ஹலோ with காம்கேர் – 92
April 1, 2020
கேள்வி: டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ?
ஃபேஸ்புக்கிலேயே பணியாற்றுகிறாரோ என்று எண்ணும் அளவுக்கு மணிக்கு ஒரு பதிவெழுதும் ஒரு பெண் நேற்று தொழில்நுட்ப ஆலோசனை ஒன்றுக்காக என்னுடன் போனில் பேசியபோது தான் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியே வந்துவிட்டதாகக் கூறினார்.
அவர் சொன்ன காரணம், ஃபேஸ்புக்கில் ஏதேனும் அவர் எழுதி ஒரு பதிவு போட்டால் அதன் பிறகு அதற்கு வரும் லைக் மற்றும் கமெண்ட்டுகளிலேயே கவனம் சென்றுவிடுவதாகவும், அவருக்கு தெரிந்தவரோ அல்லது நண்பர்களோ லைக் போடவில்லை எனில் அது குறித்தே மனம் யோசனையில் ஆழ்வதாகவும், அவர் ஏன் என் பதிவுக்கு லைக் போடாமல் மற்றவர்கள் பதிவுகளுக்கு லைக் போட்டிருக்கிறார் கமெண்ட் செய்திருக்கிறார் என மனம் அமைதி இழப்பதாகவும் சொன்னார்.
ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர் பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து ரசிப்பார்கள். ஆனால் லைக்கும் கமெண்டும் போடுவதற்கு தயங்கி கடந்து செல்வார்கள்.
உண்மையைச் சொன்னால் தினமும் விடியற்காலையில் நான் எழுதும் இந்த நாள் இனிய நாள் வாழ்த்துப் பதிவுகளை படிப்பவர்கள் தோராயமாக 500 பேர் இருப்பார்கள். அதற்கு மேலும் இருக்கலாம். ஆனால் அத்தனைபேரும் லைக்கும் கமெண்ட்டும் போடுவதில்லை.
ஃபேஸ்புக் ‘லைக்’பிரச்சனை எல்லா வயதினருக்குமான Facebook Sick. இந்த நோய்க்கு மருந்து கர்மயோக மனநிலை. இந்த மனோபாவத்தைப் பெற முடியாவிட்டால் மனநிலை மருத்துவமனை செல்லும் அளவுக்கு நோயின் தீவிரம் கூடுவது நிச்சயம்.
கிட்டத்தட்ட அத்தனையும் ஆன்லைன் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் நம் மக்களும் டிஜிட்டல் உலகுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். சாலையோர காய்கறி கடைகளில் கூட பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்த முடிகின்ற அளவுக்கு சூழல் ஏற்பட்டு தொழில்நுட்பத்துக்கு படித்தவர் படிக்காதவர் என அனைவருமே பரிச்சயமாகி வெகுநாட்களாகின்றன. கூகுள் மேப்பும், ஜிபிஎஸ்ஸும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழிகாட்ட ஐந்தாம் வகுப்பைக்கூட தாண்டாத ஆட்டோ கார் டிரைவர்கள்கூட சந்துபொந்துக்களில் நுழைந்து புகுந்து புறப்பட்டு எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் வீட்டை கண்டுபிடித்து நம்மை கொண்டு நிறுத்திவிடுகிறார்கள். மொபைல் சிக்னல்கூட தொடர்ச்சியாக கிடைக்காத ஒரு கிராமத்தில் உட்கார்ந்துகொண்டு சமூக வலைதளங்கள் மூலம் உலகையே வலம் வருகிறார்கள்.
ஆஹா, நாம் தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு முன்னேறிவிட்டோம் என பெருமைப்பட்டுக்கொண்டு தலை நிமிர்ந்தால் ‘அதெல்லாம் இல்லை, நாங்கள் அப்படியேத்தான் இருக்கிறோம்’ என ஆங்காங்கே ஆன்லைனில் மனித வக்கிரங்கள் தொடர்கின்றன.
டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கின்றோமோ என எண்ணும் அளவுக்கு டிஜிட்டல் உலகில் பலருக்கும் பலவிதமான மனச்சிக்கல்கள்.
கொஞ்சம் உற்று நோக்கினால் தெரியும். டிஜிட்டல் உலகத்திலும் நாம் உணர்வுப் பூர்வமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ‘நானெல்லாம் லைக்குகள் பற்றி கவலையே படமாட்டேன்பா’என்று வாய் சொன்னாலும் தங்களுக்கு அறிமுகமே இல்லாத நூறுபேர் லைக்குகள் போட்டிருந்தாலும் தங்களுக்குப் பிடித்தமான ஓரிருவர் லைக் போடவில்லை, கமெண்ட் செய்யவில்லை எனில் மனதளவில் வருந்துபவர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
தொழில்நுட்ப உலகத்தில் லைக் கமெண்ட் பாராட்டுகள் வாழ்த்துகள் நட்புகள் இவற்றையெல்லாம் ஜஸ்ட் லைக்தட் கடந்து செல்ல வேண்டும். ஆனால் அங்கு உணர்வு ரீதியாக சிந்தித்து குழப்பிக்கொண்டிருக்கிறோம்.
நிஜத்தில் அன்புடனும் பாசத்துடனும் சிநேகத்துடனும் பழக வேண்டும். ஆனால் அங்கு மனிதர்களையும் பிற உயிர்களையும் இயந்திரத்தனமாக கடந்து செல்கின்றோம். நேரில் பார்த்தால்கூட இறுகிய மனோபாவத்துடன் சிரிக்கவும் மறந்து ஒரு ஹலோ சொல்லவும் மனமில்லாமல் ஏதோ கோட்டையைப் பிடிப்பதைப்போல பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
மனிதர்களைப் பிணைக்கத்தான் தொழில்நுட்பம் உதவ வேண்டும். மாறாக தொழில்நுட்பத்தைப் பிணைக்கும் மனிதர்களே பரவலாக பெருகி வேரூன்றி விட்டார்கள்.
இது ஓர் ஆபத்தான முரண்.
இந்த முரணை சரி செய்யாதவரை தொழில்நுட்ப ரீதியாக எத்தனை வளர்ந்திருந்தாலும் அந்த வளர்ச்சியினால் பயனில்லை.
யோசிப்போம்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software