கள் செல்லச் செல்ல எல்லாமே வெறுமையாகும். போரடிக்கும். காரணமே இல்லாமல் கோபம் வரும்.

அப்பா அம்மாவுடன் சண்டை, உடன் பிறந்தவர்களுடன் சச்சரவுகள், வெளியே சென்று விளையாடும்போது நண்பர்களுடன் அடிதடி என கற்பனை செய்து வைத்திருந்த கனவு நாட்கள் யுத்த களமாக மாறிவிடும். இதுதான் யதார்த்தம்.

இதே நிலைதான் இன்று கொரோனா கொடுத்திருக்கும் 21 நாட்கள் வீட்டடைப்பிலும்.

21 நாட்களில் நான் நிறைய படிக்கப் போகிறேன், எழுத ஆரம்பிக்கப் போகிறேன், நிறைய சினிமா பார்க்கப் போகிறேன், வீடியோக்களை நிறைய உருவாக்கி யு-டியூபில் அப்லோட் செய்யப் போகிறேன் என்று ஒவ்வொருவரும் வைத்திருக்கும் பட்டியலின் நீளம் அதிகம்தான்.

முதல் நான்கைந்து நாட்கள் விடுமுறை தின கொண்டாட்டம்போல் லேட்டாக எழுந்துகொள்வது, டிவி பார்ப்பது சாப்பிடுவது, வாட்ஸ் அப் ஃபேஸ்புக் டிவிட்டர் என சமூக வலைதளங்களில் மூழ்குவது, வேண்டுமோ வேண்டாமோ வாங்கி வைத்திருக்கும் தின்பண்டங்களை கொறித்துக்கொண்டே இருப்பது, மறுபடி ஏதேனும் டிவி, இரவு கண்விழித்து சினிமா பார்ப்பது என களிப்பு மனநிலையில் ஓடிவிடும்.

அவரவர்கள் வைத்திருக்கும் பட்டியலில் இருந்து ஏதேனும் செய்ய ஆரம்பிக்கலாம் என நினைக்கும்போது இன்னும் ஒருநாள் என்ஜாய் செய்துவிட்டு தொடங்கலாம் என கொண்டாட்டம் தொடரும்.

நாம் படிக்க நினைக்கும் புத்தகங்களை அருகில் எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிக்கலாம் என்றால் படிக்க மனம் வராது. கொட்டாவி மட்டுமே வரும். புத்தகம் படிப்பவர்கள் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டும் இ-புத்தகம் வாசிப்பவர்கள் ஐபேட் அல்லது ஐபேடில் அதை திறந்து வைத்துக்கொண்டும் டிவியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பர்.

புதிதாக எழுத ஆரம்பிக்கப் போகிறேன் என நினைப்பவர்கள் ஒரே ஒரு பக்கம் எழுதுவதற்குள் வீட்டில் குக்கர் சப்தம், குழந்தைகளின் பஞ்சாயத்து என  ‘ஆடத் தெரியாதவருக்கு கூடம் கோணல்’ என்ற மனோபாவம் ஒட்டிக்கொள்ள வார்த்தைகள் அப்படியே மலங்க மலங்க விழித்துக்கொண்டு தட்டுத்தடுமாறும்.

வீடியோ எடுத்து யு-டியூபில் பதிவேற்றலாம் என்றால் வீட்டுக்குள் வெளிச்சம் இல்லை மொட்டைமாடி செல்ல வேண்டும் என்ற சோம்பலில் அந்த எண்ணமும் முடங்கிக்கொள்ளும்.

இப்படியாக விடுமுறை தினப்பட்டியலில் உள்ள எந்த ஒரு விஷயமும் முழுமை பெறாது. ஒரு சிலருக்கு தொடங்கப் பெறவே பெறாது.

ஆக அடுத்த நான்கைந்து நாட்கள் இப்படி பரிசோதனை முயற்சியிலேயே கடந்துவிடும்.

எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது, சினிமா பார்ப்பது. மனம் வெறுமையாகி  இருப்போரிடம் எரிந்து விழுதல், குழந்தைகளிடம் கோபப்படுதல் என விரக்தியான மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

ஒரு கட்டத்தில் வீட்டில் இன்னும் எப்படி அடைந்து கிடக்க வேண்டியிருக்கும், இதுதான் வாழ்க்கையா, இது இப்படியே முடிந்துவிடுமா என்ற பயம்கூட ஒருசிலருக்கு வரும்.

சரி எப்படித்தான் இந்த வீட்டடைப்பு காலத்தைக் கடப்பது என பார்ப்போம்.

ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் பிசியாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்கிறோமோ அதை மட்டுமே ஓய்வாக இருக்கும்போதும் செய்ய முடியும். என்ன அவற்றை இன்னும் கொஞ்சம் கூடுதலாக செய்ய முடியும் அவ்வளவே. பிசியாக இருக்கும்போது நிறைய வேலைகள் செய்து முடிக்கும் நாம் ஓய்வாக இருக்கும்போது நமக்குள் ஒட்டிக்கொள்ளும் சோம்பல் சாதாரண சிறிய வேலையைக் கூட செய்யவிடாமல் முடக்கிப் போடும். இதனால் ஓய்வாக இருக்கும்போது, விடுமுறை தினங்களின்போது செய்யலாம் என நாம் வைத்திருக்கும் பணிகள் எதுவுமே முழுமைபெறாது.

எனவே, செய்ய வேண்டும் என நினைக்கும் முக்கியப் பணிகளை, கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயங்களை, முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணும் செயல்களை நீங்கள் பிசியாக இருக்கும் காலகட்டத்திலேயே முயற்சித்துப் பார்த்து சிறிய அளவில் செயல்படுத்த ஆரம்பித்து  வைத்திருந்தால் மட்டுமே அந்த அனுபவம் ஓய்வாக இருக்கும் காலகட்டத்தில் கைகொடுக்கும். ஏற்கெனவே புள்ளி வைத்து ஆரம்பித்த அந்த விஷயங்களை தொடர்வதற்கான வழி கிடைக்கும்.

உங்களுக்கு என்ன பிடிக்குமோ என்ன தெரியுமோ அதை மனநிறைவுடன் செய்யுங்கள். கூடுதல் நேரம் எடுத்து செய்யுங்கள். மெதுவாக செய்யுங்கள். ஓரிரு நாட்களில் எல்லாவற்றையும் முயற்சித்துவிட்டு பின் வரும் நாட்களை வெறுமையாக கழிக்க வேண்டாம்.

ஒன்றை சொல்ல மறந்துவிட்டேனே…

வீட்டில் வேலை செய்து பழக்கம் இல்லாத கணவனை வைத்திருக்கும் மனைவிகளுக்கு குழந்தைகளுடன் இந்த வீட்டடைப்பு தினங்கள் கூடுதல் சுமைதான். பள்ளி நாட்களில் அனைவருக்கும் காலை டிபன், மதிய சாப்பாடு என்பதெல்லாம் 8 மணிக்குள் முடித்து தானும் வேலைக்குக் கிளம்பிவிட்டால் மறுபடி வீட்டு வேலை மாலை 6 மணிக்கு மேல்தான்.

ஆனால் இந்த வீட்டடைப்பு தினங்களில் 24 மணி நேரமும் வீட்டு வேலைதான். வீட்டிலேயே அடைந்து கிடக்கும் குழந்தைகள் எத்தனை நேரம்தான் விளையாடுவார்கள், டிவி பார்ப்பார்கள், மொபைல் போனில் கேம்ஸில் மூழ்கி இருப்பார்கள். அவர்களுக்கு அவ்வப்பொழுது தின்பண்டங்கள் செய்து தர வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கேட்பார்கள். தயார் செய்ய வேண்டும். வேலைக்கு வரும் பணிப்பெண்ணையும் வர வேண்டாம் என சொல்லிவிடுவதால் பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், காய்ந்த துணிகளை மடித்துவைத்தல், வீடு பெருக்குதல், துடைத்தல் இப்படி வழக்கத்தைவிட பலமடங்கு வேலைதான்.

இதற்கிடையில் லேப்டாப்பிலும் Work From Home என வேலை செய்துகொண்டே டிவி பார்க்கும் கணவன் மீது எரிச்சல் அதிகமாகும். வேளா வேலைக்கு காபி, டீ, ஜூஸ் என சப்ளை செய்வது ஆத்திரத்தை உண்டாக்கும். சாதாரணமாக பேசுவதே கோபத்தில் கத்துவதைப் போல இருக்கும். மொத்தத்தில் பயித்தியம் பிடித்து மண்டையை பிய்த்துக்கொள்ளலாம் போல் இருக்கும்.

இதற்கிடையில் அவர்களும் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு Work From Home – க்காக லாகின் செய்து ஆஃபீஸ் வேலையையும் பார்க்க வேண்டும்.

எத்தனை விடுமுறை தினங்கள் வந்தாலும் வீட்டுப் பொறுப்பை பகிர்ந்துகொள்ளாத பொறுப்பில்லாத கணவனை வைத்திருக்கும் பெண்களுக்கு என்னவோ வழக்கமான நாட்களைவிட வீட்டடைப்பு தினங்கள் கொடுமையானதுதான்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 48 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon